
அப்பா கொடுத்தனுப்பிய கடிதத்தை அந்த போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தான் சிறுவன் ஆல்ஃப்ரட். வாங்கிப் படித்த அதிகாரி அவனை லாக்கப்பில் அடைத்துவிட்டார் பத்து நிமிடம். ‘தப்பு பண்ற பசங்களுக்கு இதுதான் கிடைக்கும்,’ என்றார் அவனை விடுவிக்கும்போது. நடுங்கிப் போன அந்தப் பையன்தான், தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் நம்மை ஒன்றரை மணி நேரம் நடுங்க வைத்த ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்! சஸ்பென்ஸுக்கு மறு பெயர். பீதிப் படங்களின் பிதாமகன்!
Alfred Hitchcock… இன்று பிறந்த நாள்!
படத்தில் இவர் வைக்கிற சஸ்பென்ஸ் போக, படத்தில் இவர் எங்கே தலையைக் காட்டுகிறார் என்று கண்டுபிடிக்க ஆவலுடன் தேடுவார்கள் ரசிகர்கள். ஆம், ஒரு பாதசாரி, சக பயணி, கஸ்டமர் என்று தன் ஒவ்வொரு படத்திலும் ஒரு மினி மினிட் மின்னி மறைவார் இந்த இயக்குனர் நட்சத்திரம். வேறு பாத்திரங்களே வரமுடியாத ‘Life Boat’ படத்தில் கூட தலையைக் காட்டி விட்டார். எப்படி? ஹீரோ படிக்கும் பேப்பரில் ஒரு விளம்பரத்தில் போஸ் கொடுக்கும் மாடலாக! எந்தப் படத்தில் எந்த இடத்தில் வருகிறார் என்பதைத் தொகுத்து (Hitchcock Cameos) ஒரு வலைத்தளத்தில் போட்டிருக்கிறார்கள்.

லண்டனில் ஜனனம். கண்டிப்பாக வளர்க்கப்பட்ட குடும்பம். அப்பாவுக்கு பலசரக்கு கடை. கேபிள் கம்பெனியில் வேலை பார்த்தபோது சினிமாவால் ஈர்க்கப்பட்டவர், தன் டிராயிங் திறமையால் பாரமவுண்ட் ஸ்டூடியோவில் டைட்டில் வரையும் வேலை தேடிக்கொண்டார் ஓசைப் படாமல். மௌனப் பட காலம் அது.
‘மனைவியிடம் சொல்லி விடு’ என்ற படத்தின் டைரக்டர் திடீரென்று நோயில் விழ, மீதிப் படத்தை முடிக்கும் பொறுப்பு கிடைத்தது. திறமை திரையில் பளிச்சிட, அடுத்தொரு படத்தை இயக்கும் வாய்ப்பு! ‘The Lodger’(1927). அது பேர் வாங்கித் தர, படங்கள் தொடர்ந்தன. அதன் பிறகு தொப்பியில் இறகு செருகிக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. ‘Strangers on a Train’, ‘Rear Window’, ‘I Confess’, ‘Vertigo’, ‘Psycho’, ‘North By Northwest’, ‘The Birds’… ஒவ்வொரு படமும் விறுவிறுப்புக்கும், சஸ்பென்ஸுக்கும் பாடம் எடுத்தன.
சாதாரண மனிதனை கொண்டுபோய் ஒரு அசாதாரண சிக்கலில் வைப்பது தான் ஹிட்ச்காக் படத்தின் அண்டர் லைன். மௌனப் பட காலத்தில் உருவெடுத்தவர் இல்லையா? வசனம் இன்றிக் காட்சிகளை நகர்த்துவதில் சமர்த்தர். சுவர்களில் விழும் நிழலிலிருந்து கதவிடுக்குகளினூடே எட்டிப்பார்க்கும் காமிரா கோணம் வரை இவரின் ஒவ்வொரு ஷாட்டும் திகிலை வளர்க்கும். ஒரே அறையில் நடக்கும் ‘Rope.’ ஒரு படகுக்குள் நடக்கும் ‘Life Boat’… என்று இவரின் சோதனைகள் எல்லாம் சாதனைகள்.

அதிர்ச்சியை விட பீதியையே அளிக்க விரும்பினார். திடீரென்று ஒரு திருப்பத்தைக் கொடுத்து ஆடியன்ஸைத் தூக்கி வாரிப் போடச் செய்வது முதல் வகை. படத்தில் வரும் பாத்திரங்களுக்குத் தெரியாத விஷயங்களால் என்ன ஆவார்களோ என்று பதைபதைப்பை உண்டாக்குவதே இவர் விரும்பிய அடுத்த வகை. அவரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: “ரெண்டு பேர் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேஜைக்கு அடியில் ஒரு வெடிகுண்டு. அது வெடித்தால் அதிர்ச்சி. வெடிக்கவில்லையானால்…?”
‘Psycho’ தான் மாஸ்டர்பீஸ். ஆபீஸ் பணத்தை திருடிக் கொண்டு ஓடும் அந்தப் பெண் ரோட்டோர விடுதியொன்றில் தங்குகிறாள். பாத்ரூமில் பதறப் பதறக் கொல்லப்படுகிறாள். தேடிவரும் தங்கையை விடுதிக்குச் சொந்தக்காரனான கொலைகாரனிடமிருந்து காப்பாற்றும் காதலன்… என்று விரியும் இந்தப் படத்தைப் பேசாத ரசிகன் இல்லை. பாராட்டாத பத்திரிகை இல்லை.
‘North by Northwest’ ரொம்பவே பிரபலம். உலகின் தலைசிறந்த டாப் டென் த்ரில்லர்களில் ஒன்று. வேறொரு நபர் என்று தவறாகக் கதாநாயகனைக் குறிவைக்கும் கும்பல் ஒரு பக்கம், துரத்தும் போலீஸ் மறுபக்கம்… இறுதியில் வரும் அந்த breathtaking சஸ்பென்ஸ்! கதையின் முடிச்சு இந்தியிலும் வந்து கலக்கியது.
‘Rope’ஒரே ஷாட் படம். படத்தில் மொத்தக் காட்சியும் ஒரு விருந்து மட்டுமே. முதல் காட்சியிலேயே ஒரு கொலை விழுந்து சடலம் மேஜைக்கு அடியில் மறைக்கப்படுகிறது. அங்கேயே துப்பு துலக்கப்பட்டு… இப்படிப் போகும் இடைவெளியின்றி நடக்கும் கதையை ஒரே ஷாட்டில் எடுத்தார். அப்போதெல்லாம் ஒரு ரோலில் பத்து நிமிட அளவே ஃபிலிம் இருக்கும் என்பதால், பத்தாவது நிமிட முடிவில் ஒரு இருட்டான பொருள் திரையை நிறைக்க, அந்த இடத்தில் ரீலை மாற்றி அங்கிருந்து தொடரும் ஷாட்.
குறும்பு இவரது விரும்பு. லிஃப்டில் நுழையும்போது தன்னோடு வருகிறவரிடம் சத்தமாகப் பேசிக்கொண்டே வருவார் இப்படி. “… அந்தப் பொண்ணு கத்தியால குத்தப்பட்டுக் கிடக்கிறா. என் சட்டையெல்லாம் ரத்தம். ஸைரன் சத்தம் தூரத்தில கேட்குது. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே. நான் ஒரு கர்சீப்பை எடுத்து….” என்று அவர் சொல்லும்போது நாலாவது மாடி வர, லிஃப்டிலிருக்கும் மற்றவர்களைத் தலையைப் பிய்த்துக் கொள்ள விட்டுவிட்டு, நண்பருடன் வெளியேறுவார் கூலாக!
‘படிகள் 39’ படப்பிடிப்பின்போது நடிகை மேட்லின் கரோலையும் நடிகர் ராபர்ட் டொனால்டையும் விலங்கால் இணைத்து படம் எடுத்தபோது, சாவியைத் தொலைத்து விட்டது போல ஒரு நாள் பூராவும் இருந்து அவங்க தவிப்பை ரசித்தாராம்.
மிகப் பிரபலமான நடிகை இன்க்ரிட் பெர்க்மன் ஒருமுறை இவரிடம் ஒரு காட்சியை, “என்னால் அதை இயற்கையாகச் செய்ய முடியும்னு தோணலே..” என்றதும் இவர் சொன்னது: “அப்ப அதை அப்படியே நடிச்சுடு!” பின்னால் இன்க்ரிட் எல்லாரிடமும், “எனக்கு கிடைச்ச பெஸ்ட் அட்வைஸ் அதுதான்!” என்றார்.
‘பறவைகள்’ இவரின் மிகப் பேசப் (பார்க்கப்)பட்ட படம். கோபமுற்ற பறவைகள் அந்த நகரின் மக்களை துரத்தித் துரத்தி தாக்குவதுதான் கதை. டெஃபண்டி மாரியரின் நாவல் அது. படமாக்க எண்ணி வாங்கிய ஹிட்ச்காக் தன் திரைக்கதை ஆசிரியரிடம் (அவரும் ஒரு பிரபல நாவலாசிரியர் தான்) சொன்னார்: “நாவலைப் படிச்சிட்டீங்களா? இனி கதையை மறந்துடுங்க. பறவைகள் மனிதர்களைத் தாக்கும் ஐடியாவை மட்டும்தான் நாம எடுத்துக்கறோம்!”
மலை உச்சியில் நாயகனும் நாயகியும் பேசிக் கொண்டிருப்பதாக ஒரு காட்சியை எடுத்தார் ஹிட்ச்காக். அந்த சீனைப் பிடிக்காத நடிகர் தன் வருத்தத்தை திரைக்கதை ஆசிரியரிடம் வெளியிட, அவரோ தான் எழுதாத இந்த சீனை எதற்கு சேர்த்தார் ஹிட்ச்காக் என்று இவரிடமே கேட்டார். “நீங்கள் என்னை நம்புகிறீர்களா, அல்லது ரெண்டு சீன்ல வர்ற நடிகரை நம்பறீங்களா?” என்றார் இவர் சூடாக.
உதவி இயக்குனரான அல்மா ரெவில் மனைவியாகி வாழ்க்கையையும் இயக்க உதவினார். வாழ்நாள் சாதனை அவார்ட் பெறும்போது ஹிட்ச்காக் உதிர்த்த வார்த்தைகள் மிகுந்த ரசனை. “என் வாழ்வில் என்னிடம் அன்பு செலுத்திய, ஊக்கப்படுத்திய, உடனுழைத்த நான்கு பேருக்கு நன்றி சொல்லணும் நான். முதலாமவர் ஒரு சினிமா எடிட்டர். அடுத்தவர் ஒரு திரைக் கதாசிரியர். மூன்றாவது என் மகளின் தாய். நான்காவது ஒரு பிரமாதமான சமையல்காரி. இந்த நான்கு பேரின் பெயர் அல்மா ரெவில்!”
ஒரு சஸ்பென்ஸ் என்னவென்றால் மாஸ்டர் அஃப் சஸ்பென்ஸ் என்றழைக்கப்பட்ட இவர் நிஜவாழ்வில் ஒரு சின்ன சஸ்பென்ஸைக் கூட தாங்கிக்க மாட்டார் என்பதுதான். எழுதிய லெட்டரைக் கூட தானே எடுத்துச் சென்றுதான் போஸ்ட் செய்வாராம்.
இவரது ஸ்கிரிப்ட் ரைட்டர் Angus MacPhail -ம் இவரும் சேர்ந்து பிரபலப்படுத்திய ஒரு விஷயம்தான் மெக்கஃபின் (MacGuffin) என்பது. அப்படின்னா? ஒரு பொருள். கதையை நகர்த்த உதவணும் அது. கேரக்டர்களை ஓட வைக்கணும். அது ஒரு ரகசிய பைலாக இருக்கலாம். பணம், வெடிமருந்து, ஆபத்தான அதிசயமான ஏதோ ஒன்று. அது என்ன என்பது முக்கியமில்லை. கதை நகர்ந்து முன் செல்லச் செல்ல அதன் முக்கியத்துவம் குறைந்து மறைந்துவிடும். நிறைய படங்களில் அப்படி ஒரு மெக்கபிஃன் வரும்.
‘படம் தொடங்கிய பின் யாரும் திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,’ என்ற ஸ்டிரிக்டான அறிவிப்புடன் வெளியான ‘Psycho’ ஸ்க்ரிப்டைப் பார்த்துவிட்டு பாரமவுண்ட் உதட்டைப் பிதுக்கவே, சொந்தமாகத் தயாரித்துக் கொடுக்க, அவர்கள் வெளியிட்டார்களாம். நல்ல லாபம் அதனால் இவருக்கும்.
என்ன ஆச்சரியம்! உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் இவருக்கு ஒரு தடவை கூட இயக்குனருக்கான ஆஸ்கார் பரிசு கிடைக்கவில்லை. ஐந்து தடவை நாமினேஷன் கிடைத்தும்! ஆனால் இவரின் ‘Rebecca’ படத்துக்கு சிறந்த தயாரிப்பாளர் ஆஸ்கார் கிடைத்தது. பிரிட்டனின் ஸர் பட்டம் வரை உயரம் சென்றார். 1922-இல் டைட்டில் கார்டு எழுதி தன் திரையுலக வாழ்வைத் தொடங்கியவர் 1980-இல் தன் வாழ்க்கையின் எண்ட் கார்டை எழுதினார்.
உதிர்த்த முத்துக்கள்…
‘கதையை விட அதைப் படமாக்கும் ஸ்டைலைத்தான் நான் நம்புவது. எதைச் செய்கிறீர்கள் என்பது அல்ல, எப்படி ஒன்றைச் செய்கிறீர்கள் என்பதே உங்களை ஒரு கலைஞன் ஆக்குகிறது. ஓவியன் ஒரு கூடை பழங்களை, வரைவதற்கான பொருளாக எடுத்துக் கொள்வதைப் போல, கதை கலைக்கு ஒரு விஷயம், அவ்வளவே.’
‘அது ஒரு நல்ல படம் என்றால், ஒலி நின்று விட்டாலும் ரசிகர்களுக்கு கதையில் என்ன நடக்கிறது என்று தெளிவாகத் தெரிய வேண்டும்.’
‘திரைக்கதையை எழுதி வைத்துக்கொண்டு ஏற்ற லொகேஷன் தேடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. லொகேஷன் முதலில். அதைக் கதையில் கொண்டு வர வேண்டும்.’
‘ஒரு கேரக்டரை புதியவர் செய்யாமல் பிரபல நடிகர் செய்வதால் ஆன நன்மை என்னவெனில் ஆடியன்ஸுக்கு இன்னும் அதிக உணர்வு கிடைக்கும், ஏற்கனவே அவரைத் தெரிந்திருப்பதால்.’
‘மர்மம், திகில் இரண்டும் மைல்கள் அப்பாற்பட்டவை. மர்மம் மூளை சார்ந்தது. யார் செய்தார்கள் என்று கொண்டுபோவது. திகில் என்பது உணர்வு சார்ந்தது.’
தமாஷாக சொன்னது, ‘வால்ட் டிஸ்னிக்குத்தான் (கார்ட்டூன் படம் எடுக்கிறவர்) பெஸ்ட் நடிகர்கள் வாய்க்கிறது. அவருக்குப் பிடிக்கலைன்னா அந்த ஆளைக் கிழிச்சுப் போட்டுடலாம்.’
‘எல்லாமே அதிர்ஷ்டம்தான். நான் பயந்தவனாக, ஒரு கோழையாக இருப்பது அதிர்ஷ்டம். ஏன்னா, ஒரு ஹீரோவால் ஒரு நல்ல சஸ்பென்ஸ் படத்தை எடுக்க முடியாது.’
‘முடிந்தவரை கேரக்டரின் சூழ்நிலையை நடக்கும் சம்பவங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக ‘North by Northwest’ படத்தின் காட்சி… ஏலம் நடக்கும் இடத்தில் வில்லன்கள் வளைக்கிறார்கள் Cary Grant-ஐ. எப்படித் தப்புவது? யோசித்து, கன்னாபின்னாவென்று அவர் ஏலம் கேட்கத் தொடங்கவே, அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறார்.’
‘ஒரு நல்ல படத்தை உருவாக்க மூன்று விஷயங்கள் வேண்டும்: திரைக்கதை, திரைக்கதை, திரைக்கதை.’
(‘அமுதம்’ Feb.2008 இதழில் வெளியான எனது ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ -அத்: 12)
