
சல்மான் ருஷ்டியின் Satanic Verses நாவலை பற்றி எனக்கு புதிரான விஷயம் உண்டு. இந்த நாவல் அவ்வளவு எளிதாக வாசிக்கமுடியாது. இரண்டு முறை வாசித்தவுடந்தான் எனக்கு புரிந்து கொள்ளமுடிந்தது. இந்த நாவலில் பல உத்திகளை கையாண்டிருப்பார். அலெஜா கார்பந்தியர் மாந்தீரக எதார்த்தம் (Magical Realism)உத்தியை அறிமுகப்படுத்தினாலும் இந்த பாணியை செழுமையாக்கியவர் மார்க்வெஸ். இதற்காக மார்க்வெஸ் க்கு 1982 ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதற்குப்பிறகுதான் இந்த உத்தி உலகம் முழுவதும் கவனம் பெற்றது. பல எழுத்தாளர்கள் இந்த உத்தியை பின்பற்றினார்கள். அதில் ருஷ்டியும் ஒருவர். மார்க்வெஸ் இன் One Hundred years of solitude நாவலை ருஷ்டி புகழ்ந்து எழுதினார். மக்காண்டோ கிராமத்திற்கு கரி என்ஜின் ரயில் முதன்முறையாக வரும்போது, ‘புகைப்போக்கியோடு ஒரு சமையல் அறை ஓடி வருகிறது” என்ற மார்க்வெஸ் இன் வரியை ருஷ்டி சிலாகித்து எழுதியிருப்பார். இதுமட்டுமின்றி ருஷ்டி அவருடைய நாவலில் பல விஷயங்களை இணைத்திருப்பார். (Fusions, conjoinings, Hybrid characters, Satire, Post Modern Meta fiction style, with religious allegory.).
இந்த நாவலின் இரண்டு கதாபாத்திரங்கள் Gibreel Farishta and Saladin Chamcha. இருவரும் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு செல்லும் வழியில் அவர்கள் பயணம் செய்த விமானம் வெடித்து சிதறுகிறது. அதிருஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைக்கிறார்கள். Gibreel Farishta மனம் பிறழ்ந்தவராக மாறுகிறார். பழைய ஏற்பாடு, குரானில் வரும் ‘காப்ரில்’ பாத்திரமாக தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறார். Saladin Chamcha சாத்தானாக மாறுகிறார். இருவருக்கும் பகை முற்றுகிறது. Farishta தற்கொலை செய்து கொள்கிறார். Chamcha. இந்தியாவுக்கு திரும்புகிறார். சுபம்.
இந்த நாவலின் பிரதான கதாபாத்திரம் Farishta . கடவுள் நம்பிக்கை இல்லாதவன். கனவில் Mahound என்ற நபரை சந்திக்கிறான். முஸ்லீம் மதத்தை தோற்றுவித்த Muhammed கதாபாத்திரமாக நுட்பமாக மாற்றியிருப்பார் (Hybrid character). இந்த நாவலின் சர்ச்சைக்குரிய இடம் இது. இருவரும் நடக்கும் உரையாடலில் புனிதப்பிரதியாக கருதப்படும் குரானை விமர்சிக்கிறார். கற்பனை பாலைவன நிலம் ஜஹிலா(Original Name Mecca-Hybrid Place) இன் தலைவன் அபு சிம்பல், ஒரு கடவுள் கொள்கைக்கு மாற்றாக வணங்குவதற்கு மூன்று கடவுள் சிற்பங்களை படைக்க வேண்டும் என்பதற்கிணங்க அலாட், உஸா, மானேட் என்ற மூன்று கடவுள்களை படைக்கிறார். இதெல்லாம் குரான் வார்த்தைகளை புரட்டி போட்டு செய்வதாக ருஷ்டி எழுதியது சர்சைக்குள்ளானது. இதேபோல், குரானில் சொல்லப்பட்டும் சர்ச்சையான கருத்துகள்(பர்தா, ஆறுமுறை தொழுகை , பெண்களுக்கான கட்டுப்பாடுகள்) ருஷ்டி மறைமுகமாக விமர்சித்துள்ளார். இம்மாதிரி நாவல் முழுவதும் புனிதப்பிரதியாக கருதப்படும் குரானை ஒரு கற்பனை பிரதியாக பாவித்து பகடியாக எழுதியுள்ளார்.
ஒருமுறை வாசித்தால் சட்டென புரியாது. பண்டைய எகிப்து, புதிய, ஏற்பாடு, பழைய ஏற்பாடு, குரான், ஹீப்ரு படித்திருந்தால் மட்டுமே புரியும்.
இஸ்லாம் பின்பற்றும் ஒரு கடவுளுக்கு மாற்றாக மூன்று கடவுள்கள், சிலை வழிபாடு (இஸ்லாமில் கிடையாது), புனிதப்பிரதி குரானின் வார்த்தைகளை மாற்றியது, இஸ்லாம் சடங்குகளை பகடி செய்தது, பெண்களுக்கான கட்டுப்பாடுகளை விமர்சித்தது போன்ற காரணங்களால் அவர் தலைக்கு விலை பேசப்பட்டது.
இதையெல்லாம் ருஷ்டி தனக்குரிய அங்கநடை மொழியில் விளையாடிருப்பார். ஒரு சாதாரண வாசகனுக்கு புரியவே புரியாது. இலக்கியத்தில் தேர்ச்சிப் பெற்ற வாசகனுக்குக்கூட இரண்டு அல்லது மூன்று முறை வாசித்தால்தான் புரியும். இந்த பதிவின் முதல் வரிக்கு வருகிறேன்.
இந்த நூலை முதலில் தடைசெய்தது அப்போதைய ராஜீவ்காந்தி அமைச்சரவை. நட்டுவார் சிங் பரிந்துரையில் ராஜீவ் காந்தி இதற்கு தடை விதித்தார். நட்டுவார் சிங்குக்கு Post Modern Meta Fiction Narrative தெரியுமா? Magical Realism தெரியுமா? இதற்குப் பிறகு உலகம் முழுவதும் பரவி, நாவலை வாசிக்காமலேயே தடை விதிக்கப்பட்டது. கொமெனி அமைச்சரைவையில் Post Modern – Magical Realistic Scholar இருந்திருப்பாரோ? இந்த நாவலை விட, இந்த புதிருக்குதான் விடையே கிடைக்கவில்லை.
