
ஒவ்வொரு இரவும் நடை சாத்துவதற்கு சற்று நேரம் முன்பு வந்து அந்த அம்மன் கோயில் கர்ப்ப கிரஹத்தில் அம்பாள் முன் அமர்ந்து கண்ணீர் வழிய மனமுருகி அன்று தான் செய்த தவறுகளுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டு நிம்மதி கேட்டு அழுவது மளிகைக்கடை முருகேஷின் வழக்கம் .
அவன் வீட்டருகே உள்ள அந்த சிறிய கோயிலில் , அந்தச் சமயம் அவன் கூட இருப்பது அந்த அர்ச்சகர் மட்டும்தான் . அவரும் அவன் அழுது முடியட்டும் என்று வெளியே கதவு சாவியோடு காத்திருப்பார் , வெளிவரும் அவன் அவரிடம் கணிசமான காணிக்கை ஒன்றையும் செலுத்தி விட்டுச் செல்வான் .
மறுநாள் , கடையில், பொருட்களை அதிக விலைக்கு விற்பது , பதுக்கி வைப்பது , சில தீய சக்திகளுக்கு வேண்டிய பொருட்களை வரவழைப்பது என்று வழக்கம் போல் நடத்தி விட்டு , இரவு அம்பாளிடம் வந்து அழுது மன்னிப்புக் கேட்டு நிம்மதி பெற்று தொடர்வான் .
அன்றும் அப்படித்தான் . ஆனால் நீண்ட நேரமாகியும் அவன் வெளி வராததால் , உள்ளே சென்ற அர்ச்சகர் , தரையில் சாய்ந்திருந்த அவன் உடலைத் திருப்பினார் . முழு நிம்மதி பெற்றிருந்தான் அவன் .
,
.
