பூசணி அக்கா / நாகேந்திர பாரதி


இருபது வயதாகியும் இன்னும் மகள் உட்காரவில்லையே என்ற கவலை மரகதத்திற்கு . அதைப் பற்றிய உணர்வு உள்ளுக்குள் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாத வாணி வழக்கம் போல் அதி காலையில் தோழிகளுடன் சேர்ந்து குளத்திற்குச் சென்று குடிதண்ணீர் மொண்டு குடத்தை இடுப்பில் வைக்கும்போது தான் ஞாபகம் வந்தது .

மார்கழி மாதம் பிறந்து விட்டதே , அம்மா கோலம் போட ஆரம்பித்திருப்பாளே . கோலத்தின் நடுவில் வைக்க பூசணிப்பூ கேட்பாளே என்ற நினைவு வர குடத்தைக் குளக்கரை ஓரம் இறக்கி வைத்து விட்டு , ‘ ‘ஒரு நிமிடம் ‘ என்று தோழிகளிடம் கெஞ்சி விட்டு பக்கத்து தோட்டத்துக்குள் நுழைந்தாள் .

வளர்ந்தும் படர்ந்தும் கிடந்த பல செடிகளுக்கும் கொடிகளுக்கும் வலிக்காமல் விலக்கி நடந்த அவள் கண்களில் தெரிந்தது ,தரையில் வளைந்து நெளிந்து கிடந்த அந்த பூசணிக் கொடியும் அதில் பூத்திருந்த அந்த மஞ்சள் நிறப் பூக்களும் .

அதன் அருகில் சென்று சொன்னாள் .’ பூசணி அக்கா , பூசணி அக்கா , மார்கழி மாசம் பிறந்தாச்சு . தினசரி ஒரே ஒரு பூ மட்டும் பறிச்சிக்கிறேன் . கோச்சுக்காதே ‘ என்று கெஞ்சிக் கேட்டபடி அதற்கு வலிக்காத படி ஒரு பூவை மெதுவாகக் கிள்ளி எடுத்து ‘ தேங்க் யூ ‘ என்று சொல்லும் அவளைப் பார்த்து காற்றில் அசைந்து ‘சரி ‘என்றது அந்தப் பூசணிக் கொடி .

திரும்பும் அவளைக் கிண்டல் செய்தார்கள் தோழிகள் . ‘பளிச்சுன்னு புடுங்கிட்டு வராம என்ன கொஞ்சல் அந்தக் கொடி கிட்டே ‘.
புன்சிரிப்புடன் பதில் சொன்னாள் .
‘அப்படி இல்லடி , அது பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டு பூ பூத்திருக்கு , அது காயாகிக் கனியாகி விதையாகி அடுத்த தலைமுறையை உருவாக்கிற ஆர்வத்தில் வந்திருக்கிற பூவை நாம அப்படிப் பளிச்சுன்னு புடுங்கக் கூடாதுடி ‘ என்றவளிடம் ,
‘ சரிடி , நீ பெரிய மனுஷி ஆயிட்டதான் ‘ என்ற தோழிகளின் வார்த்தைகள் ஒரு நிமிடம் ‘சுருக் ‘ கென்றாலும் காட்டிக்கொள்ளவில்லை வாணி . கேட்டுக் கொண்டிருந்தது பூசணிக் கொடி .

மறு நாள் , பூப் பறிக்க வரவில்லை வாணி .வந்திருந்த தோழிகள் கண்டபடி தன்னை மிதித்து வந்து பிடுங்கிச் சென்ற பூசணிக் காயைப் பிரியத்தோடு கொடுத்தபடி காற்றில் ஆடினாள் பூசணி அக்கா . அங்கே மரகதத்தின் வீட்டுக் கொல்லையில் உட்கார்ந்திருந்த வாணியைச் சுற்றி திருஷ்டி கழித்து வாசலில் உடைத்த பூசணிக் காயின் உள்ளிருந்து சிதறியது குங்குமச் சிவப்பு .

One Comment on “பூசணி அக்கா / நாகேந்திர பாரதி”

Comments are closed.