2005-ம் ஆண்டின் குளிர்காலத் துவக்க நாட்களில் ஒன்று/யதார்த்தா கே பென்னேஸ்வரன்

எங்கள் மகள்கள் பாரதியும் அபிநயாவும் அவர்களின் தோழியரும் வீட்டுக்கு எதிரில் இருந்த பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியின் சில சிறுவர்கள் – பிறந்து சில நாட்களே ஆன ஒரு அழகான நாய்க்குட்டியின் வாலில் நூலைக் கட்டி தொங்க விட்டும் அதைக் கதறவிட்டும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நாய்க்குட்டியின் தாயின் மீது ஏற்கனவே யாரோ காரை ஓட்டிச் சென்றுவிட்டார்கள். இருந்த நான்கைந்து குட்டிகளில் மற்றவை எங்கெங்கோ போய் மீதம் இருந்தது இது ஒன்றுதான். அது இந்த சிறுவர்களிடம் சிக்கி படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.

சிறுமிகள் எல்லோரும் அந்த பையன்களிடம் சண்டை போட்டு நாய்க்குட்டியை மீட்டு இருக்கின்றனர். பின்னர் எல்லா சிறுமிகளும் ஒன்றிணைந்து இந்த நாய்க்குட்டி வாரம் ஒருவர் வீட்டில் வைத்து பாராமரிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர்.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் அந்த நாய்க்குட்டி எங்கள் வீட்டுக்கு அந்தக் குளிர்கால மாலை ஒன்றில் எங்கள் வீட்டுக்கு வந்தது. ப்ரௌன் நிறத்தில் மிகவும் அழகிய கண்களுடன் துருதுருவென்று மிகவும் அழகாக இருந்தது.

மகள்கள் அதற்கு சொட்டு சொட்டாக பால் கொடுத்து உடலில் இருந்த சிராய்ப்புக்களுக்கு மருந்திட்டு அதற்காக ஒரு அட்டை பெட்டியை தயார் செய்து அதில் துணியை விரித்து படுக்க வைத்தனர். எங்கள் அபிநயாவும் பாரதியும் அதன் அருகிலேயே தங்கள் நேரத்தை கழித்தனர். பள்ளியின் குளிர்கால விடுமுறை என்பதால் அவர்களின் முழு நேர வேலை அதுவாகப்போனது.

ஒருவாரம் கழித்து மற்றொரு வீட்டுக்கு அது போக வேண்டும்.

ஆனால் பெற்றோர் யாரும் தங்கள் வீட்டில் அதனை ஒருவாரம் வைத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. இவர்கள் வழக்கமாக சேரும் விளையாட்டும் இதனால் கலைந்து போனது. விளையாட்டுக்கு வந்தால் ஒப்பந்தம் நினைவுபடுத்தப்படும் என்ற சங்கடமான சூழ்நிலையை தவிர்க்க பெற்றோர் தங்கள் குழந்தைகளை விளையாட்டுக்கும் அனுப்பவில்லை.

ஒரு வாரம் தாண்டி இருவாரத்துக்கு மேலும் தாண்டியது. சரி. எங்கு இதை விடுவது? நம் வீட்டிலேயே வளரட்டும் என்று பெண்கள் முடிவு செய்தனர். எங்கள் அனுமதியும் வேண்டினார்கள். அந்த நாய்க்குட்டி இருந்த அழகு, அதன் கண்களில் இருந்த துருதுருப்பு அதன் விளையாட்டு அனைத்தையும் பார்த்து நானும் என் மனைவியும் ஏற்றுக் கொண்டோம்.

ஒரே ஒரு நிபந்தனை நான் போட்டேன். அதை வீட்டுக்குள் விடக்கூடாது. பால்கனியில்தான் இருக்க வேண்டும் என்று. என்னுடைய நிபந்தனையை கேட்கும் பொறுமை அதற்கு கிடையாது. ராத்திரி முழுக்க கத்திக் கொண்டே இருக்கும். கொஞ்சம் பால்கனி கதவு திறந்தால் ஓடி வந்து தரையில் என் படுக்கையில் படுத்துவிடும். என்னை நைச்சியப்படுத்தும். என்னை கொஞ்சும். அனுமதிக்க வேண்டி கொஞ்சும். அதன் முசுமுசுப்பு தாளாமல் இருக்கட்டும் என்று அனுமதித்தேன்.

அதன் அட்டைப்பெட்டி வீட்டுக்குள் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அது தன்னுடைய உரிமையை எங்கள் வீட்டில் நிலை நாட்டிக்கொண்டது.

அடுத்து அதற்கு பெயர் வைக்க வேண்டும்.

வீட்டில் வளரும் பிராணிகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதே போல எந்த பிராணியும் தமிழில் மட்டுமே என்னுடன் உரையாட வேண்டும் என்பதையும் என் தீவிர திராவிட மொழிக் கொள்கையாக வைத்திருந்தேன். மேலும் எப்படி இருந்தாலும் டெல்லியில் தான் வளருகிறது. அதனால் அதன் மேல் இந்தியை திணிக்கவேண்டாம் என்ற முடிவும் எடுத்தேன்.

அம்மாவின் அப்பா பெயர் குப்புராவ். கல்யாணம் ஆன புதிதில் பையன் பிறந்தால் எங்கள் தாத்தா பெயர்தான் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எங்கள் வீட்டில் அதற்கு வழிஇல்லாமல் போனது.

அதனால் என்ன? எங்கள் வீட்டில் வளரப்போகும் ஜீவனுக்கு தாத்தா பெயர் வைக்கலாம். குப்புராவ் என்று ஜாதி பெயருடன் வேண்டாம். குப்பு என்று பொதுவாக அழைக்கலாம் என்று ஆசைப்பட்டேன். ஆனால் கிருஷ்ணகிரி போனால் வீட்டில் செருப்பு பிய்ந்து விடும் ஆபத்து இருந்தது.

எங்கள் வீட்டின் காவலாக இது இருக்கப்போகிறது என்பதால் முனியாண்டி என்று பெயர் வைக்கலாம் என்று முடிவெடுத்தேன். எங்கள் ஊரின் காவல் தெய்வம் முனீஸ்வரர். முனி என்று கூப்பிட்டேன்.

அது கொஞ்சநாள்தான்.

அதன் பால் என்ன என்று எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை. என் வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர் அதனை தூக்கிப் பார்த்து விட்டு இதனை முனியாண்டி என்று கூப்பிட முடியாது. வேண்டுமானால் முனியம்மா என்று கூப்பிட்டுக் கொள்ளலாம் என்று உறுதிப்படுத்தினார்.

என் மகள்கள் இதெல்லாம் உன்னோட வச்சிக்கோ. நாங்க பெயரை தீர்மானிக்கிறோம் என்று சொல்லி நியூயார்க்கில் உள்ள அவர்களின் அண்ணனிடம் கலந்து ஆலோசித்து அதற்கு ரஸ்டி என்று பெயர் வைத்தார்கள்.

இதுதான் ரஸ்டி என்னுடைய மூன்றாவது மகளாக எங்கள் குடும்பத்தில் இணைந்த வரலாறு.

இது வெறும் வார்த்தை அல்ல. எங்கள் 3-வது மகளாக எங்கள் வீட்டில் வளர்ந்தது.

கோல் மார்க்ட்டில் நாங்கள் இரண்டவது தளத்தில் வசித்தோம். ஒவ்வொரு மாலையும் எங்கள் அனைவரையும் ஒவ்வொருவராக எதிர்கொள்வதற்கு எங்கள் ரஸ்டி ஜன்னலில் காத்திருந்த அழகுக்கு எதுவும் ஈடாகாது.

என்னதான் வளர்ப்பு பிராணி என்றாலும் இந்த அளவுக்கு மனிதர்களாலும் அன்பை பொழிய முடியுமா என்று தெரியவில்லை,

என் கார் எங்கள் வளாகத்தில் நுழையும் போது அங்கு அதன் வால் வேகமாக ஆடத்தொடங்கும். எப்படித்தான் அதற்கு தெரியும் என்று எங்களால் ஊகிக்க முடியவில்லை.

எங்கள் மீது மட்டும் அல்ல. எங்கள் வீட்டில் வரும் ஒவ்வொருவரின் மீதும் அன்பை பொழியும். யாரையும் அது மிரட்டியதோ அல்லது குரைத்ததோ கிடையாது. யார் வீட்டுக்கு வந்தாலும் அது தன்னுடையவராக அந்த விருந்தாளியை தன்னில் கரைத்துக் கொள்ளும்.

வீட்டில் யாருக்கு உடல்நலம் சரியில்லை என்றாலும் அது சோர்ந்து படுத்துவிடும்.

நானும் மனைவியும் ஊருக்கு போவதற்கு பெட்டிகளை தயார் செய்யும் போதே அதற்கு தெரிந்து விடும். சோர்ந்து படுக்க ஆரம்பித்துவிடும். சிறுவயதில் நாங்கள் வெளியில் கிளம்பினால் குழந்தை அழுவதை போல ரகளை செய்யும். அடம் பிடிக்கும்.

ஒரு மகாராணியின் வாழ்க்கையை எங்கள் வீட்டில் அது வாழ்ந்தது.

அதற்கு நாங்கள் வழங்கிய உணவு மிகவும் விலை உயர்ந்தது. பாரதி அமெரிக்காவில் இருந்து வரும் போது எங்களுக்கு என்ன வாங்குவாளோ அதற்கு நிறைய மாமிச உணவு வாங்கி வருவாள். பாரதி அமெரிக்கா கிளம்பி சென்று ஏறத்தாழ மூன்று மாதங்கள் அது சோர்ந்து இருந்தது. பாரதி என்று நாங்கள் போனில் பேசினாலே எங்கள் ரஸ்டியின் காதுகள் விரைத்துக் கொள்ளும்.

இப்படி எல்லாம் அன்பு செலுத்த முடியுமா என்ற மாபெரும் விந்தையை அது நிகழ்த்திக் கொண்டிருந்தது.

எங்கள் ரஸ்டியை தெரியாத என்னுடன் பரிச்சயமான எழுத்தாளர்களோ இசைக்கலைஞர்களோ யாரும் கிடையாது. என் வீட்டுக்கு வரும் யாரையும் தன் அன்பால் சிநேகமாக்கிக் கொள்ளும். ஊருக்குப் போகும் போது நண்பர்கள் என்னை பற்றி கேட்பதை விட ரஸ்டி எப்படி இருக்கா என்றுதான் கேட்பார்கள்.

இடையில் சிறிது உடல் நலம் குன்றியபோது டாக்டர் ரஸ்டிக்கு சிக்கன், ஆட்டுக்கறி போன்றவற்றை தரச்சொன்னார்.

எங்கள் வீடு தூய சைவத்தைக் கடைப்பிடிக்கும் வீடு.

எங்கள் ரஸ்டிக்காக நாங்கள் அனைவரும் தனித்தனியாக இறைச்சிக்கடைகளில் நின்று இறைச்சி வாங்க அளித்தோம். அதற்கு பிடித்த அசைவ உணவுகளாக வாங்கி வருவோம்.

நான் வீட்டுப் படி ஏறுமுன்பு ஏதாவது தெருவில் உள்ள நாய் என்னிடம் வாலாட்டி வந்தால் அதனை தடவிக் கொடுப்பேன். அது எங்கள் ரஸ்டிக்கு பிடிக்காது. உள்ளே ஓடிப்போய் என் மனைவியிடம், “ உன் வீட்டுக்காரன் என்ன பண்றான் பாரு” என்ற தொனியில் முறையீடு செய்வது போல குரைக்கும்.

அதன் ஒவ்வொரு அசைவும் அழகு. அதன் அணுகுமுறை அழகு. அதன் பாசம் தனி அழகு.

ஜூன் மாதம் நானும் மனைவியும் தனித்தனியாக வேறு வேறு நாட்களில் கிருஷ்ணகிரி கிளம்பினோம்.

நாங்கள் கிளம்பிய போது ரஸ்டிக்கு உடல் நிலை சரியாக இல்லாமல் இருந்தது. நிலை இல்லாமல் தவித்தது. நானும் அபிநயாவும் ரஸ்டியை மருத்துவமனைக்கு கூட்டி சென்றோம். மருந்து கொடுத்தார்கள். கவலைப்பட ஒன்றும் இல்லை என்றார்கள்.

நான் ஜூன் 4-ம் தேதி ஊருக்கு கிளம்பினேன். விமான நிலையம் செல்வதற்கு வண்டியை புக் செய்து விட்டு ரஸ்டியை தடவிக் கொடுத்துவிட்டு வாசல் கேட்டை பூட்டினேன்.

என்றும் இல்லாத படி அன்று ஏதோ மனம் கனத்தது. நேரம் கொஞ்சம் இருந்தது. அதனால் ஊபர் வண்டியை ரத்துசெய்து விட்டு மீண்டும் கேட்டை திறந்து உள்ளே சென்றேன்.

என்னமோ மனதுக்கு ரொம்பவுமே கலக்கமாக இருந்தது.

என் ரஸ்டிக்கு நான் என்றும் முத்தம் கொடுத்தது இல்லை.

அன்று அதனை இறுக அணைத்து முத்தம் கொடுத்தேன்.

“உனக்கு எதுவும் ஆகாது. நான் திரும்ப வர்ற வரைக்கும் அவசரப்படாதே. எனக்காக காத்திரு” என்று மீண்டும் முத்தமிட்டேன். அன்று அது தனக்கு எதுவும் சம்பந்தம் இல்லை என்பது போல எங்கோ வெறித்துப் பார்த்தது.

பெங்களூரூ விமான நிலையம் இறங்கிய நடு இரவில் எங்கள் அபிநயாவுக்கு வாட்ஸப் அனுப்பினேன். “How is Rusty?”

நான் கேட்ட கேள்வி நியூயார்க்கில் இருக்கும் பாரதிக்கு ஏதோ உறுத்தி இருக்க வேண்டும். என்ன ஆனது என்று அவள் பதட்டத்துடன் கேட்டாள்.

காலையில் ரஸ்டி நன்றாகவே இருப்பதாக அபிநயா சொன்னாள்.

ஜூலை 7-ந் தேதியன்று கிருஷ்ணகிரியில் வீட்டின் பூமி பூஜை போட்டு விட்டு மனைவியுடன் பென்னேஸ்வர மடம் சென்று குலதெய்வத்துக்கு ஒரு பூஜை செய்து விட்டு வீடு திரும்பினோம்.

அபிநயாவின் தொலைபேசி.

எடுத்தவுடன் கதறி அழத் தொடங்கினாள். “அப்பா… ரஸ்டி போயிடுச்சுப்பா”

என் பேச்சை ரஸ்டி கேட்கவில்லை. எங்களிடம் சொல்லாமலே போய் சேர்ந்து விட்டது. நாங்கள் ஊரில். பாவம் தனியாக அபிநயா. திகைத்துப் போனோம். அவள் மிகவும் தைரியமான பெண். சமாளித்து விட்டாள். வளர்ப்பு பிராணிகளுக்காக உள்ள இடுகாட்டில் ரஸ்டியை எரியூட்டி தனியாக வீட்டுக்கு கலசத்தில் சாம்பல் பெற்று வந்திருக்கிறாள்.

எங்கள் இருவரால் சகோதரர் வீட்டில் இருந்ததால் அழக்கூட முடியவில்லை. அண்ணாவின் சம்பந்திகள் வந்திருந்தார்கள். அவர்கள் எதிரில் அழுவது நன்றாக இருக்காது. சுந்தரியாவது சமாளித்தாள். காம்பவுண்டுக்கு வெளியில் வந்து வேலை இருப்பது போல சற்று தூரமாக நின்று வாய் விட்டு கதறிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டு வீடு திரும்பினாள்.

சம்பந்தி நீண்ட நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர்களுடன் இணைந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். சாப்பிட்டு முடித்து சம்பந்தியை வழி அனுப்பி விட்டு காரை எடுத்துக் கொண்டு பைபாஸ் ரோடு வளைவில் காட்டு ஆஞ்சநேயர் கோவில் அருகில் நிறுத்தி கரைந்து அழுதேன்.

ஏதோ மிகைப்படுத்துவது போல தோன்றும். ரஸ்டி என்னிடம் சொல்லாமல் போனதை என்னால் தாங்க முடியவில்லை. மகிழ்ச்சியில் எனக்குள் புதைந்து என்னை கொஞ்சும் அதன் பாசம். நான் கோபமாக இருக்கும் தருணங்களில் தயங்கித் தயங்கி தூரத்தில் நின்று என்னை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து ஆசுவாசப்படுத்தும் அதன் சாகசம். யாராலும் தரமுடியாத பேரன்பு – எல்லாவற்றையும் இழந்து இருக்கிறேன்.

ஊருக்கு திரும்பி வந்தபோது ரஸ்டி இல்லாத எங்கள் வீடு சூனியமாக இருந்தது. ரஸ்டியின் சாம்பல் கலசத்துக்கு மாலையில் விளக்கு ஏற்றி பூ சூட்டியபோது என்னால் தாங்க முடியவில்லை. வாய் விட்டு கதறிக் கதறி அழுதேன்.

இப்போதும் தனியாக இருக்கும் நேரங்களில் ரஸ்டியின் நினைவு வந்தால் என் கண்கள் நிறைகின்றன.

எந்த ஜென்மத்தில் வந்த உறவு எது?

எங்கள் மகளாக, எங்கள் தோழியாக எங்கள் மீது எல்லையற்ற பாசம் காட்டி வீட்டில் எப்போதும் ஒரு அன்பான சூழலை பராமரித்து வந்தது ரஸ்டி.

வெறும் வார்த்தைகள் அந்த அன்பை, அந்த நேசத்தை சரியாக வகைப்படுத்தி காட்டிவிட முடியாது.

எங்கள் ரஸ்டியை எங்களால் மறக்க முடியுமா என்று தெரியவில்லை.

வீட்டுக் கதவை திறக்கும் போதெல்லாம் ரஸ்டியின் பாசம் பொழியும் எதிர்கொள்ளலுக்கு ஏங்குகிறேன்.

இரவில் திடீரென்று விழித்துப் பார்த்தால் பக்கத்தில் படுத்திருக்கும் எங்கள் ரஸ்டியை தேடுகிறேன்.

என்ன செய்தால் மறக்கும் என்றும் தெரியவில்லை….