பாரி மகளிர் திருமணம் நிகழ்ந்த இடம் கரபுரீஸ்வரம்/கணேஷ்ராம்

நீண்ட காலமாக இருந்த ஆசை இன்று நிறைவேறியது.
அவசர வேலையாக நேற்றிரவு சென்னை வந்து விட்டு, இன்று கோவை திரும்பும் வழியில் அதிர்ஷ்ட வசமாக உத்தமசோழபுரத்தில் கரபுரநாதர் கோயில் திறந்து இருந்தது.

ஒவ்வொரு முறை சேலம் வழியாகவோ, சேலத்திற்கோ வரும்போதெல்லாம் பார்க்கக் கிடைக்காதது இன்று வாய்த்து விட்டது.

நல்ல வேளை கூட்டம் இல்லை. அதைவிட கோயில் குடமுழுக்கு முன்னிட்டு அடுத்த ஞாயிறு முதல் சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும் என்றார்கள்.

அர்ச்சகரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

திருமணம் ஆகாதவர்களுக்கான வேண்டுதல் நிறைவேறுகிற கோயில்.

காரணம் சிலிர்க்க வைத்தது.

மூவேந்தர் சதியில் நாட்டைப் பறி கொடுத்து, உயிரையும் இழந்த வள்ளல் பாரியின் இரு மகள்களுக்கும் ஔவையார் மலயமான் காரியின் மகன்களுக்குத் திருமணம் செய்வித்த இடம்.

“அற்றைப் பிறை அவ்வெண்ணிலவில்” என்று பிற்காலத்தில் கையறு நிலையில் பாடிய அங்கவை, சங்கவை என்கிற சகோதரிகளான பாரி மகளிர் அழகில் மையல் கொண்ட மூவேந்தரும் சுயம்வரத்தில் குழப்பம் ஏற்படுத்தி, நியாயம் கேட்ட பாரியை வீழ்த்தி, நாட்டையும் அபகரித்துக் கொண்டனர்.

இரட்டைப் புலவர்களில் ஒருவரான கபிலர், பாரியின் நண்பர், கடுமையான ப்ரயாசத்திற்கப்புறமும் திருமணம் நடத்த முடியாமல் வடக்கிருந்து உயிர் துறந்தார்.

அனைவராலும் கைவிடப்பட்ட பாரி மகளிர் மிதமிஞ்சிய ஏழ்மையில் ஒரு குடிசையில் வாழத் துவங்கினர்.

நல்ல மழைநாள் ஒன்றில் ஔவையார் எதேச்சையாக அந்த வழி சென்றார். மழையில் நன்றாக நனைந்து விட்ட அவர், நடுக்கம் தாங்காமல், துடைத்துக் கொள்ள துவாலை நாடி, அங்கே பரிதாபமாக இருந்த குடிசையின் வாசல் படலைத் தட்ட, அங்கவை திறந்து பார்த்தாள்.

ஔவை அவளிடம் துவட்டிக் கொள்ள துணி யாசிக்க, அவள் ஒரு துணியைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

தன்னை ஈரம் போகத் துவட்டிக் கொண்ட ஔவை, அந்தத் துணியைப் பார்த்து அதிசயித்தார்.

அது ஒரு நீல நிற பெண்கள் அணியும் மேலாடை. மிகவும் விலையுயர்ந்தது.

இவ்வளவு ஏழ்மையில் குடிசையில் வசிக்கும் பெண்ணிடம் இவ்வளவு விலையுயர்ந்த சீலை ஏது என்றும் அந்தப் பெண் யார் என்று கேட்க, அவள் தன்னை பாரியின் மூத்த மகள் அங்கவை என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.

அதிர்ந்து போன ஔவை, அவர்கள் நிலை கண்டு கண்ணீர் உகுத்து, “ஆஹா, பாரி மகளிருக்கா இந்தக் கதி? பெண்ணே, உனக்கு ஒரு சகோதரி உண்டே? அவள் எங்கே” என்று கேட்க,
“அம்மையே, தாங்கள் துவட்டிக் கொண்டு இருக்கும் இத்துணி அவளது சிற்றாடை என்பதால் வெளியே வர இயலாதவளாய் உள்ளே இருக்கிறாள்” என்றாள்.

கண்ணீர் உகுத்த ஔவை பாடிய பாடல் தான் இது.

பாரி பறித்த பறியும்
பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் –
சேரமான்
வாராய் என அழைத்த வாய்மையும்
இம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்!’

(இந்தப் பாடல் ஹிந்தி ப்ரசார சபா வாயிலாக என் பத்து வயதில் இந்தி படித்த போது படிக்க நேர்ந்த தமிழ்ப் புத்தகங்கள் ஒன்றில் படித்தது. உவேசாவின் நல்லுரைக்கோவை எல்லாம் கூட இந்தி படிக்க நேர்ந்த காலத்தில் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டவையே. தமிழ் ஒரு பாடமாகப் படித்த பன்னிரண்டு வருடங்களில் ஒரு வருடம் கூட இந்த மாதிரி இலக்கியங்கள் ஒரு அழகியல் அனுபவமாகப் பயிற்றுவிக்கப் பட்டது இல்லை என்பது கனமான உண்மை. கல்லூரியில் நான் தமிழ் படிக்க இயலாததால் அதுபற்றித் தெரியவில்லை)

அங்கேயே ஔவை அவ்விருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாய் சபதமேற்கிறாள்.

பல நாடுகளில் அலைந்து திரிந்து ஒன்றும் நடக்கவில்லை.

மூவேந்தரைப் பகைத்துக் கொள்ள யாரும் துணியவில்லை.

இம்முறை ஔவையே மூவேந்தரிடம் சென்று வாதிட்டு அவர்களை மனமாற்றம் செய்கிறார்.

மூவேந்தர் பகையகன்றதனாலும், ஔவையின் கோரிக்கையைத் தட்ட முடியாமலும் காரி தனது இரு மகன்களுக்குப் பாரி மகளிரை மணமுடிக்கிறான்.

இவ்வளவு சிறப்பு பெற்ற பாரி மகளிர் திருமணம் நிகழ்ந்த இடம் கரபுரீஸ்வரம்.

பூசைக்காக சிறுவனின் கரம் எட்டுவதற்காக அழகாக வாகாகத் தலை சாய்த்து இருக்கும் இறைவனின் கோயிலின் சுவர்களில் மூவேந்தர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன.
வாசலில் ஔவையாரின் நெடிதுயர்ந்த சிலை இருக்கிறது.

சிறிய ஆனால் மிகவும் அழகான கோயில்.