காவேரி (தா)யார்/கணேஷ்ராம்

உண்மையில் நான் நுழைவதற்கு சற்று முன்னரே காவேரி நுழைந்து விட்டிருந்தது. அந்த சற்று என்பது ஐந்து நிமிடங்கள் என்றிருக்கலாம். தவமாய்த் தவமிருந்து தவித்துக்கொண்டிருந்த மண்ணில் பெருத்த காதலோடு அணைத்து மீண்ட அந்தக் கணம் எனக்குக் கிடைக்கவில்லை.

அந்த ஐந்து நிமிடங்கள் ஒரு கரைவேட்டியால் தடைபட்டிருந்தது என்று சொல்லலாம். கட்டிடங்களால் மறைபட்டிருக்கும் காவேரி சரேலென்று பார்வைக்கு வெளிப்படுவது அங்குதான். கிட்டத்தட்ட அந்த இடத்தை நெருங்கும் தருணம் ஒரு பெரிய டிராஃபிக் நெரிசலில் வாகனங்கள் ஸதம்பித்தன. கல்லூரிக்கு இக்கரையின் குறுகலான அந்த சாலையின் போக்கு நட்டநடுவில் நிறுத்தியிருந்த ஒரு வெள்ளை நிற ஸ்கூட்டரால் தடைபட்டிருந்தது.

அடுத்த சில நிமிடங்களில் ஸ்நேகமான சச்சரவுகள் நிகழ்ந்தன. யாரும் பெரிதாக கோபித்துக் கொள்ளவில்லை. தடைபட்டிருந்த பஸ்ஸிலும் கூட தாமதத்தை அனுபவித்ததாகவே தெரிந்தது. எல்லோர் முகத்திலும் அப்பட்டமாக காவேரி எழுதப்பட்டிருந்தது.

அதற்குள் யாரோ இரண்டு பேர் படித்துறைக்குள் பாய்ந்து ஸ்கூட்டர் காரரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தார்கள். அவர் மிகவும் பதட்டமாகத் தென்பட்டார்.

தருணத்தை இழந்துவிட சற்றேனும் மனதில்லாதவரை வலுக்கட்டாயமாகத்தான் இழுத்து வந்தனர். 40 வயதிருக்கும் அவரை பலருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏரியா கவுன்சிலர் என்று தட்சிணாமூர்த்தி, மூர்த்தி என்று வாய்வலிக்காமல் நாங்கள் அழைக்கும் எங்கள் டிரைவர் அடையாளம் சொன்னார்.

கரைவேட்டி துரிதகதியில் இயங்கினார். தன்னை அணைத்தவாறு ஆனால் பலவந்தமாக இழுத்துவந்த இருவரையும் புறந்தள்ளினார். காரணத்தை ஊகித்தவராக தன் வாகனத்தின் மீது பாய்ந்தார். பூட்டப்படவில்லை அது. நல்ல வெள்ளையில் புது மோஸ்தரில் வெளிவந்திருந்த அண்மைக்கால ஹோண்டா. அன்றாடம் சுத்தமான துணியால் மெருகேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது இருட்டத் துவங்கியிருந்த அந்திக்கருக்கலிலும் மின்னிய அதன் வதனத்திலிருந்து தெரிந்தது.

கரை பாய்ந்து வாகனத்தை அதன் ஸ்டாண்டிலிருந்து விடுவிக்காமலேயே தரதரவென்று ஓரமாக இழுத்தார். அது எதிர்பார்த்த அளவிற்கு லொகுவாக அமையவில்லை. முரண்டுபிடிக்கும் வெள்ளாட்டைப்போல் திமிறியது.

பதட்டமும் அவசரமும் அவரை நிதானமிழக்கச் செய்திருக்க வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை உதறித்தள்ளுவது போல் சாலையாரமாக உதறினார். அது அங்கே அவசர பார்க்கிங் செய்திருந்த மற்ற வாகனங்களையும் சாய்த்தவாறு சரிந்தது.

த்சொ த்சொ என்று நிறைய சப்தம் எழுந்தாலும் யாரும் அந்த நிகழ்வைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எல்லோர் கவனமும் காவேரியின் மேலேயே இருந்தது.

அரைக்கணம் கூட வீணாக்க விரும்பாத ‘கரைவே’ படித்துறையில் பாய்ந்து இறங்கினார். அவரது முழு உருவமும் ஒருசில நிமிடத்துணுக்குகளில் படித்துறையில் மறைந்தது. எனக்கும் நாடி நரம்பெல்லாம் துடிக்க அனிச்சையாகக் கதவைத் திறந்து வெளியில் இறங்க எத்தனித்தேன். ஐயையோ என்று என் டிரைவர் அலறினார். அதன் எதிரொலி வெளியிலும் கேட்டது.

எங்கள் வண்டியை ஒட்டியவாறு நிறைய வாகனங்கள் சிக்கிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒருவர்தான் நான் கதவைத்திறக்க முற்பட்டதால் தாக்குதலுக்கு உள்ளாகி அலறியிருக்க வேண்டும். நான் அவருக்குக் கேட்காதபடி அவரிடம் மன்னிப்பு கோரினேன். அவர் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கக் கூடும்.

அடுத்த சில நிமிடங்களில் நெரிசலில் முன்னேற்றம் கண்டது. மூர்த்தி வெகு லாவகமாக வண்டியை அடித்து ஒடித்து பக்தபுரி சந்தில் ஒரு ஓரமாக நிறுத்தினார். அதற்குள் நான் என் ஜோடுகளையும் காலுறைகளையும் களைந்திருந்தேன். வண்டி நின்றவுடன் கீழே இறங்கி புத்தி பேதலித்தவனைப்போல் நதியை நோக்கி ஓடினேன். சார் சார் என்று அலறியவாறு மூர்த்தி என்னைத் தொடர்ந்தார்.

நான் வேகமாக டிராஃபிக் கும்பலைக் கிழித்துக் கொண்டு காவேரியின் உயர்ந்த கரைச்சுவர்களைப் பெயர்த்து விடுபவன் போல் போய் முட்டினேன். அங்கு கட்டைச்சுவர்களில் ஏற்கெனவே நிறையப்பேர் கொலு பொம்மை போல் அமர்ந்திருந்தனர். அவர்களை என்னால் பின்னால் பிளக்க இயலவில்லை. படித்துறை எங்கே என்று புலப்படவில்லை. அதற்குள் மூர்த்தி என்னை அணுகி விட்டிருந்தார். சார்.. படித்துறை இங்கிட்டு சார் என்று வேறொரு திசையைக் காட்டினார். நான் தலையில் அடித்துக் கொண்டு ‘அங்கிட்டு’ விரைந்தேன்.

படித்துறையை அடைந்து நெஞ்சு கொள்ளாத ஆவலில், காவேரி வந்திருக்கக் கூடாது என்ற இறைஞ்சலில் நதியை எட்டிப் பார்த்தேன். தூக்கிவாரிப் போட்டது.

காவேரி நுழைந்து விட்டிருந்தாள். எதிர் கரையில் சற்று முன்தான் நுழைந்திருக்கிறாள். கல்லூரியை ஒட்டி ஒரு ஒழுங்கில்லாத பரவலில் வேகமாக கிழக்கை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அரைக்காதப் பிரயாணத்தில் வடக்கே திரும்புகிற அவள் உத்தரவாகினியாக மாயவரம் வள்ளலார் கோயில் வரை சென்று புகழ் அடையப்போகிறாள். நான் பார்த்த போது வடக்கே திரும்பியிருந்தாள்.

மூர்த்தியிடம் நான் கீழே போகலாம் வாங்க என்று அழைத்தேன். அவரும் ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகத்தோடு போகலாம் என்றார். துரிதமாக கீழே இறங்கினோம்.

மேலே இருந்த போலீஸ்காரர் ஒருவர் எங்களைப் போகக் கூடாதென்று தடுக்க, மூர்த்தி அவரிடம் சப்தமாக என்னை ஏதோ ஜில்லா கலெக்டரைப்போல அறிமுகப் படுத்தினார். அவர் அசுவாரசியமாக அதெல்லாம் ஜரிப்பா… நீ யாரா இருந்தா என்ன? எறங்க விடக்கூடாதுன்னு உத்தரவு.. தண்ணி வர ஃபீடுலே பிரதம மந்திரியா இருந்தாலும் இலுத்துக்கிட்டு போயிறும் தெரியும்ல?

எனக்கு உடனே ஜலசமாதியடைந்த மகான்களின் ஞாபகம் வந்து மெய் சிலிர்த்தது. அப்படி ஒரு பாக்யம் காவேரியில் கிடைக்க பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்று நான் கூறியதைக் கேட்டு அவர் தலையில் அடித்துக் கொண்டார். அதற்குள் சாலையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வில் அவர் கவனம் சிதற, நாங்கள் சந்தடியில்லாமல் நதியில் நழுவினோம்.

மனிதமிருகங்கள் படித்துறை பூராவும் நாசம் பண்ணியிருந்தன. நதியிலும்தான். கவனமாக இறங்க வேண்டும் என்று மூர்த்தி கூறியதை ஏற்று மெதுவாக இறங்கினேன். எவ்வளவு தடங்கல்கள்? கரைவேட்டி எப்படி அவ்வளவு வேகமாக இறங்கினார் என்று ஆச்சரியமாக இருந்தது. இனிமேல் கறைபடுவதற்கு அவரிடத்தில் என்ன பாக்கியிருக்கப் போகிறது?

என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவாறு மூர்த்தி அது முந்தின படித்துறை சார் என்றார்.

ஓஹோ …

அங்கியும் இப்படித்தான் இருக்கும் சார் என்றார். எனக்கு அது சிறு ஆறுதலைக் கொடுத்தது.

நாங்கள் ஆற்றின் மணற்பரப்பை அடைந்தோம். அங்கும் மனிதமிருகங்களின் நாசவேலைகள் தென்பட்டன. இப்போது நதி தீவிரமடையத் தொடங்கியிருந்தது தெரிந்தது. அக்கரையில் ஓரிரு மாடுகள் நதியோட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறத் தொடங்கியிருந்தன. எங்கிருந்தோ ஒருவன் ஈரம் காயாத கோலொன்றை உயர்த்தியவாறு “ஹை ஹை” என்று சப்தமிட்டவாறே மாடுகளை நோக்கி ஓடினான்.

நாங்கள் கழிவில்லாத ஓரிடத்தில் மனங்கொள்ளாத திருப்தியில் சௌகரியமாக நின்று கொண்டோம். மேற்குப்புறமாக திரும்பி வாகாக நின்று கொண்டோம். நூறடி தூரத்தில் பாலக்கரை. கு.ப.ராக்களும் மேதையான தி.ஜானகிராமன்களும் உருகி உருகி காவேரியோடு ஒன்றிய சரித்திரம் கண்முன் ஒரு காட்சியாக விரிந்தது.

இப்போது பாலம் முழுவதும் மனிதத் தலைகளால் நிரம்பிக் கிடந்தது. ஒட்டுமொத்தக் கும்பகோணமுமே இந்த நிகழ்வைக் கொண்டாடுகிறது என்ற நினைப்பே என்னைப் பெருமிதம் கொள்ள வைத்தது.

பாலத்தின் கீழ் மதகுகளில் நீரோட்டம் அதிகரித்து திவலைகள் திமிறெடுத்து எகிறுவது தெரிந்தது.

நதி துரிதமாக கவனிக்கப்படாத மணற்பரப்பில் ஒரு குழந்தையைப்போல் இங்கும் அங்கும் ஓடி நனைத்துக் கொண்டிருந்தது.

கயிற்றை அவிழ்த்துவிடப்பட்ட கன்று தன் தாய்மடியை அடையும் அவசரத்தில் இதோ இந்த நதி மண்ணை அடைந்து கொண்டிருக்கிறது.

இந்த மண்ணும் தாய்ப்பசு போல் மடியை வாகாக கன்றுக்குட்டிக்குக் காட்டுவது போல் வாஞ்சையுடன் காட்டிக் கொண்டிருக்கிறது.

நான் என் கால்களைத் தளர்த்திக் கொண்டேன். கவனம் முழுதும் என் பாதங்களில் நிறுத்திக் கொண்டேன்.

எத்தனையோ காலமாக நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

என் கால் விரல்களை நீர் லொகுவாக பாதங்களடியில் நுழையுமாறு தளர்த்திக் கொண்டேன்.

குரூப் போட்டோவிற்காகக் கண்களைப் பிடிவாதமாகத் திறந்து வைத்துக் கொள்வது போலக் கண்களை அகலமாகத் திறத்து வைத்துக் கொண்டேன்.

வந்தே விட்டது காவேரி. குறுகுறுவென்று பாதங்களில் சுழித்துக் கொண்டு சென்றது. கடலலை போல காலடியில் மண்ணை வழித்துக் கொண்டு போகவில்லை. மாறாக மண்ணை முத்தமிடும் வேட்கையோடே வந்தாற்போல் இருந்தது.

என்னைச்சுற்றியும் நீர், ஒரு படலம் போல சூழ, நான் கட்டப்படாத தெப்பம் போல அதில் மனதால் அலைபாய்ந்தேன்.

நான் எதிர்பார்த்தது போலத் தண்ணீர் குளிர்ச்சியாக இல்லை. மாறாக வெதுவெதுப்பாக இருந்தது.

ரொம்ப வருசமாக் காஞ்சு கெடக்குல்ல பூமி என்றார் மூர்த்தி.

உண்மைதான். இனி குளிர்ந்து போகும். தாய்ப்பால் அருந்திய குழந்தை போல் பூமி இனி குளிர்ந்து தான் போகும்.

அழுக்கையும் குப்பைகளையும் வாரிக் கொண்டு வந்தாலும் இவள் யுகங்களுக்கும் தாய்ப்பால் ஊட்டுகிற தாய்தானே?

நீரின் வேகம் அதிகமாகி, அது விழுங்குகிற பரப்பளவும் அதிகமாகிக் கொண்டே வந்தது.

நீர்மட்டம் முட்டிக்கால் அளவு வந்த போது மூர்த்தி, போகலாம் என்றார். நான் பிறப்பில் தஞ்சாவூர்க்காரன் என்பதிலும் இந்த நதி என்னுடைய உடைமை என்ற மிதமிஞ்சிய மமதையில் அவ்வளவு அழுக்கான நீரில் என் இரண்டு கைகளையும் செலுத்தி, கை கொள்ளுமளவும் அள்ளித் தலையில் தெளித்துக் கொண்டேன்.

அன்று காலைதான் என் அப்பா கல்லணையைப் பற்றிய பெருமையைக் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.

மண்ணும் சுண்ணமும் மட்டுமே கொண்டு இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னால், நவீன தொழில் நுட்பமில்லாத காலத்தில் தடுமாறிக் கொண்டிருந்த, புறநானூறுகளில் பெரும்பாலும் கொடுங்கோலன் என்று தூற்றப்பட்ட , கரிகால் பெருவளத்தான் கட்டிய அணை. வெள்ளைக்காரன் பிரமித்துப்போய் அந்த காலத்திலேயே “Grand Anaicut” என்று நாமகரணம் சூட்டிய அணை.

முக்கொம்பு வரை கரை காணமுடியாத அகண்ட காவேரி கல்வீசும் இயற்கைக் “கவண்” மாதிரி இரண்டாகப் பிரிந்து வடக்கே அகலமாய் கொள்ளிடமாகவும் தெற்கே பலப்பல சிற்றாறுகளாகச் சிதறப் போகிற காவேரியாகவும் பிரிகிறது.

கல்லணை காவேரியில் கட்டப்பட்டாலும் கொள்ளிடம் ரகசியமாக வந்து காவேரியிடம் குசலம் விசாரித்துச் செல்வதால் சீரங்கம் தீவு உருவாகிறது.

கொள்ளிடம் கிழக்கே பிரயாணிக்கிற மற்ற இந்திய ஆறுகளைப்போல ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கில் பாய்ந்து சிதம்பரத்திற்கு சற்றே தெற்கில் எந்தவித ஆரவாரமும் இன்றிக் கடலில் கலந்து விடுகிறது.

ஆனால், காவேரி, ஒரு ஜீவநதியாய், கிளைகிளையாய் சோழதேசம் எங்கும் வியாபித்து புகாரைச் சுற்றுலாத்தலமாக்கிவிட்டு கடல் சேர்கிறது. எவ்வளவு ஆறுகள். எவ்வளவு ஊர்கள். எவ்வளவு க்ஷேத்திரங்கள். பாடல்கள். பதிகங்கள். கலைகள். ஒரு தேசமே உச்சத்திற்கு போவதற்கு இந்த சீறிப்பாய்ந்த நதி தானே காரணம். கரிகாலன் நிஜமாகவே பெருவளத்தான்தான்.

அவனுடைய ஆறுகள் அவன் தேசமெங்கும் பரவி பொன் விதைத்தன. வடக்கே கொள்ளிடக்கரையில் அவன் பல்லவனைத் தேக்கினான். தெற்கே பாண்டியனை பேராவூரணியில் விரட்டினான். (ஆவுடையார் கோயில் பாண்டியன் பிரசாதம்).

இந்த இடைப்பட்ட தேசம் அவனுடையது. வளப்படுத்தப்பட்டது. பொன் விளைவித்தது. காவேரியால் நன்கு அறுபட்டது அல்லது அறுக்கப்பட்டது. மாயவரம் தாண்டி காவேரி சரேலென்று குறுகி “ஆடு தாண்டும் காவிரி”. அதற்கு மேல் விளைச்சல் பூமியல்ல. காவிரி நீர் கடலுக்குத்தான் போகும். காவேரியின் அவசியம் அங்கு அவ்வளவாக இல்லை.

திருச்சியில் இருந்து மாயவரம் 55 மைல் தூரத்திற்குள் ஒன்றேகால் மைலுக்கு அகண்டிருந்த நதி ஆடு தாண்டுகிற நதியாகி விடுகிற ஆச்சரியம் நிகழ்கிறது. அங்கிருந்து வடக்கே இருபது மைல் அளவில் இதே நதியின் பிரிவு, ஒரு மைல் அகலம் இருக்கிறது. இதைவிட சிறிய நதிகள் பாலாறு, பெண்ணை, பொருனை எல்லாம் அதே மிதப்பில் அதே வனப்பில் அதே அகலத்தில் கடல் சேர்கின்றன. 750 கி.மீ. தூரம் பிரயாணிக்கிற எந்த நதிக்கும் இந்த அவலம் நேரவில்லை.

ஊன்றிக் கவனித்தால் சாந்தமாக கவனிப்பாரற்று, ஒழுங்கற்ற ஒழுங்கில் கடல் சேர்கிற கொள்ளிடம் ஒரு பெரிய நதிக்கான சகல சாமுத்திரிக்கா லட்சணங்களையும் பெற்றிருக்கிறது.

என்றால், நான் இதோ இனம்புரியாத காதலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நதி, இதோ என் பாதங்களையும் விரல்களையும் ஒரு நாய்க்குட்டி போல மிதமிஞ்சிய சந்தோஷத்துடன் விரட்டி விரட்டி முகர்ந்து பார்த்து விட்டுச் செல்கிற நதி, கடைசியில் கரிகாற்சோழன் சுயநலத்துடன் தன் தேசத்திற்காக வெட்டிக் கொண்டது தானோ?

!!!!!

2 Comments on “காவேரி (தா)யார்/கணேஷ்ராம்”

Comments are closed.