ஆகவே/அதங்கோடு அனிஷ்குமார்

உங்கள்
வீட்டுச் செடி
காற்றின் அசைவில்
பக்கத்து
காட்டுச் செடியோடு
கை குலுக்குவதை
கண்டிக்காதிருங்கள்.

கூண்டுப் பறவை
பறத்தலை மறக்குமுன்னே
விடுதலை செய்யுங்கள்
அடிவானத்திற்கப்பால்
அவைகளைப்
பறக்க விடுங்கள்.

உங்கள் குழந்தைகளின் தோள்களில்
உங்கள் கனவுகளை
சுமத்தாதிருங்கள்
அவர்களின்
கனவுச் சிறகுகள்
பட படக்க
வண்ணத்துப் பூச்சிகளாவதை
கண்டு மகிழுங்கள்.

ஆகவே
நான் உங்களுக்கு சொல்கிறேன்

இனி பெரும் வாதைகள்
உங்கள் கூடாரங்களை
சூழாதிருக்கும் படி
நீங்கள்
ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.