செருப்பு/ரமணன் வி.எஸ்.வி 

“அம்மா இன்னிக்காச்சும் வாங்கித்தாங்க அம்மா. காதர் பாய் கடையிலே நான் பார்த்தது இன்னும் அது இருக்குமா”.

“பார்க்கலாம்ப்பா. இன்னிக்கு சீட்டுக்குப் பணம் கட்டணும். நாளை வியாபாரத்தில் கடையில் வரதைப்பார்த்துட்டுசயாங்காலமா போலாம்”

சரி என்று அரை மனதோடு தலையாட்டுகிறான் கணபதி. வரும் அழுகையை அடக்கிப் பையன் பார்க்காமல் கண்ணைத்துடைத்து கொள்கிறார் காவேரி.

அந்தச் சிறுவன் கேட்டது புதுச்செருப்பு. கடந்த ஒரு மாதமாகக் கேட்கிறான். காவேரியால் வங்கித் தர முடியவில்லை. குழந்தையைக் கொடுத்துவிட்டு கணவன் கைவிட்டு காணாமல் போனபின் வாழ்க்கையுடன் போராடி இந்தப் பையனைவளர்த்துக்கொண்டிருப்பவள். வீட்டு வேலை, கட்டிடத்தொழிலாளியெனப் பல அவதாரங்கள் எடுத்ததில் அவள் புரிந்துகொண்டது எங்கும் தன் பெண்மைக்குப் பாதுகாப்பில்லை என்பதைத்தான்.

இறுதியாக அவள் செய்த துணிவான முடிவு தான் இந்தச் சொந்தப் பலகாரகக்கடை. ராமநாதபுரம் அருகில் தேசியநெடுஞ்சாலையைத் தொட்டுக்குக்கொண்டிருக்கும் ஒரு சின்னக் கிராமத்தின் நுழை வாயிலில் அரசின் புறம்போக்கு இடத்திலிருக்கும் சிறு குடிசைதான் அவளுடைய வீடு கடை எல்லாம். திண்ணையிலிருக்கும் அடுப்பும் சமையல் சாமன்களும் அங்கு மாட்டப்பட்டிருக்கும் கிருஷ்ணன் படமும் தான் அவளுடைய சொத்து.

அருகில் எழுந்துகொண்டிருக்கும் பெரிய பிராஜக்டின் பணியாளர்கள் தான் அவளுடைய கஸ்டமர்கள். பேர்தான் பலகாரக்கடையே தவிர அதிகம் விற்பது டீ, காபி தான். காலை நேரத்தில் வேலைக்குப் போகும் முன் வரும் சில தொழிளார்களுக்கான இட்லி, வார இறுதி சம்பள நாளின்போது தவறாமல் வீட்டுக்கு வாங்கிப்போகும் வாடிக்கையாளர்களுக்காகப் பஜ்ஜி வடை, போண்டா போடுவது என்றளவில் தான் வியாபாரம் .காலை 10 மணிக்கும் மதியம்3 மணிக்கும் கணபதி ஒரு பிளாஸ்க்கில் டீ அடுக்காகச் சொருகிய அட்டை டம்பளர் சகிதம் தொழிளார்களிடம் ஒரு ரவுண்ட்போய் கப் 3 ரூபாய் என்று டீ கொடுத்து காசை வாங்கி வருவான்.

யாருக்கும் கடன் கிடையாது, கடையில் சிகரட் விற்பனை செய்வதில்லை உட்கார்ந்து பேச வசதி கிடையாது. என்றகாவேரியின் கட்டுப்பாடுகளினால் கஸ்டமர்கள் குறைவுதான். என்றாவது கம்பெனி அல்லது பிராஜக்கெட் அதிகாரிகள்மீட்டிங், என்றால் கூடுதலாக 25 கப் டீ விற்பனையாகும். காவேரியின் கடையில் வாங்கிய டீயை “உங்களுக்காகவேராமநாதபுரத்திலிருந்து கொண்டு வந்தது” என்று அழகான பீங்கான் கப்புகளில் கொடுத்து அந்த சைட்டின் காண்டிராக்டர்பாராட்டுக்களை வாங்கிக் கொள்வது காவேரிக்குத்தெரியாது.

அன்று நாள் துவங்கியதிலிருந்தே பரப்பாகியிருந்தது. அந்தப் பகுதியில் காவேரி அதுவரை பார்க்காத மனிதர்கள் பலர் வந்துகொண்டிருந்தார்கள். சிலர் கடையில் டீ சாப்பிட்டார்கள். கடையின் முன்னால் மெல்லக் கூட்டம் சேர்ந்தது. யாரின்வரவுக்கோ காத்திருந்தார்கள். காவேரி தெரிந்தவர்களுடன் கூட அதிகம் பேசமாட்டார். அதனால் புதியவர்களிடம் என்னவிஷயம் என்று கேட்கவில்லை.

சற்று நேரத்தில் சர் என்று ஒரு கார் வந்தது அதிலிருந்த இறங்கிய ஒரு கரை வேட்டி வெள்ளை சட்டை மனிதர்.” தலைவர்கூட்டு ரோட்டுக்கு வந்திட்டு இருக்கார். எல்லோரும் அங்கே வாங்க, மினிஸ்டர் வர பாதையை மாத்திட்டாங்களாம். அதனால் நாம் அந்த ரோடுக்குதான் போகணும் சீக்கிரம் வாங்க என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப்போனார்

மிக வேகமாக ஓடி வந்த கணபதி “அம்மா சீக்கிரம் இன்னும் இரண்டு பிளாஸ்க்க்கு டீ போடும்மா. மெயின் ரோட்டில் ஒரேகூட்டம் கட்டிடத்துக்குக் கொண்டு போன டீயை எல்லாம் அவங்க 5 நிமிஷத்தில் வாங்கிட்டாங்க. கப் 5 ரூபான்னுகொடுத்தேன். என்று தான் சம்பாதித்த 100 ரூபாயை காவேரியிடம் கொடுத்தான்.

அடுப்[பில் கொதித்துக்கொண்டிருந்த டீயை பிளாஸ்கில் ஊற்றிக்கொண்டே எதுனாச்சும் அரசியல் கூட்டமாடா? என்றார்

என்ன கட்சின்னு தெரியல்லம்மா எல்லாரும் கருப்பு கொடி வைச்சிருக்காங்க. ஆளுங்க வந்திட்டே இருக்காங்க என்றுசொல்லிக்கொண்டே பரபரப்புடன் பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டான் கணபதி.

“சூவுதானமாக இருந்துக்கோ காசைப் பத்திரமாக வைச்சுக்கோ” என்று சொல்லுவதை காதில் வாங்கக் கணபதி அங்குஇல்லை. இந்த பிளாஸ்க் டீ முழுவதையும் விற்று காலிசெய்யும் ஆர்வம் அவனை ஓடச்செய்திருந்தது.

“தமிழகத்தை வஞ்சிக்காதே !, உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமுல் படுத்து ! ” என்ற முழக்கங்கள் தொலைவில் தலைவரின் காரைப்பார்த்ததும் உச்ச ஸ்தாயில் ஒலிக்கத்துவங்கியது. தலைவரின் கார் அருகில் வந்ததும் அவர் பெயரைச்சொல்லி வாழ்க கோஷங்கள் எழுந்தன.

காரின் முன் சீட்டிலிருந்து நிதானமாக இறங்கிய தலைவர் கூட்டத்தைப் பார்த்து கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு பேசஆரம்பித்தார். “நமது கருப்புகொடி கண்டன ஆர்பாட்ட அறிவிப்பினால் மத்திய அமைச்சர் கிராமத்துக்கு வரும் பாதையை மாற்றிவிட்ட தகவல் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதனால் தான் இடத்தை மாற்றி இங்கு போராட்டம் செய்யவந்திருக்கிறோம். அமைச்சர் கார் வரும்போது கறுப்புக்கொடியை அசைத்துக் கோஷமிடவேண்டும். நம் நோக்கம் அவர் காரை மறிப்பதில்லை. நமது கண்டனத்தை அவருக்குப் புரிய வைக்க அவர் வருமிடத்தில் நின்று கருப்பு கோடிகாட்டுகிறோம். அதனால் கார் வரும்போது எவரும் குறுக்கே பாயக் கூடாது. எந்த அசம்பாவிதமும் கூடாது. உங்கள் அருகிலிருப்பவர்களைக் கவனித்துக்கொண்டிருங்கள். மாற்றுகட்சிகார்கள் ஊடுருவி எதாவது அராஜகம் செய்து பழியைநம்மீது போடுவார்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.” பேச்சை முடிப்பதற்குள் “மாவட்ட எஸ்பி பேசுகிறார் சார்” என யாரோ போனைக்கொடுக்கத் தலைவர் போனில் பேசியபடியே காருக்குத்திரும்பினார்.

வெய்யிலைப்போலவே கூட்டமும் அதிகமாகிக்கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த வேன்களும் மோட்டார் சைக்கிள்களும் அந்தச் சாலையின் இருபக்க வெளிகளில் நிறைந்திருந்தன.

“அம்மா இந்த பிளாஸ்க்கும் காலி. சீக்கிரம் இன்னொண்ணு ரொப்பு. கூட்டம் அள்ளுது. கப் ஆறு ருபாய்ன்னு வித்திட்டேன்” என்று கையில் நிறைந்த நோட்டுகளை அம்மாவிடம் கொடுத்தான் கணபதி.

“இந்த பிளாஸ்க்கு மட்டும் தான் பாலிருக்குடா. அதோடு போதும்”. என்ற காவேரியின் மனதுக்குள் மகனின் சாமர்த்தியத்தைக் கண்டு மகிழுந்தாலும் பின் என் இந்தப்பையனுக்குப் படிப்பு ஏறவில்லை? என்ற வருத்தமும் எழுந்தது

.“டீ இல்லான தின்றதுக்கு ஏதாவது பண்ணு. அதையும் வித்துருலாம். கணபதியின் கண்ணில் செருப்பின் விலைச்சீட்டுமின்னி மறைந்தது.

கூட்டம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. எப்படி எங்கிருந்து இத்தனை பேர் இந்த கிராமத்துக்கு வந்தார்கள்? என உள்ளூர்க்கார்களும் ஆச்சரியத்தோடு அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தனர்.

“உங்களுக்கு இந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. கலைந்து போகச்சொல்லுங்கள்” என்ற அந்தப்போலீஸ்அதிகாரியிடம் “அமைச்சர் வருவதாக அறிவிக்கப்பட்ட பாதையை நீங்கள் மாற்றும்போது நாங்கள் மாற்றக்கூடாதா?” என்றுஉள்ளூர் அரசியல் வாதி ஒருவர் சத்தமாக வாதிட்டுக்கொண்டிருந்தபோது மிக வேகமாக வந்த ஒரு லாரியிலிருந்துசாலைகளின் நடுவில் ரோடைபிரிக்க வைக்கும் இரும்பு தடுப்பு வேலிகள் சர சர வென்று இறங்கின. அதைச் சாலையின்இருபுறங்களிலும் பரபரவென்று நிறுத்தினார்கள் அந்த லாரியில் வந்த போலீசார். அந்த இரும்பு தடுப்புக்களிலிருந்த விளம்பரங்கள் அது மாவட்ட தலைநகரிலிருந்து வந்திருப்பதைச் சொல்லியது.

“இந்த தடுப்புக்குப்பினால் போங்க” என்று கத்தியபடி அடுத்த லாரியிலிருந்து. பெரிய கம்புகளுடனும் ஃபைபர் கிளாஸ்கேடயங்களுடனும் இறங்கினார்கள் நீல வண்ண உடுப்பு அணிந்த போலீசார். வினாடிகளில் மாறிப்போனது அந்த இடம்.

மக்கள் அந்த தடுப்புக்குப்பின் போக மறுக்க போலீஸ் அவர்களை முழுவேகத்துடன் தள்ள சில நிமிடங்களில் அந்த இடம்உணர்ச்சிகளின் சங்கம மாகியிருந்தது. கறுப்புக் கொடிகளை ஏந்திய தொண்டர்களின் கோஷத்தில் இப்போது போலீஸ்அராஜகம் ஒழிகவும் சேர்ந்து கொண்டது

.“அமைச்சரின் கான்வாய் இராமநாதபுரத்திலிருந்து கிளம்பிவிட்டது ரோஜர்” என்று அலறிக்கொண்டு வந்த ஸ்பீக்கர்வைத்த டிராபிக் கிளியரன்ஸ் ஜீப்பைப் பார்த்தவுடன் போலீஸாரின் வேகம் அதிகமானது. கம்பி தடுப்புக்கு பின்னால் போகாதவர்களை பிரம்பால் அடிக்க ஆரம்பித்தார்கள். களேபரமாகியது. தொண்டர்கள் அடிவாங்காமலிருக்க ஓட சிலர் அந்த தடுப்பின்மேலே விழுந்து அது சரிந்து மறுபக்கம் இருப்பர்வகளை அது நசுக்கியதால் வேதனையால் அவர்கள் கத்தஆரம்பித்தார்கள்

அந்த ஓலங்கள் அமைச்சரின் குழு கார்களின் அணிவகுப்பின் பைலட் ஜீப்பின் சைரன் ஒலியில் அமுங்கிவிட்டது. என்னநடக்கிறது? என்பது புரிவதற்குள் வினாடிகளில் அமைச்சரின் கார் அந்தப் பகுதியைக் கடந்துபறந்தது. அப்போது எங்கோதொலைவிலிருந்து எறியப்பட்ட ஒரு சிறிய கல் அமைச்சரின் அணிவகுப்பில் கடைசியாக வந்த காரின் மீது பட்டு தெறித்துசாலையில் விழுந்தது. தொடர்ந்து விழுந்தது ஒரு வார் அறுந்த பழைய செருப்பு..

அடிபட்டால் அடுத்தவினாடி திருப்பித் தாக்கும் விலங்குகளைப் போலப் போலீசார் நிற்பவர்கள் எல்லோரையும் தாக்கஆரம்பித்தனர் தொண்டர்கள் அலறிக்கொண்டு சிதறி ஓடினர்.

“ஐயோ என் பிளாஸ்க் – பிளாஸ்க் சார் பிளீஸ்” என்று கணபதி கத்தியதைக் கேட்க எவருக்கும் நேரமில்லை. தவறிவிழுந்தஅதை மிதித்து உடைத்துவிட்டு ஓடிக்கொண்டிருந்தது கூட்டம். பதறி ஓடிக்கொண்டிருப்பவர்களிடையே சிக்கி தடுக்கி கிழேவிழுந்த கணபதியை மிதித்துக்கொண்டே பல கால்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன. மிகுந்த கஷ்டத்துடன் எழுந்த கணபதியின் மீது விழுந்த ஒரு போலீஸ்காரின் அடியில் அவன் மயங்கி தரையில் விழுந்தான்.

சிதறிக்கிடந்த கிழிந்த கறுப்பு கொடிகள், சட்டைகள் கொடிக்கம்புகள் அறுந்தச் செருப்புகள் அடிபட்டு விழுந்திருக்கும் சிலமனிதர்கள் என ஒரு போர் நிகழ்ந்த இடம்போல் மாறியிருந்தது. அந்த இடம்

அரைமணிக்குப் பின் மயங்கிய நிலையிலிருந்து விழித்த கணபதிக்கு கண் இருட்டிக்கொண்டு வந்தது. காலில் பலமாகவிழுந்த அடி இப்போது விண்ணென்று வலித்தது. அப்போது அருகில் கிடந்த ஒற்றைச் செருப்பு அவன் கவனத்தை ஈர்த்தது. புத்தம் புதிய செருப்பு அவன் பார்த்து வைத்திருந்த அதே மாடல். அதைக்கையில் எடுத்துப்பார்த்துகொண்டிருந்த அடுத்தநிமிட,ம் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லிக்கொண்டே அவனைப் பளீரென்று அறைந்தார் ஒரு போலீஸ்காரர். “மவனே நீதான் செருப்பை வீசினயாடா?” எனச்சொல்லி தரதரவென அவனை இழுத்துக்கொண்டே ஜீப்புக்குப் போனார். கணபதிக்குஒன்றுமே புரியவில்லை. “சார் சார் என்று அவன் பேசஆரம்பிக்கு முன்னரே பளார் பளார் என்று அறை, அவனுக்கு அழுகைமுட்டிக்கொண்டு வந்தது. கால் வலி வேறு அதிகமாகிக்கொண்டேயிருந்தது.

விஷயமறிந்து போலீஸ்டேஷனுக்கு பதறி அடித்துக்கொண்டு வந்த காவேரி கணபதியை ஜட்டியுடன் உட்காரவைத்திருப்பதைப் பார்த்து கூசித் துடித்துபோனார்

.அந்த இன்ஸ்பெக்டரின் காலில் விழுந்து “ஐயா அவனுக்கு ஒன்றும் தெரியாதய்யா விபரம் பத்தாத பையன் விட்டுடங்க அய்யா என்று கண்ணீருடன் கெஞ்சினார்

“சும்மா கத்தாதம்மா ஓம் மவன் மந்திரி கார் மேல் செருப்பு எறிஞ்சிருக்கான். இது எவ்வளவு பெரிய கேஸ் தெரியமா? கேஸ் எழுதிட்டோம் நாளைக்கு ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வக்கீலோடு வந்து ஜாமீன் கேக்கச்சொல்லு. போ” என்று கத்திவிட்டு யாரோடுனோ போனில் பேச ஆரம்பித்துவிட்டார்.

கருணையை வேண்டும் காவேரியின் கதறலையும் அழுகையையும் ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை அந்தக் காக்கிசட்டையின் மரத்துப்போன நெஞ்சம்

.மதியம் கடந்துகொண்டிருந்தது. என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த காவேரி. ஸ்டேஷன் வாசலிலேயே உட்கார்ந்திருந்தார்.

சட்டென்று வந்த அந்த காரை காவேரி முதலில் கவனிக்கவில்லை. காரிலிருந்து இறங்கியவர் ஒம் மகனாம்மா? பேர் என்ன? என்ன வயசாகிறது? என்ற கேட்ட அந்தத் தொனியிலேயே இவர் நமக்கு உதவி செய்யபவர் போலிருக்கிறது என்றுநினைத்து அழுதபடி “பேர்“கணபதி சார். இந்த ஆனிக்கு 14 வயசாகுதுங்க நெடுநெடுன்னு வளர்ந்திருக்கே தவிர விபரம் பத்தாத புள்ளை படிப்பு ஏறல்ல, எங்கூட பலகாரகடையிலிருக்கான். அவனைப்புடிச்சி “ ,என்று புலம்ப ஆரம்பித்தார். கறுப்புகோட்டுடன் கம்பீரமான நடையில் ஸ்டேஷனுக்குள் நுழைந்தவரை இன்ஸ்பெக்டர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதுஅவர் உடல் மொழியில் தெரிந்தது

. என்ன சண்முகம்? ராமநாதபுரத்தில் செய்ததை இங்கும் செய்ய ஆரம்பிச்சிட்டுங்களா? ஏன்ய்யா சர்வீஸ் முழுவதும் இப்படி பொய்கேஸ் போட்டுகிட்டே இருப்பிங்களா? இதுவே பனிஷ்மெண்ட் போஸ்டிங். இங்கேயும் ஆரம்பிச்சிட்டிங்களா? என்றுசொல்லியபடியே நாற்காலியில் உட்கார்ந்தார் கிருஷ்ணத்தேவர்.

சுற்று வட்டாரத்தில் இருக்கும் மாவட்ட கோர்ட்டுகளில் மனித உரிமை, பெண் பாதுகாப்பு சமூக நீதி சிறுகுழந்தை நலம்போன்ற விஷயங்களுக்காக வழக்குப்போட்டு போராடும் வழக்கறிஞர். சமூக ஆர்வலர். இடது சாரி சிந்தனையுள்ளவர். இன்று நடந்த போராட்டத்தில் இடது சாரி அமைப்புகள் இல்லாததால் இவருடைய வருகை அந்த இன்ஸ்பெக்டருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது.

“இல்ல சார் இரண்டு சாட்சி ஸ்டிராங்க இருக்கு. காலிலிருந்து கழட்டி எறிந்ததைப்பார்திருக்காங்க சார், அரசியல் போராட்டம், சென்டரல் மினிஸ்டர்… அந்தக்கட்சி பிரஷர் அதனாலே” என்று இழுத்தவர். எறிந்த “செருப்பைக்கூடஎடுத்துவைச்சிருக்கோம் சார்.” என்று தன் மேஜையின் மீதி ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்திருந்த செருப்பை நோக்கிகையை காட்டினார்

மொதல அவன் டிரஸ்சை கொடுங்க அரசியல் போராட்ட கைதுன்னு சொல்றீங்க அப்புறம் ஏன் இந்த கிரிமினல்டீரிட்மென்ட்?

மேஜைமீது இருந்த அந்த பிளாஸ்டிக் கவரையும் அதில் உள்ள செருப்பையும் அரை நிமிஷம் பார்த்த கிருஷ்ணத்தேவர்.

“அப்படியா சரி புறப்படுங்க ராமநாதபுரம் மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்கு” என்றார்.

சற்றே திகைப்புடன் “சார் வண்டி இல்ல சார் நாளைக்குக் காலையிலே கூட்டிப் போய் ரிமாண்ட் பண்ணறோம் நீங்க வந்துஜாமின்ல எடுத்துடுங்க”.

“மிஸ்டர் சண்முகம் ! மாஜிஸ்ட்ரேட் கிட்ட போறது பையனுக்கு ஜாமீன் எடுக்கவில்லை நீங்க பொய்கேஸ்போட்டிருக்கின்னு ஆதாரத்தோடு சொல்லி உங்க மேலே கோர்ட்லேயே ஒரு புகார்கொடுத்து வழக்குப் பதிவுசெய்யத்தான்

.ஒரு மைனர் பையனை இப்படி ஸ்டேஷனில் வச்சதுக்கு சட்டத்தில் இடமில்லை. எங்கேய்யா? உங்க சாட்சிகள் அவங்களையும் வரச்சொல்லுங்க. பொய் சாட்சி கொடுத்தற்காக அவங்க மேலேயும் மாஜிஸ்டிரேட் கிட்ட ஒரு புகார்கொடுக்கணும்

.சார்…

“பின்ன என்ன சண்முகம் சட்டங்களைத்தான் மறந்திட்டிங்க, சொந்தமா சிந்திக்கிறதையே மறந்திட்டிங்களா?

இந்த புதுச் செருப்பில் சைஸ் 9 நம்பர் பளிச்சின்னு தெரியுது. இந்த சிறுபையனின் கால் சைஸ் உஙளுக்குப் பார்த்தவுடன் தெரியலையா? கழட்டி ஏறிஞ்சதைப்பார்த்த சாட்சி இருக்காங்களாம் என்ன கதைய்யா இது?

வாங்க போலீஸ் வண்டியில்லாவிட்டால் பராவாயில்ல என் காரில் போகலாம். கிளம்புங்க” என்று சொல்லிக்கொண்டேஎழுந்தார்.

“சார்,சார் அவசரத்திலே கவனிக்கல்ல. சாரி சார். மேட்டரைப் பெருசு பண்ணாதீங்க சார். பிளீஸ்”காலையில் கருணையே இல்லாமல் பேசிய காக்கிச்சட்டை இப்போது கருணைக்காகக்கெஞ்சியது

இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபளைப் பார்த்துக் கண்ணைக்காட்டியதும் அவர் கணபதியின் டிரஸைக்கொடுத்து “நீ போப்பா” என்றார்.

“அய்யா நீங்க மஹராசனாக இருக்கணும். நா கும்படற கிருஷ்ணன் சாமி நேரில்ல வந்தது போல வந்து இவனைக்காப்பாத்திட்டிங்க” என அழுதுகொண்டே அவரின் காலில் விழுந்து வணங்கினார் காவேரி.

வெளியே வந்த கிருஷ்ணத் தேவர் காத்திருந்த உள்ளூர் நண்பரிடம் “சரியான டைத்துக்கு இன்பெர்மேஷன் கொடுத்தீங்க கோர்ட்டுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. இந்த பையனைத் இவனுக வேறு தொந்தரவு பண்ணாம பாத்துங்க” என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறிப்போனார்

“நல்ல மனுஷன் மவராசன். நேரத்துக்கு வந்து காப்பத்திட்டார்டா… “நாளைக்குப் போய் உனக்குச் செருப்பு வாங்கலாம் கணபதி”.

“எனக்கு இனிமே செருப்பே வேண்டாம்மா. நளைக்கு நமக்கு வேற பிளாஸ்க் வாங்கணும்”

அந்த பதிலைக் கேட்டு ஒரு வினாடி ஸ்தம்பித்துப் போய் கணபதியைக் கட்டி அணைத்துக்கொண்டார். காவேரி =================================

2 Comments on “செருப்பு/ரமணன் வி.எஸ்.வி ”

  1. மகா பாரத த்து கிருஷ்ணன் போல , சரியான நேரத்தில் இங்கே கிருஷ்ணத் தேவர் வராவிட்டால் என்ன ஆகியிருக்கும்? இந்த கணபதி போல எத்தனை பேர்கள் பொய் வழக்குகளில் மாட்டிக் கொண்டு தவித்து வாழ்வைத் தொலைத்திருக்கக் கூடும். சிறப்பான கதை

Comments are closed.