
சல்மான் ருஷ்டி Satanic Verses நாவலில் இஸ்லாமை பகடி செய்தார் என்பதற்காக அவர் தலைக்கு விலை பேசப்பட்டது. (அவரே முஸ்லீம்தான்). இஸ்லாமுக்கு எதிராக அவரை நிறுத்தி மங்களம் பாடுகிறார்கள். அவருடைய The Moors Last sigh நாவலில் ராமன் ஃபீல்டிங் என்ற கதாபாத்திரத்தை பால் தக்கரே குணாதிசயங்களோடு உருவாக்கி இந்துத்துவா அடிப்படை வாதத்தை கிண்டலடித்திருப்பார்.. அவருடைய Shalimar நாவலில் காஷ்மீர் என்ற நிலத்தை பெண்ணாக உருவகப்படுத்தி இந்துக்களும்/முஸ்லீம்களும் அதை பலாத்காரம் செய்து வருகிறார்கள் என அபாரமாக எழுதிச்செல்கிறார்.
கலைஞர்களுக்கு எதிரான வன்முறைகளும் அச்சுறுத்தல்களையும் வரலாறு முழுவதும் பார்க்கமுடியும். விளாடிமிர் நபக்கோவின் Lolita முறையற்ற பாலுறவை அப்பட்டமாக சித்தரித்தால் தடைசெய்யப்பட்டது. வில்லியம் பர்ரோஸின் Naked Lunch நாவலில் பல்வேறு போதை வஸ்துகளை உபயோகிப்பது பற்றிய வர்ணனைகளுக்காக தடை. அரசாங்கத்திற்கு எதிராக கலகக்காரர்களின் (இடதுசாரி பின்புலத்தோடு) எழுச்சியை காட்சி மொழியில் அபாரமாக கொண்டுவந்த ஐஸன்ஸ்டைனின் Battleship Potemkin படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
தீபா மேத்தாவின் ஃபையர் திரைப்படம் ஓரினசேர்க்கைக்காக பலத்த எதிர்ப்பை சம்பாதித்து பல தணிக்கைகளுக்கு பிறகே வெளிவந்தது. தஸ்லீமா நஸ்ரினின் லஜ்ஜா நாவல் மதத்திற்கு எதிரானது என தடை செய்யப்பட்டது. எம்.ஃப். ஹுசைன் சரஸ்வதியை ஆடையின்றி வரைந்தார் என்பதற்காக கடும் நெருக்கடியை எதிர்கொண்டார். ஒருபடி மேலே போய், எழுதியவர்களையே கொலை செயதவர்கள் இந்துத்துவா அடிப்படைவாதிகள். கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்கள்/பத்திரிக்கையாளர்கள் அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்துத்துவா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள்.
இம்மாதிரி எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.
தடையும், தணிக்கைக்கான காரணங்கள் பல இருந்தாலும்,பெருவாரியாக இரண்டு காரணங்கள் முதன்மையாக இருக்கிறது.ஒன்று பாலியியல், மற்றொன்று மதம். உலகம் முழுவதும் இந்த இரண்டையும் காலங்காலமாக அரசும்,நிறுவனங்களும் ஒழுங்குப்படுத்தி வரையறைக்குள் அடைக்கிறது. ஊடகங்களில் உற்பத்தி செய்யப்படும் பிம்பங்களும், பிம்பம் சார்ந்த செயற்பாடுகளும் அரசுக்கும் மதத்திற்கு அனுசரணையாக இருக்கிறது. பிம்பங்களை கேள்விக்கு உட்படுத்தும்போதோ அல்லது சிதைக்கும்போதோ அரசு, மதம் நிறுவனங்களின் இருப்பு கேள்விக்குள்ளாகிறது.
ஆக, ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட கருத்து/பிம்பங்களுக்கு மாற்றாக அல்லது எதிராக ஒரு பிரதியோ அல்லது ஒரு திரைப்படமோ முன்வைக்கும் போது, அரசுக்கும், நிறுவனங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. சமன் குலைக்கும் கருத்து, அரசுக்கும் மத நிறுவனத்திற்கும் சவலாக இருக்கும். அதாவது அடக்கிவைக்கப்பட்ட சொல்லாடல் கலையாக பரிணமிக்கும்போது தடை, தணிக்கை என்ற எதிர்ப்பு வடிவங்களை சந்திக்கிறது.
கலையின் பிரதான நோக்கம் துருவேறிய கருத்துகளை அகற்றி மாற்று மதிப்பீடுகளை முன்வைத்து எல்லையில்லா கருணையுடன் மானுட குலத்தை அரவணைக்கும். கலைக்கு புனிதம், உயர்வானது, தாழ்வானது, நல்லது,கெட்டது போன்ற பேதங்கள் கிடையாது.
Literature is Dangerous. It awakens a rebellious attitude in us. And If you are killed because you are a writer, that’s the maximum expression of respect, you know.
~ Mario Vargas LLosa
