
ஒரு புன்னகையை சேமித்து
வைத்திருக்கிறேன்….
எதிர்வீட்டுச்சன்னல் என்று திறக்குமென்று…
மஞ்சள்அரளி பூத்துக்குலுங்கும்
செடியோரம் இருக்கும் அந்த சன்னல்
என்றும் திறந்ததில்லை…
நான் பார்த்தவரையில் எல்லாச்
சன்னல்களும் மூடித்தான் கிடக்கின்றன.
மனிதர்கள் இருக்கமாட்டார்கள்
என்று சட்டென ஒரு முடிவுக்கு
வந்துவிடாதீர்கள்….
அந்த வீட்டுவாசலில் தினமொருகோலம் பூத்துக்கொண்டுதான் இருக்கிறது.
எனது தனிமைக்கு இரைதேடும்
அலைச்சலில் …இதையெல்லாம்
கவனிக்கவேண்டியதிருக்கிறது.
அவர்களும் என்போல் என்னை
கவனித்திருக்கக்கூடும்.
மனிதர்கள் மீதான நம்பிக்கை
பொய்த்துப்போய்…
வீடுகள் வளைகளாக்கிக்கொண்டிருக்கும்
வேளையில்….
என் சிநேகமானபுன்னகை…
அவர்களுக்கு தேவையற்ற ஒன்றாய் இருக்கலாம்.
ஆயினும்….ஒருநம்பிக்கை விளிம்பை பற்றியபடி…
ஒவ்வொரு நாளும் எனக்கு
சன்னலைப்பார்த்துத்தான் விடிகிறது.
