சாந்தமூர்த்தி
நாங்கள் ஐயனார் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தோம். அப்போது அபூர்வமாக மேலே ஒரு விமானம் விரைந்து கடந்தது. “சாஸ்திரி வர்றார்” என்று லெனின் சொன்னார். “அவரு இப்போ தாஷ்கண்ட்- ல இருக்கார்” என்று நான் சொன்னேன். நாங்கள் வீட்டுக்கு வந்தபோது லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவில் தாஷ்கண்டில் மரணம் என்ற செய்தி ரேடியோவில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சில நாட்களில் சாஸ்திரி விமானத்தில் வந்தார் — சடலமாக.
லெனின் எனக்கு நண்பரானதற்கு முக்கியமான காரணம் அவர் ஏழாவது சாரின் மகன் என்பது தான்.
சிலருக்கு அவர்களுடைய செல்லப் பெயர் அளவுக்கு சொந்தப் பெயர் பிரபலமாவதில்லை. சார், ஏழாவது சார் என்று அழைக்கப் பட்டதற்குக் காரணம் மிகவும் எளிமையானது. அவர் ஏழாம் வகுப்பு ஆசிரியர். மேலும், அப்போது அவருடைய பெயரைக் குறிப்பிடும் துணிவு பெரியவர்களுக்குக் கூட இல்லை. சொந்தப் பெயரைக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவு என்ற எண்ணம் இன்று கூட பலருக்கு உண்டு. அவருடைய மனைவி ரமணியம்மா டீச்சர். ராஜேஸ்வரி என்றால் யாருக்கும் தெரியாது. அவர் இரண்டாம் வகுப்பில் என் ஆசிரியை.
ஏழாவது சார் எதுவுமே செய்ய வேண்டாம். அவரைப் பார்த்தாலே போதும். எல்லோரும் நடுங்குவோம். மீசை இல்லை. மீசை அளவுக்கு காது மடல்களில் முடி இருக்கும். அவர் முகத்தில் சிரிப்பை யாரும் பார்த்ததில்லை. டீச்சர் நேர் எதிர். அடிக்க மாட்டார். அதட்டக் கூட மாட்டார். அடிக்காமலும் சிறுவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். டீச்சருக்கு அமைதியான அழகான சிரித்த முகம். அவருடைய ‘டால்’ அடிக்கும் இரு மூக்குத்திகளும் இன்றும் நினைவிருக்கிறது. அவர்கள் எங்களுக்கு நீண்ட கால குடும்ப நண்பர்களாக இருக்கப் போகிறார்கள் என்று நான் அப்போது கனவில் கூட நினைக்கவில்லை.
ஒரு நாள் ஏழாவது சார் எங்கள் வீட்டில் என் அப்பாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். உடனே எனக்கு உதறலெடுக்கத் தொடங்கியது. நம்பவே முடியவில்லை — சார் சிரித்த வண்ணமிருந்தார். சீரியசான சிரிப்பு! இருவரது விரல்களிலும் For men of action — Satisfaction என்ற பிரகடனத்துடன் சிசர்ஸ் சிகரெட் புகை கசிந்து கொண்டிருந்தது. பின்னர் அடிக்கடி மணிக் கணக்கில் உரையாடல் தொடர்ந்தது. ஆனால் அவரிடம் எனக்கிருந்த நடுக்கம் விலக ஆண்டுக் கணக்கில் ஆனது.
அவர்களுடைய நட்பு அப்போது எனக்குப் பெருமையாக இருந்தது. மற்ற சிறுவர்கள் மத்தியில் அது பெருஞ் சொத்து. இப்போது நினைத்துப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. பிசிராந்தையார் — கோப்பெருஞ் சோழன் காவிய நட்பு, காலத்தை வென்று நீடிக்கும் நட்புகள் எல்லாம் வாழ்வின் கொடை.
டீச்சர், என் அம்மாவோடும், அவர் பிள்ளைகள் என்னோடும் தோழமை கொள்ளத் தொடங்கினோம். நான்கு பிள்ளைகள். அப்போதெல்லாம் அப்படித்தான். லெனின் எனக்கு மூத்தவர். ரமணி அக்காவும். (எனவேதான் ரமணியம்மா). சுமதி கடைக்குட்டி. தேவி எனக்கு சம வயது. என் முதல் தோழி. அவர்கள் வீடு எனக்கு இன்னொரு வீடானது.
இணையான தரத்தில் உள்ளவர்கள் மட்டுமே நட்பு கொள்ள முடியும் என்று துருபதத் தனமாக நினைத்தால் நட்பில் கற்றல் — கற்பித்தல் குறைவாகவே நிகழும். நம்மை விட எந்த வகையிலாவது மேலானவர்களுடன் பழகினால் மட்டுமே நாம் கற்க முடியும். கீழானவர்களுடன் எனில் அவர்கள் கற்கலாம். நல்ல நட்பு கொண்டும், கொடுத்தும் வளர்கிறது.
ஏழாவது சாருக்கு வடபாதிமங்கலத்துக்கு மாற்றல் வந்து எல்லோரும் கிளம்பிய போது இரண்டு குடும்பமும் வேதனையில் மூழ்கியது. விவசாயியும், மளிகைக் கடைக்காரரும் நினைத்தவுடன் வெளியூர் எங்கும் போவதும், தங்குவதும் சிரமம். நடுவில் நீண்ட தொலைவு இல்லை தான். என்றாலும் நாங்கள் அடிக்கடி சந்திப்பது முடியாமல் போனது. ஒரு முறை அம்மாவும் நானும் அங்கு சென்று சில நாட்கள் தங்கினோம். நான் அப்போது ஆறாம் வகுப்பு மாணவனாக இருக்கக் கூடும்.
ஒரு நாள் எல்லோரும் அங்குள்ள ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு சென்று பார்த்தோம். அச்சமூட்டிய பிரமாண்டமான ஆலை. நான் பார்த்த முதல் ஆலை. ஆலைக்குள் எவ்வளவு சீனி வேண்டுமானாலும் அள்ளி உண்ண அனுமதி உண்டு. வெளியில் எடுத்து வரக் கூடாது. சிறுவர்கள் நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு தின்றோம். வீடு திரும்பிய பின் அதன் ‘பின் விளைவு’களையும் அனுபவித்தோம்.
ஏழாவது சாரின் பள்ளிக்கு சென்றேன். அவர் இப்போது நடு நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். ஏழாவது சார் இல்லை; எட்டாவது சார். ஆனாலும் அவர் எங்களுக்கு எப்போதும் ஏழாவது சார்தான். பள்ளியில் ஒரு பெட்டிக்குள் நிறைய புத்தகங்கள் இருந்தன. எடுத்துப் பார்த்த நினைவிருக்கிறது. டீச்சர் அன்று இரவு சாம்பிராணி புகை சுற்றும் போது தேவி அசைய, தூவக்கால் தடுமாறி, தேவியின் தலையில் கவிழ்ந்து நெருப்புத் துண்டுகள் அபிஷேகம் நடந்தது. நல்லவேளை, ஆபத்தில்லை.
வாழ்க்கை நிகழ்வுகள் விரைந்தன. சிறுவர்கள் வளர்ந்தோம். எல்லோருக்கும் கல்யாணம் ஆனது. ஒவ்வொருவருக்கும் அவரவர் குடும்பம். குழந்தைகள். தர்க்க பூர்வமாக விளக்க முடியாத விநோத கலவையில் மேன்மைகளும், இழப்புகளும் நிகழ்ந்தன. சார் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். லெனின் பெங்களூரில் வேலை பார்த்தார். எனக்கும் அவருக்கும் அரிதாகவே கடிதத் தொடர்பு இருந்தது. சார் குடும்பம் மன்னார்குடிக்கு இடம் பெயர்ந்தது.லெனின் மன்னார்குடிக்கு வருவதே குறைவாகத்தான். சுமதி மூலம் மீண்டும் நட்பு இறுகியது.
நான் மாவட்டக் கல்வி அலுவராக ஆன பிறகு ஒரு முறை வடபாதி மங்கலத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நிறைவு விழா என்று நினைவு. சென்றது இரவு நேரத்தில். எது எப்போதும் அப்படியே இருக்கும்? ஆலை அப்போது இயக்கத்தில் இல்லை. மூடி விட்டார்களாம். முன்பு நடந்த மகத்தான நிகழ்வு மீண்டும் மனதைப் பிழிந்தது. அந்த முறை நான் ஏழாவது சாரைப் பார்க்க அவர் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை.
எதிர்பாராது என் அப்பா சில வாரங்களில் எதிர்பாராது திடீர் மரணமடைந்தார். மாரடைப்பு . நான் ஏழாவது சாருக்கு நேரடியாக செய்தி சொல்ல ஆளனுப்பினேன். வந்தது சாரில்லை — சுமதி. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு காரணம் புரிந்தது சார் ஏன் வரவில்லையென்று. இரண்டு நாட்களாகவே சார் கலகலப்பின்றி சோர்வாக இருந்தாராம். வீட்டில் சுமதி கதவைத் திறந்து செய்தியைக் கேட்கும் போதே சார்,”யாரு? என்ன விஷயம்?” என்று ஈஸி சேரில் இருந்தவாறே கேட்டாராம். சுமதி சாமர்த்தியமாக துக்க செய்தியை சொல்லாமல் மறைத்து, “ஒண்ணுமில்லப்பா. யாரோ அட்ரஸ் கேக்கிறாங்க” என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.
பின்னர் கடைத் தெருவுக்கு செல்வதாகச் சொல்லி சுமதி பரவாக் கோட்டைக்கு செல்லக் கிளம்பும் போது சார், “யாராவது பரவாக்கோட்டைக் காரங்கள பாத்தா ஜெகநாதண்ணன் எப்புடி இருக்கார்னு விசாரிடா. என்னமோ காலைலருந்து அவர் நெனப்பாவே இருக்கு” என்றாராம். இப்படி சுமதி எங்களிடம் சொன்னது எல்லோருக்கும் துக்கத்தை மேலும் அதிகரித்தது. சிறிது நேரம் இருந்து விட்டு அவர் கிளம்பினார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏழாவது சார் மரணம் என்ற செய்தி வந்தது.
