சரோஜ் நாராயணசாமி/ மனுஷ்ய புத்திரன்

இந்திரா காந்தி இறந்ததை
சரோஜ் நாராயணசாமிதான்
எங்களுக்குச் சொன்னாள்

இந்திரா காந்திகூட
இறக்க முடியுமா என
நாங்கள் திகைத்துப்போனோம்
ஆனால் சரோஜ் நாராயணசாமி சொல்வதால்
நம்பாமல் இருக்க முடியவில்லை

அப்பா வால்வு ரேடியோவில்
சரோஜ் நாராயண சாமியை
வீட்டில் ஒரு ஆளாக உலவவிட்டிருந்தார்
எங்களுக்கும் உலகத்துக்குமான உறவு
சரோஜ் நாராயணசாமி மட்டும்தான்

சரோஜ் நாராயணசாமிக்கு மட்டும்
இந்த உலகத்தில் நடக்கும்
எல்லாமே தெரிந்திருந்தது

எப்போதோ
என் பால்யம் போய்விட்டது
அப்பா போய்விட்டார்
வால்வு ரேடியோவும் போய்விட்டது

இப்போது
சரோஜ் நாராயணசாமியும் போய்விட்டாள்