
மேற்கு மாம்பலம் பப்ளிக் ஹெல்த் செண்டரின் ஒரு பகுதியாக இயங்கி வருவது BVSN மூர்த்தி செண்டர். இது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பயில்வதற்கான கல்விக்கூடம். நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் – ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரையிலான மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இங்கு கல்வி கற்கின்றார்கள்.
சிறப்புக் குழந்தைகள்’ ( வயது எவ்வளவு ஆனாலும் அவர்கள் குழந்தைகளே! ) என்று அழைப்பதற்கேற்ப, அவர்களைச் சிறப்பாக கவனித்துவரும் பிவிஎஸ்என் மையம், கடந்த பல வருடங்களாக ஆற்றிவரும் பணி மிகவும் மகத்தானது. ஒவ்வொரு குழந்தையின் குறை, நிறைகளை – மூளை, மனம், உடல் ரீதியான குறைபாடுகளைத் தேவையான மருத்துவ உதவியுடன் கண்டறிந்து – அதற்கான வாழ்க்கை முறைகளை கற்பிப்பதுடன், அவர்களின் அறிவுத் திறனுக்கேற்ப கல்வி, கைத்தொழில் போன்றவற்றையும் பயிற்றுவிக்கும் ஓர் உன்னதமான சிறப்பு மையம் அது !
இங்கு பணி புரியும் ஆசிரியைகள், இதற்கெனத் தனியாக சிறப்புப் படிப்பும், பயிற்சியும் பெற்றவர்கள் – குழந்தைகளின் மூளைவளர்ச்சி, மனவளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் பிரித்து, அவர்களுக்குக் கல்வியும், கைத்தொழிலும் பயிற்றுவிக்கும் இவர்களின் பொறுமையும், விடாமுயற்சியும் மிகவும் போற்றுதலுக்குரியன.
பொறுப்புணர்வும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஆசிரியர்கள் (Special Educators) இங்கு பணி புரிகின்றனர். 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா இப்பள்ளியில் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திரதினப் பரிசாக, அந்த விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!
குழந்தைகள் பள்ளிக்கூட சீருடையில், கையிலும் தலையிலும் சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை ரிப்பன்களைக் கட்டிக்கொண்டு, இரண்டு வரிசைகளாக, பாண்டு இசைக்கேற்ப நடந்து வந்தார்கள் – வரிசையாக நின்றுகொண்டு, கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசீயக் கொடிக்கு ‘சல்யூட்’ செய்து மரியாதை செய்தது கண்கொள்ளாக் காட்சி. மனவளர்ச்சி மட்டுமல்ல, உடல் வளர்ச்சியிலும் குறைகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் அவர்கள். ஆனாலும் சிறிதும் தேசப்பற்றில் குறை காணமுடியாத அருஞ்செல்வங்கள்! அவர்களை வணங்கி மரியாதை செய்வதில் என் சுதந்திர தினம் நிறைவு பெற்றதாய் நான் உணர்கிறேன்.
பி எச் சி தலைவர் டாக்டர் எம் கே ஸ்ரீனிவாசன் அவர்கள் மூவர்ணக் கொடியேற்றினார்கள். கமிட்டி உறுபினர்கள், சிறப்பு ஆசிரியைகள், அக்கம்பக்கத்து தேச அபிமானிகள் என சிறப்பானதொரு கூட்டம், இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டது மனதுக்கு நிறைவாய் இருந்தது.
இதைத் தொடர்ந்து, அந்தக் குழந்தைகள் ’மாசில் வீணையும்’ தேவாரப் பாடலையும், ’நீராரும் கடலுடுத்த’ தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலையும் பாடியது சிறப்பு. திக்கிப் பேசும் குழந்தைகள், தெளிவாக, ராகம், சுருதி பேதமில்லாமல் பாடியது வியப்பு. அதைவிட வியப்பிலாழ்த்தியது அவர்கள் பாடிய ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ பாரதியார் பாடலும், ‘வந்தே மாதரம்’ பாடலும்! பாடி முடித்து, தங்கள் பிஞ்சுக் கைகளினால் – ஒத்துழைக்காத கைகளினால் – ‘சல்யூட்’ செய்து ‘ஜெய்ஹிந்த்’ என்று சொன்னதும் மனதைத் தொட்டது. வந்திருந்த அத்தனைக் குழந்தைகளும், வரிசையாக நின்று கொண்டு, பாண்டு வாசிப்பிற்கேற்ப, கைகளையும், கால்களையும் ஒரு ஒத்திசைவுடன் உடற்பயிற்சியாக செய்தது அழகு! சிறப்பாக நடந்த இந்நிகழ்ச்சிகளின் பின்னாலிருந்த சிறப்பு ஆசிரியர்களின் உழைப்பும், ஊக்கமும் போற்றுதலுக்குரியது.
மேடையில் வீற்றிருந்தோர் சுதந்திரம், தேசீயம், மூவர்ணக் கொடியின் வரலாறு என்றெல்லாம் பேசிய அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த குழந்தைகளின் முகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி! எல்லாம் நன்றாக அமைந்தும், தேசத்தின் மீதும், கொடியின் மீதும் எந்தவிதப் பற்றும் இல்லாத – சினிமா தியேட்டரில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கக் கூட மனமில்லாதவர்களுக்கிடையே, இந்தக் குழந்தைகள் வித்தியாசமாக, ‘சிறப்பு’க் குழந்தைகளாகத்தான் எனக்குத் தெரிந்தார்கள்.
75 ஆம் வருட சுதந்திர தினம் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தது என்றால் அது சற்றும் மிகையல்ல. அதற்காக இந்த ‘சிறப்பு’ குழந்தைகளுக்கு ஆயிரம் முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களை தெய்வங்களாக எண்ணி, அவர்கள் பாத கமலங்களில் என் வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.
வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!!

அருமை டாக்டர்
வேணு
அருமையான பதிவு. மிக்க நன்றி இந்த அற்புதமான சேவை மையத்தை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு. இதுவே உண்மை யான நாட்டுப் பற்று. அங்கு பறந்தது மனித நேயத்தில் நெய்யப்பட்ட தேசிய கொடி. அங்கு நாட்டைப் பற்றின தங்களது உரை பாரதமாதாவுக்கு சூட்டப்பட்ட மணக்கும் மலர் மாலை. வாழ்க பாரதம். பெருக இப்படிப்பட்ட மார் தட்டாத, உண்மையான நாட்டுக்குப் பற்று. ஜெய் ஹிந்த்!
அருமையான பதிவு. படிக்கவே நிறைவாக இருக்கிறது. நன்றி
மனம் நெகிழ ச் செய்யும் பதிவு. சிறப்பான குழந்தைகளுக்கு சிறப்பான நாளில் சிறப்பான அங்கீகாரம், சிறப்பான உதவி. இப்படியான முயற்சிகள் பற்றி பதிவு செய்வதும் பாராட்டுவதும் மிக முக்கியம். நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் தகும்