
பாரதியார் காசியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருசமயம் ஸ்ரீ விசுவநாத சிவன் (எனது தமக்கை புருஷர்) கடையம் வந்தார். அவர் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். ஒருநாள் என்னைத் தனியாக அழைத்து, “அம்மா! நீ எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தாங்குவதற்கு உன் மனதைத் தயார் செய்து கொள்ள வேண்டும். உன் புருஷன் – பாரதி – மகா புத்திசாலியானாலும், அவன் செய்யும் காரியங்கள் மூலமாக நீ கஷ்டந்தான் அனுபவிக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. அவனுக்கிருக்கும் தாய் நாட்டு அபிமானமும், சுதந்திர ஆவலும் கட்டுக்கடங்காதவை. அவை வெளியில் தெரிந்தால் அவன் சர்க்காரின் கோபத்திற்கு ஆளாகக் கூடும் என்று விஷயமறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவன் பேசுவதைப் பார்த்தால் எல்லா வாலிபரையும் போலப் படித்து நல்ல உத்யோகம் வகித்துத் தன் மட்டில் ஸௌக்ய மாகக் குடும்பத்தாருடன் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் அவனுக்கு இருப்பதாகத் தெரிய வில்லை. ‘தேசத்தை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு எந்தத் தியாகமும் செய்ய ஒவ்வொரு வாலிபனும் தயாராயிருக்க வேண்டும்’ என்பதுதான் சதா அவனுடைய நினைப்பு. நம சாதிப் பிள்ளைகள் போலன்றி மீசையும், கிராப்பும் வைத்துக் கொண்டிருக்கிறான் – அசல் பட்டாணி போல! என்னமோ அம்மா! எப்படித்தான் நீ குடித்தனம் பண்ணப் போகிறாயோ, எனக்குக் கவலையாகத்தான் இருக்கின்றது. அந்த தேசிய விஷயங்களில் தலையிட வேண்டாமென்று நாங்கள் எவ்வளவோ கெஞ்சியாகிவிட்டது. ஒரே பிடிவாதமாய் இருக்கிறான்” என்றார். இவ்விஷயம் என்னைத் தூக்கிவாரிப் போட்டது போட்டது. “ஓர் உயர்ந்த அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்தம் அதை அனுபவிக்கக் கொடுத்து வைக்காமற் போகுமோ” என்ற ஓர் எண்ணமுண்டாயிற்று.
இப்போது தெரிகிறது – அவர் என் பொருட்டுப் பிறந்தவரல்ல; நாட்டிற்கே ஒரு புத்துணர்ச்சியை, – அழியாத தேசீய வெறியை ஊட்ட வந்தவர் என்று.
அப்போது வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளாகக் குமைந்து குமுறினேன். வெளியில் சொல்ல வெட்கம் – பயம். என் தமையனிடம் இவ்விஷயத்தைக் கூறினேன். இருவருமாக யோசித்தோம். கடைசியில் அவருடைய மனதை மாற்றுவதற்காக நான் ஒரு கடிதம் எழுதுவதென்று தீர்மானித்தோம்.
தமையன் சொல்லியதைக் கேட்டு, கல்லும் கரைந்துருகும் வண்ணம் நான் எழுதிய கடிதம் எனக்கு இப்போது பாதி மறந்துவிட்டது. மனதில் அலை மோதும் எண்ணங்களை வார்த்தைகளில் சித்தரிக்க முடியாமல் திணறினேன். ஏதோ பயனற்ற சொற்களால் கடிதத்தை நிரப்பியிருந்தேன். அப்பொழுது எனக்கு படிப்பு வாசனையே இல்லாததாலும், கிராம வாசத்தினால் நாகரிகத்தின் போக்கே தெரிய வழியில்லாமலிருந்தாலும் பாரதியார் போக்கு மனதில் அச்சத்தைத்தான் ஏற்படுத்திற்று. கடைசிவரை, என் கணவர் உயிருடன் இருக்கும் வரை, அவர் செல்லும் வழிகளால் அவரைப் பின்பற்றுவதற்கு உலகத்தாருக்கும், அவர்கள்பழிச் சொற்களுக்கும் பயந்து நடுங்கிக் கொண்டேதான் நான் நிறைவேற்ற வேண்டியிருந்தது. நாட்டுக்கே வழிகாட்ட வந்த உத்தமரை – திடீர் திடீர் என்று பழய வழக்கங்களை உதறித்தள்ளும் வழக்கங் கொண்ட பாரதியாரை – பாமர மக்கள் அர்த்தமில்லாமல் செய்யும் செய்கைகளை, அவரும் பின்பற்றவில்லை யென்பதற்காக – எனது தூரத்து பந்துக்கள் வப்பார்கள். நான் அப்போது சின்ன வயதானவளானபடியால், புண்பட்ட மானைப்போல துடிப்பேன். மொத்தத்தில் செய்யும் வகையறியாமல் துன்புறுத்தப் பெற்றேன். நிற்க.
நான் அவருக்கு எழுதிய கடிதம் பின் வருமாறு இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
க்ஷேமம் கடையம்
அநேக நமஸ்காரம். கடையத்தில் எல்லோரும் க்ஷேமம். இங்கு நம்ம விசுவநாத அத்திம்பேர் வந்திருக்கார். அவர் என்கிட்டே ஒரு சமாசாரம் சொன்னார். நீங்கள் ஏதோ தேச சுதந்திர விஷயமாகப் பாடுபடுவதாகச் சொன்னார். அதுக்காக ஏதோ ஓயாமல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களாம். சட்டத்துக்கு விரோதமாயிருந்தால் தீவாந்திரத்திற்குக் கொண்டு போய்விடுவாளாம். எனக்கு இதையெல்லாம் கேட்க ரொம்ப பயமாயிருக்கு. அதனால் நான் சொல்றதை ஒரு பொருட்டாய் மதிச்சுப் புறப்பட்டு வந்துவிடுங்கள். உங்களை மன்றாடிக் கெஞ்சுகிறேன். இதற்கு மேல் நான் என்ன சொல்ல? உங்களுக்கு என் மேல் அன்பிருந்தால் புறப்பட்டு வந்துவிடுங்கள். எந்த நிமிஷத்தில் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று எப்போழுதும் தவித்துக் கொண்டிருக்கிறேன். கெடுதல் ஒன்றும் ஏற்படக்கூடாதென்று ஸ்வாமியை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.
செல்லம்மா.
என் கடிதத்திற்குப் பதில் பின்கண்ட வண்ணமாக எழுதியிருந்தார்.
ஸ்ரீகாசி
ஹனுமந்தகட்டம்
எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ எனது காரியத்தில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை . விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப்பற்றி உன்னை சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில், தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.
உனதன்பன்
சி.சுப்பிரமணிய பாரதி.
7. நாகரிகமும் நாஸ்திகமும்/செல்லம்மா பாரதி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

Super 👌👌👌👌👌