போப் ஆண்டவரை சந்திக்க அண்ணாவுக்கு ஒரு முறை சந்தர்ப்பம்/வைகைச் செல்வன்

போப் ஆண்டவரை சந்திக்க அண்ணாவுக்கு ஒரு முறை சந்தர்ப்பம் வாய்த்தது. வாடிகன் சென்றார். போப் ஆண்டவருடன் பேச அண்ணாவுக்கு 5 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

போப்புடன் அண்ணா உரையாடினார். 5 நிமிடம் முடிந்தது. “நீங்கள் தொடர்ந்து பேசலாம்’’ என்று போப் ஆண்டவர் கூற அண்ணா உரையாடிக் கொண்டே இருந்தார்.

எவ்வளவு நேரம் தெரியுமா? 70 நிமிடங்கள். போப் திகைத்துப் போனார். தனது இருக்கையில் இருந்து போப் எழுந்து அண்ணாவை நோக்கி வருகிறார். வழக்கமாக போப் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து யாரையும் பார்க்கமாட்டார்.

விருந்தினர்தான் போப்பை அவரது இருக்கை அருகே சென்று பார்க்க வேண்டும். அது புரோட்டாகால். மரபு.

ஆனால் போப் ஆண்டவர் அண்ணாவைப் பார்த்து பேச தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தார். அண்ணாவின் பேச்சு அவரை பிரமிக்க வைத்திருந்தது.

அண்ணாவின் கைகளைப் பிடித்து பாராட்டினார். “உங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள்” என்றார். அண்ணா சொன்னார், “எனக்கு எதுவும் வேண்டாம். கோவா விடுதலைக்குப் போராடிய மைக்கேல் ரானடே என்ற போராளி போர்ச்சுகல் சிறையில் அடைபட்டு கிடக்கிறார். அவரை விடுதலை செய்ய நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்கிறார் அண்ணா. ரானடேக்கும், அண்ணாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆனாலும் போப்பிடம், ஒரு விடுதலை வீரனை விடுதலை செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்பாடு செய்வதாக போப் ஆண்டவர் உறுதி அளித்தார். ரானடேயை விடுதலை செய்ய இரு நாடுகள் இடையே கடித போக்குவரத்து நடந்தது.

ஒரு நாள் மைக்கேல் ரானடே விடுதலை செய்யப்படுகிறார். தனி விமானத்தில் டெல்லி அழைத்து வரப்படுகிறார்.

டெல்லி விமான நிலையத்தில் அவரை வரவேற்க பிரதமர் இந்திராகாந்தி முதல் நிறைய வி.ஐ.பி.க்கள் காத்திருக்கிறார்கள்.

விமானத்தில் இருந்து இறங்கிய ரானடே கேட்ட முதல் கேள்வி. “என்னை விடுதலை செய்ய காரணமாக இருந்த அண்ணா எங்கே?’’ வரவேற்க பூங்கொத்தோடு காத்திருந்த இந்திரா அதிர்ந்து போகிறார்.

மெதுவாக “அண்ணா இப்போது உயிருடன் இல்லை. அவர் சார்பில் உங்களை வரவேற்க நாஞ்சில் மனோகரன் வந்துள்ளார்’’ என்று இந்திரா கூற, ரானடே துடித்துப் போகிறார். கதறுகிறார்.

அவரை ஒருவாறு தேற்றி “நீங்கள் போர்ச்சுகல் செல்ல தனி விமானம் தயார்’’ என்று அவரிடம் சொல்லப்படுகிறது.

“அங்கே எனக்கு யார் இருக்கிறார்?’’ என கேட்ட ரானடே, “அண்ணா நினைவிடத்தையாவது பார்க்க வேண்டும்’’ என்று கதற, தனி விமானத்தில் அவர் சென்னை அழைத்து வரப்படுகிறார்.

விமான நிலையத்தில் இருந்து நேராக அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய பிறகே ரானடே ஆசுவாசமானார்.

அண்ணாவின் எழுத்தும், பேச்சும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதற்காக இந்த பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்” என்று முடித்தார் வைகைச் செல்வன்

(நன்றி  : முகநூல் பதிவு – ஆர்.கந்தசாமி )