இன்று கண்டிப்பாக மருத்துவரை../மனுஷ்ய புத்திரன்

இன்று கண்டிப்பாக மருத்துவரை பார்க்கவேண்டியிருந்தது. ட்ரைவர் இல்லை. என்னிடம் வேலைக்கு வரும் ட்ரைவர்களின் பிரச்சினை அவர்கள் நிறைய நேரம் சும்மா உட்கார்ந்திருப்பதுதான். நான் வெளியே வேலை இருந்தால் ஒழிய சும்மா எங்கும் போகிற ஆள் இல்லை. தேடிபோய் பார்க்கும் நண்பர்களும் இல்லை. ட்ரைவர்களுக்கு சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கவேண்டும். போரடித்து 6 மாதத்தில் நின்றுவிடுவார்கள். பே ட்ரைவர் செர்வீஸ்க்கு போன் செய்து பார்த்தேன். இன்று ட்ரைவர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஓலா புக் செய்தேன். ஒரு கார் வந்தது. டிக்கியில் வீல் சேர் வைக்க முடியவில்லை. SUV போன்ற பெரிய காரில் என்னால் ஏற இயலாது. ட்ரைவரிடம் வீல் சேரை மடித்து பின் சீட்டில் வைக்கலாம் என்றால் சீட் கிழிந்துவிடும் என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறார். வீல் சேரில் சீட்டைக் கிழிக்கும் எதுவுமே இல்லை என்பதை அவருக்கு விளக்க எவ்வளவோ முயன்றேன். அவரது மூளையால் அதைக் கிரஹித்துக்கொள்ள முடியவில்லை. வெறுத்துபோய் கேன்ஸல் செய்யும்படி சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன். பிறகு பதினைந்து நிமிடம் வண்டிக்காக முயற்சி செய்துகொண்டிருந்தேன். கிடைக்கவே இல்லை. உள்ளே வந்து ஆடை மாற்றிக்கொண்டி கோபி கிருஷ்ணனின் கதைகளை படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா? இந்த டாக்டரிடம் என் பிரச்சினை என்ன என்பதைப் புரியவைக்க இதோடு மூன்றுமுறை முயன்றுவிட்டேன். அந்த ஓலா ட்ரைவரைபோலத்தான் அவரும் இதை அணுகுகிறார். நான் போகவில்லை.

எப்போதும் ஏதோ ஒன்றைப்பற்றி புகார் செய்கிறேன் என்று நினைக்காதீர்கள். வாழ்வது வர வர மிகவும் கடினமாக இருக்கிறது. வாழ்வின் நடைமுறைகளுக்கும் எனக்குமான இடைவெளிகள் மிகவும் அதிகரித்துவிட்டன. என்னிடம் எல்லாம் இருப்பதாகத்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் தினமும் ஏதாவது ஒன்றினால் மனதாலோ உடலாலோ மிகவும் துன்புறுகிறேன். என்றாவது ஒரு நாள் நிம்மதியாக இருப்பேன் என்ற நம்பிக்கை மறைந்துகொண்டே வருகிறது. மிகவும் சலிப்பாக இருக்கிறது.

இத்தனைக்கும் ஹாஸ்பிட்டம் இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. நடையின் தூரம்.