
காட்டில் இருந்த அந்த மரத்திற்கு எப்படியாவது விலங்காகிவிடவேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தான் தவமிருந்து முருகனை வணங்கினால் விலங்காகிவிடலாம் என எண்ணி தவத்தைத் தொடங்கியது. முருகனைச் சந்தித்தது. தன் விருப்பத்தைச் சொன்னது. முருகன் அருள் கொடுத்தான். மரம் விலங்கானது. அதன் வேர் வாலானது. தண்டு உடலானது. கிளைகள் கொம்பாயின. கனிகள் கண்களாயின. அது காட்டைச் சுற்றி வந்தது. எல்லா விலங்குகளும் அதனை விநோதமாகப் பார்த்தன. அது முழு விலங்காகவில்லை என்பது போலவும் அவை ஏளனப்படுத்தியது போலவும் மரம் நினைத்தது. மீண்டும் தவமிருந்தது. மீண்டும் முருகனைத் தரிசித்தது. குறையைச் சொன்னது. விலங்கின் எல்லா அம்சங்களையும் அருளினான் முருகன். மரத்திற்குத் திருப்தி வந்தது. காட்டை வலம் வந்தது. கொடூர விலங்குகள் மற்ற விலங்குகளை அடித்துக் கொல்வதைப் பார்த்தது. பெரும் துயருற்றது. மீண்டும் தவம். மீண்டும் முருகனின் தரிசனம். தனது ஆற்றலைப் பெருக்க வேண்டுதல் செய்தது. ஆற்றலும் வாய்த்தது. இப்போது காட்டை வலம் வருகையில் எந்தக் கொடூர விலங்கும் மற்ற விலங்குகளைக் கொல்லாதபடி தன் ஆற்றலால் தடுத்துவிட்டது. எல்லா விலங்குகளும் கனிகளை உண்டு பசியாறின. ஆனால் சில நாட்களில் கனிகளை உண்ட கொடூர விலங்குகள் சக்தி இல்லாமல் இறந்து போயின. மரத்திற்குப் பெரும் துயர் ஏற்பட்டது. மீண்டும் தவம். மீண்டும் முருகனின் தரிசனம். என்ன வரம் வேண்டும் என்றான் முருகன். தான் மற்ற விலங்குகளின் கண்களுக்கு மரமாகவும் தன் விருப்பதிற்கு ஏற்ப இதே விலங்காகவும் தொடர கேட்டு அந்த வரத்தைப் பெற்றது.
