யோகி இன்றொரு சேதி -120/விசிறி சங்கர்


O
90 களில் ஒரு ஆகஸ்ட் 15 ல் சிவகாசி நாடார் சத்திரத்தில் அறையெடுத்து தங்கியிருந்த அடியேன், காலையில் அருணாசலேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்து வெளியே வந்த போது பள்ளிக்குழந்தைகள்
சிறிய தேசிய அட்டைக் கொடியை தங்கள் சட்டைகளில் அணிந்து பள்ளி கொடியேற்றத்துக்கு செல்வதைப் பார்த்து உற்சாகம் அடைந்து 25 சிறிய அட்டைக் கொடிகளை வாங்கி, சுவாமி சன்னதித் தெரு அருகே இருந்த தையல் கடையில், அதை ஒரு நாடாத் துணிக் கயிறில் மாலையாக தைத்து வாங்கினேன். இது விசிறி சுவாமிக்கு அணிவிக்க கொண்டு செல்வதாக கூறியதால் , அவர் தைத்தற்கு கூலி வாங்க மறுத்து விட்டார்.
O
அன்று காலை 10 மணி தரிசனத்திற்கு யோகி ஆஸ்ரமம் சென்றேன். அப்போது பகவான் அருட்கூடம் ( GRACE ) ஹாலில் தரிசனம் அளித்த காலம். அங்கு வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்தில் தேசியக் கொடி மாலையை சமர்ப்பித்து விட்டு அன்பர்களோடு அமர்ந்து கொண்டு நாமம் கூறிக் கொண்டிருந்தேன்.
O
பகவான் வந்து அமர்ந்ததும் பகவானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கப்படும் பூ,மாலைகள், பழங்கள், கொண்ட தாம்பாளங்கள் பகவான் முன் வைக்கப்பட்டன
அடியேன் சமர்ப்பித்த சிறிய தேசியக்கொடி மாலை மீது, பெரிய பூமாலைகள் வைக்கப்பட்டு அது கிட்டத்தட்ட மறைந்தே இருந்தது.
O
பகவான் தாம்பாளத்தில் சமர்ப்பிக்கப் பட்டிருக்கும் எல்லா மாலைகள், பழங்களை தொட்டு ஆசிர்வதிப்பதுண்டு. அன்றும் அது நடந்தது. மாலைகளுக்கு அடியே சிக்கியிருந்த தேசியக்கொடி மாலையை பகவானே மெதுவாக வெளியே எடுத்தார். அதை ஆர்வமுடன் பார்த்த அவர் தாமே தமது கழுத்தில் அதை அணிந்து கொண்டார். அன்பர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். ஆஸ்ரம போட்டோகிராபர் புகைப்படம் எடுக்க முனைந்தார். யோகி ஒரு விரலைக் காட்டி அவரை படம் எடுக்காது நிறுத்தி வைத்தார். அந்த சிறிய மாலையில் யோகி கழுத்தருகே ஒருகொடி சற்று திரும்பி இருந்தது. அதை நேராக திருப்பி வைத்தபின் , அவரை புகைப்படம் எடுக்க மீண்டும் அனுமதித்தார்.
O
சிறிது நேரம் அந்த தேசியக் கொடி மாலையை யோகி தமது கழுத்திலேயே அணிந்திருந்தார்.
பிறகு அன்றைய டிரஸ்டி திரு மணி சாரை அழைத்து அந்த மாலையைக் கழற்றி அவரிடம் தனியாகக் கொடுத்து ஆஸ்ரமத்திற்குள் வைக்குமாறு கொடுத்தனுப்பினார்.
O
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தில், இந்த இனிய நிகழ்வை நினைவு கூர்ந்து மகிழ்வோம் !
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா