புதியமாதவி சங்கரன் கவிதை

புள்ளிகள் அர்த்தமுள்ளவை.
ஒரே ஒரு புள்ளி
அதை ‘கமா’வாக மாற்றி
தொடரலாம்
ஒரே ஒரு புள்ளி
அதோடு இன்னும் ரெண்டு புள்ளிகள்
விழிகளானால்
ஆயுத எழுத்தாக்கி போராடலாம்.
ஒரே ஒரு புள்ளி
அதைத் புள்ளிகளின் தொடராக்கி
‘தொடரும்’ போடலாம்.
ஒரே ஒரு புள்ளி
எத்தனையோ அர்த்தங்கள்.
ஆனாலும்
தொட நினைத்தப்போது
புள்ளிகள் வெடித்து அதிலிருந்து
புறப்படுகின்றன ஓராயிரம் புள்ளிகள்.

புள்ளிகளால் நிரம்பி இருக்கிறது
என் பிரபஞ்சம்.
ஒன்றை ஒன்று ஈர்த்தும் விலக்கியும்
இயங்கிக்கொண்டிருக்கிறது நம் பால்வீதி.
வாசலில் வைத்தப் புள்ளிகள்
கோடுகளால் இணைந்து கோலமாகிவிடும்.
வாழ்க்கையில் சிலப் புள்ளிகள் மட்டும்
எப்போதும் எதிலும்
இணையவும் முடியாமல்
எடுக்கவும் முடியாமல்
என்னைச் சுற்றி வருகின்றன.
புள்ளிகளால் ஆன பால்வீதியில்
என் பூமியின் கதவுகள்
பூட்டி இருக்கின்றன.
உள்பக்கமாக !
என்னை நானே சிறைவைத்துக்கொள்கிறேன்.
இதுவும் ஒரு தண்டனைதான்.
ஆனாலும் தெரியவில்லை
எதற்கான தண்டனை இது.?!
மெளனத்தில் உடைகிறது
என் முற்றுப்புள்ளி.