
நீங்கள்தான்
இந்திராகாந்தி சுடப்பட்டதை
பதைபதைப்போடு
எங்களுக்குச் சொன்னீர்கள்
நீங்கள்தான்
ராஜீவ்காந்தி
மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டதைக்
கண்ணீரோடு
எங்களுக்குச் சொன்னீர்கள்
நீங்கள்தான்
பி டி உஷா ஓட்டப்பந்தயத்தில்
பதக்கங்கள் குவித்ததை
ஆரவாரத்தோடு
எங்களுக்குச் சொன்னீர்கள்
நீங்கள்தான்
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி
இந்தியா உலகக்கோப்பை வென்றதை
வெற்றிப்பெருமிதத்தோடு
எங்களுக்குச் சொன்னீர்கள்
ஆகாஸவானி
செய்திகள் வாசிப்பது
சரோஜ் நாராயண்ஸ்வாமி
என்ற குரலுக்கு ஈடாக
இன்னொரு குரல்
இன்னும் வரவில்லை
எங்கள் பால்யத்தின்
வானொலிக்குள் செல்லும்போதெல்லாம்
உங்கள் குரல் ஒலிப்பதைத்
தவிர்க்கவே முடியாது
நீங்கள்தான்
இப்போது
கடைவிழியோரம்
ஒரு கண்ணீர்த்துளியென
திரண்டு நிற்கிறீர்கள்
அதே கம்பீரக் குரலோடு..
