பே(ஸ்)புக் கவிஞர்கள்/ஜமாலன்

பேபுக் கவிஞர்கள்
கவிதை எழுத
படங்களைத் தேடுகிறார்கள்
அதிலும் குறிப்பாய்
தெளிவற்றப் படங்களை மட்டுமே

பேபுக் கவிஞர்கள்
பூனையின் கூர்திறத்துடன்
மேலிருந்து கீழாகவும்
கீழிருந்து மேலாகவும்
வலமிருந்து இடமாகவும்
இடமிருந்து வலமாகவும்
மூலைவிட்டங்களில் இருந்து
மூளைவிட்டங்களுக்கு என
உற்று நோக்குகிறார்கள்
தேர்ந்த படங்களை

பேபுக் கவிஞர்கள்
படங்களில் கரைத்து ஊற்றப்பட்ட
வர்ணங்களால்
வசீகரிக்கப்படுகிறார்கள்
வார்த்தைகளால் இல்லாத
வர்ணங்களைக் கண்டும்
பிடித்துவிடுகிறார்கள்
யுரேகா! யுரேகா!

பேபுக் கவிஞர்கள்
கண்காணாப் பொருட்களையும்
ஓவியத்திற்குள் நுழைந்து
கண்டும் பிடித்து விடுகிறார்கள்
கவிப்பொறியியலாளனைப்போல

பேபுக் கவிஞர்கள்
படத்தை மொழியால்
சுருட்டிவிட முயற்சிக்கிறார்கள்
மொழியாணியில்
படத்தைக் கட்டித்
தொங்கவிட முயல்கிறார்கள்

பேபுக் கவிஞர்கள்
தற்போது மாற்றப்பட்ட
தற்படத்தில் உணர்வற்று
வெளிறியிருப்பதை உணர்கிறார்கள்
உணர்வதைவிட
உணரமுடியாததே
அதிகமும் அழகுடையது என்று
படத்தை அங்கும் இங்கும்
அசைக்கத் துவங்குகிறார்கள்

பேபுக் கவிஞர்கள்
முதற்சொல்லை தாவிப்பிடிக்க
படத்தை தாண்டி விழுகிறார்கள்
படத்தின் உள்ளும் வெளியும்
படமாகாத ஒரு சொல்லை
புடம்போடத் தேடுகிறார்கள்

பேபுக் கவிஞர்கள்
தாவிப்பிடித்த ஒவ்வொரு
சொல்லையும் பிளக்கத்
துவங்குகிறார்கள்
படத்தைின் விலக்கமுடியாதொரு
விளக்கவுரையாக

பேபுக் கவிஞர்கள்
படத்தின் உச்சத்திற்குத் தாவி
கடைசி வரிக்கு முந்தைய வரியில்
வாசிப்பாளன் வழுக்கிவிழ
‘டுவிஸ்ட்’ வைக்கிறார்கள்
தாங்கள் அந்தப்படங்களை
பார்க்கவேயில்லை என்ற
பாவனையில்
முகத்தைத் திருப்பிக்கொண்டு

பேபுக் கவிஞர்கள்
கற்பனைக்கும் நவீன வாழ்விற்கும்
இடையில் –
கவர்ச்சியான போஸ்டர்களை
தின்று பால்கறக்க முனையும்
வறச்சியான
மாடுகளைப்போல
வாயில் எச்சில் ஒழுக
அல்லாடுகிறார்கள்

பேபுக் கவிஞர்கள்
கவியுரை என்ற புதிய வடிவத்தை
கண்டுபிடித்துள்ளார்கள்
உரைகவி, கவிஉரை என்பர்
இறுதியில் மாட்டிடுவார்
கவிதைக்கு ஓர் ஆணுறையை

பேபுக் கவிஞர்களை
ஆட்டிப்படைப்பது
இப்போதெல்லாம் –
படைப்பு உச்சம் அல்ல
எகிறும் லைக்குகளின்
எண்ணிக்கைதான்

பேபுக் கவிஞர்கள்
விருப்பக் குறிக்குள்
விழுந்துகிடப்பதையே
வேட்கையாக உணர்கிறார்கள்
கமெண்டுகளை கண்டுவிட்டால்
களிப்பெய்திவிடுகிறார்கள்

பேபுக் கவிஞர்கள்
கழிப்பறைகளைக்கூட
கவிதா மண்டலமாக்கிவிடுகிறார்கள்

பேபுக் கவிஞர்கள்
மீசையரும்பிய விடலைகள்
மீசையைத் தடவி தடவிப்
பார்க்கும் லாவகத்துடன்
பேபுக்கைத்
திறந்த திறந்து பார்க்கிறார்கள்
துயர் நிறைந்த வாழ்வின்
துன்பக்கேணியில்
விருப்பக் குறிகளை
எண்ணி எண்ணி
இரும்பூதெய்கிறார்கள்

பேபுக் கவிஞர்களின்
கவிதைகளைவிட
பலநேரங்களில்
படங்கள் கவிதைகளாக
இருக்கின்றன
என்மனார் புலவர்

டிஸ்கி
அகக்கவி, புறக்கவி
சிலேடைக்கவி
வரக்கவி, வராக்கவி
ஆசுக்கவி, காசுக்கவி
உவமைக்கவி உவமேயக்கவி
படிமக்கவி, புதுக்கவி
நவக்கவி, நவபாஷனக்கவி
என தமிழிலக்கியத் தோட்டத்திலே
பூத்த புத்தம் புதுக்கவியே
“பேபுக் கவி” என்மனார் அறிஞர்