
பாரதியாருக்கு அப்போது (ஏன் – கடைசி வரையிலும் மிக அழகாகச் சிங்காரித்துக் கொண்டு உலாவுவதில் பிரியம் அதிகம். திருநெல்வேலி ஜில்லாவில் அவரது கிராப் தலைக்காகவும், மீசைக்காகவும், நாங்கள் கேட்ட அவமரியாதை வார்த்தைகளும், கேலிப் பேச்சுக்களும் கணக்கிலடங்கா.
எத்தனை தான் பணமில்லாவிட்டாலும் ஆடை மட்டும் எப்போழுதும் புதியதுதான் அணிவார். அந்தக் காலத்தில் உயிர் பிரிவதற்குச் சிலமணி நேரத்திற்கு முன்கூட ஷர்ட்டு – கோர்ட்டுக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு, தலைப் பாகையைச் செம்மையாகக் கட்டிக் கொள்வதில் ஈடுபட்டிருந்தார். இப்போது சிலவிடங்களில் பாரதி தினத்தன்று அவரது அன்பர்கள் கூடி விழாக் கொண்டாடுந் தருணங்களில், “ஐயோ! நமது கவிஞர் பெருமான், கிழிசல் கோட்டு அணிந்து, தோளில் அந்தக் கந்தலை மறைக்க இரண்டு ஊசிகள் (லேப்டி பின்கள்) குத்திக் கொண்டிருந்தார். என்னே வறுமையின் கொடுமை!” என்று பேசி வருகின்றார்கள். ஊசி அணிந்திருந்ததின் உண்மைக் காரணம் அதுவன்று, ராணுவ அதிகாரிகள், கப்பல் உத்யோகஸ்தர்கள் முதலியோர் தம் சின்னங்களைத் தெரிவிக்கத் தோளில் பல நிறங்களில் பட்டைகளும், மார்பில் பலவித நூல்களினால் பூக்கள் மாதிரி வேலை செய்த சட்டையும் அணிவதைப் போலத் தாம் “பாரத ராணியின் உண்மையான தளகர்த்தன்” என்பதைக் குறிப்பதற்காகவே அவ்விதம் அணி
வதாகச் சொல்லுவார். அப்போது கதரும், தேசீய சின்னமாக சர்க்காவும் ஏற்படாததால் இப்படிச் செய்து வந்தார்.
பாரதியார் 1902-ம் வருஷம் காசியிலிருந்து ஊருக்குத் திரும்பினார். நமது குலாசாரப்படி ருது சாந்திக் கல்யாணம் நடந்தது.பாரதியார் அப்போது நவநாகரிகத்தை உயர்ந்த மலையில் அனுஷ்டித்துக் காண்பிக்க விரும்பினார். பெண்கள் கல்வியில் முன்னேற்றமடைந்து, ஆங்கிலப் பெண்மணிகளைப் போல் நாகரிகமடைந்து வாழ வேண்டுமென்றும் கருதினார். நமது சம்பிரதாயங்களும், மூடப்பழக்க வழக்கங்களும் அவருக்குப் பெருத்த வேதனையை உண்டு பண்ணின. ஒவ்வொருவரும் மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டே, தாங்கள் தாராளமாக தப்பிதம் செய்வதையும், தகுந்த தலைவர்களின்றி நாடு சீர்குலைந்திருப்பதையும், பழைய சாஸ்திரங்கள் செல்லரித்து, படிப்பாரின்றி அழிவதையும், மாந்தர்கள் ‘அறியாமை’ எனும் சேற்றில் அழுந்தித் தவிப்பதையும் கண்டு, “பாரத நாட்டிற்கு யாரால் விமோசனம் ஏற்படப் போகின்றது” என்று மனம் புழுங்கினார்.
எட்டயபுரம் சமஸ்தானாதிபதி அவர்கள் அழைத்ததால் அதற்கிணங்கி சமஸ்தானத்தில் உத்யோகம் வகித்தார். அதாவது தினமொருமுறை அரசரது மாளிகை சென்று பல உயர்ந்த நூல்களைப் படித்து அர்த்தங்கள் கூறல், பல பத்திரிகைகள் – ஆங்கிலத்திலும், தமிழிலும் – வரவழைத்துப் படித்தல், வேதாந்த நூல்களை ஆராய்தல், பண்டிதர்களுடன் சர்ச்சைகள்,தமிழாராய்ச்சி முதலியன நடத்துதல் இவைதான நமது கவிக்கு உரிய பணிகளாகும். அப்பொழுது அவருக்கு ஷெல்லி பைரன் முதலிய ஆங்கிலக் கவிகளின் நூல்களை வாசிப்பதில் பிரியமதிகம். அந்தக் காலத்தில் அவர் “ஷெல்லிதாசன்” என்னும் புனைபெயருடன் பத்திரிகைகளுக்குச் சில
வியாஸங்கள்கூட எழுதியதுண்டு.
காளைப் பருவமானதாலும், பண்படாத சுதந்திர வீறு படைத்த மனமாகையாலும் அவருக்கு நாஸ்திகவாதத்தில் பற்றுண்டாயிற்று. அதைப் பற்றிய நூல்களை வாசிக்கலாயினர். தர்க்கத்தில் பாரதியார் வல்லவர். அவரது தாத்தாக்களில் ஒருவரான அப்பாசாமி சிவன் என்பவர் வீர சைவர். விஷ்ணுவின் பெயரைக் கேட்ட அளவிலேயே வெறுப்பெய்தும் சுபாவமுடையவர். எங்கள் பந்துக்களின் ஒருவன் இறந்து போனார். பால்ய வயதினளான மனைவியையும், அறியாத ஐந்தாறு பேரையும் விட்டுச் சென்றார். எல்லோரும் மிக்க துக்காக்கிராந்தர்களாயிருந்தனர். இறந்தவரை ஸ்மசானத்திற்குக் கொண்டு போகவும் இல்லை. செய்யும் – வகை யறியாது விழித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தாத்தாவும், பேரனும் நாஸ்திக – ஆஸ்திக வாதங்கள் நடத்த ஆரம்பித்தனர்.முதலில் தாத்தாதான் பேரனைச் சண்டைக்கிழுத்தார். “அடே! தெய்வமில்லையென்று நீ சொல்வது மெய்யானால் இப்பொழுது மரணமடைந்த நாராயணனுடைய ஆத்மா எங்கடா போயிற்று? அதை ருசுப்படுத்தடா” என்றார். பேரனும் ஆரம்பித்தார். ஆயினும் வயதில் மூத்தவர்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசக் கூடாதென்று, “ஆத்மா, பிரம்மத்தில்தான் லயமடைந்தது. கோபிக்காதீர்கள். இப்போது மேலே நடக்கும் காரியத்தைக் கவனிப்போம்” என்றார் பாரதியார். அத்துடன் பேச்சு முடிந்தது.
**
*

One Comment on “7. நாகரிகமும் நாஸ்திகமும்/செல்லம்மா பாரதி”
Comments are closed.