
பிறந்தவுடன் அவனுக்கு ஷேக்ஸ்பியர் என்று
பெயர் வைத்து வில் என்று கூப்பிட்டேன்.
டாலி என்கிற அவன் தாய் மூத்தவனான
அவனைக் கவனியாமல் நோஞ்சானாக இருந்த
அவனுடைய நாலாவது சகோதரனைத்தான்
கவனித்தது. தாயின் கவனத்தைப் பெற
முயன்ற வில் ஒவ்வொரு தரமும் கையடி
பட்டு நகர்த்தப்பட்டு அசடுவழிந்ததைக்
கண்டு அவனை அசடு என்கிற அர்த்தத்தில்
கூஃபி என்ற பெயர் வைத்துக் கூப்பிட ஆரம்பித்தேன்
அசடுதான் இல்லாவிட்டால் என் இலக்கியக் கனவுகளையும்
என் இலக்கியப் பேராசைகளையும் நடைமுறைக்
கையாலாகாத்தனங்களையும் புரிந்த மாதிரி
செவிசாய்த்துக் கேட்டுக் கொண்டு என் காலடியிலே
கிடப்பானா…? என் இலக்கியப் பிரச்சனைகளுக்கு
அவனிடம் தீர்வு கிடைக்குமா என விவரித்து பதில்
கேட்பேன். பிரச்சினை தீர்வு எனக்குத்
தெரிந்த அளவுதான் அவனுக்கும் தெரிந்தது.
அவன் நாய். நான் அவன் இலக்கிய எஜமான
என்னையே நம்பிக்கொண்டு நான் இலக்கியப்
புகழ் ஏணியை எட்டிவிடுவேனென்று எதிர்
பார்த்துக் கொண்டு என்னோடு அவனும் சைவனாக நான்
சாப்பிட்ட சாப்பாட்டையே சாப்பிட்டுக்கொண்டு
பதிமூன்று ஆண்டுகள் இருந்துவிட்டான்
உயிர்போகும்போது என் மடியில் படுத்து
என்னைப் பார்த்து என் கையை அவன்மேல்
வைக்கச் சொல்லியபடியே உயிர்விட்டான்
வீட்டில் ஒருவரும் இல்லாதபோது அவனைக்
கவனிக்கச் சொல்லி ‘மிருகங்கள் நண்பன்’
கிரிஸ்டல்ரோஜர்ஸுடன் கொண்டு விட்டுப் போனபோது
பதினைந்து நாட்களும் சாப்பிடவே
மறுத்துவிட்டான். பாப்பா போய் அவனை
அழைத்து வந்தபின்தான் உபவாசத்தை நிறுத்தினான்.
இதுபோன்ற நாயை நான் என் பரந்த
நாயனுபவத்தில் பார்த்ததில்லை என்று
கிரிஸ்டல் ரோஜர்ஸ் சொன்னபோது எனக்குப் பெருமை
யாகவே இருந்தது. அடிக்கடி இப்போது
அவன் போனபின் வழக்கமாக அவன் படுத்துக்
கிடக்கும் இடத்தைப் பார்க்கிறேன். அவன் அங்கு இல்லை
என்பதை என் கண்கள் நம்ப மறுக்கின்றன.
ஒவ்வொரு தடவையும் அவன் இல்லாதது
என் மனதில் ஒரு ஷாக் ஆகவே உறுத்துகிறது.
இப்போது வேறொரு கூஃபியும் வந்துவிட்டான்
ஆனால், இவன் என்னை லட்சியம் செய்வதில்லை
ராஜிதான் இவனுக்கு எல்லாமும். ஏனென்று
தெரியவில்லை. இரண்டாவது கூஃபிக்கு முதல்
கூஃபியைத் தெரியாது என்றாலும் அவனிடம்
பொறாமையோ என்னவோ என்பக்கம் வர
மறுக்கிறான். அவனையே கட்டிக் கொண்டு
அழு என்று சொல்லாமல் சொல்கிறான்.
ஒரு இலக்கிய ஆசிரியனின் நாயென்று
கூஃபியின் – என் முதல் கூஃபியின் சுய
சரிதத்தை எழுதுவதில் முனைந்துவிட்டேன்.
மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.
அமரத்துவம் என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா.
