
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று வேறு ஒரு செய்திக்காக இன்று காலையில் அழைத்த பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அலைபேசியை எடுத்தவுடன் சொன்னார். நான் சிரித்துக் கொண்டே, எனக்கா, இன்றா என்பதற்குள், வேணுகோபாலன் என்றால் கிருஷ்ணன் தானே என்று சிரித்தார்.
கிருஷ்ண ஜெயந்தி எனக்கு என் தந்தையின் பாடலோடு இணைந்தது. 24 மணி நேர (அதற்கு மேல் வாய்க்கவில்லை) அரசு ஊழியரான அவர், பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, கிருஷ்ண ஜெயந்தி மூன்றும் போதும் எங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பார். சரஸ்வதி பூஜையின்போது இளவயதில் என் பாட புத்தகங்கள் ஒன்றுவிடாமல் பூஜையில் வைத்துவிட்டு, அட்டைக்கும், முதல் பக்கத்திற்கும் சந்தனம் குங்குமப் பொட்டு வைக்க எப்போது அழைப்பார் என்று காத்திருப்பேன். அவற்றின் மீது அவர் அன்போடு பொழியும் சாமந்தி இதழ்களின் நிறமும், மணமும் இன்னும் நிறைந்திருக்கிறது நெஞ்சில். பாஹிமாம் பாஹி புஸ்தக பாஹிமாம் பாஹி என்று அவர் பாடுவதும், சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவ துமே சதா எல்லாம் அவர் குரலில் தான் பதிவாகி இருக்கிறது உள்ளே.

விநாயகர், எங்கள் அப்பா வழி பாட்டியின் திவச நேரத்தில் தான் வருவார். விளாம் பழ பச்சடி நாவில் மட்டுமல்ல உள்ளத்திலும் இனித்துக் கொண்டிருக்கிறது, வேலூர் தென்னை மரத்தெரு திருப்ப சந்து ஒன்றில் வீதியோர காய்கறி கடையில் திரும்பத் திரும்ப உரத்த குரலில் விளாம்பழம் உடைத்தால் நன்றாக இருக்குமா, இல்லையென்றால் அப்படியே திரும்பி இங்கே வந்து கேட்பேன், போன வருஷம் உடைத்தால் ஒரே பூஞ்சை காளான் பூத்திருந்தது…என்று அவர் வாதிட்டுக் கொண்டிருந்தது நான் ஆறாம் வகுப்பில் இருக்கும் போது, அந்த இடம் அந்தக் குரல் அந்த விளாம் பழம் எல்லாம் இருக்கிறது நினைவில் அப்படியே.
கிருஷ்ண ஜெயந்தி கதை வேறு. என் சிற்றன்னை மைதிலியும், நாங்களும் கிருஷ்ணரும் காத்திருப்போம் – கண்ணுக்கு எட்டிய அப்பம், உப்பு வெல்லச் சீடை, முறுக்கு எல்லாம் எப்போது கைகளுக்கும் வாய்க்கும் எட்டும் என்று! மற்ற திருநாள் எல்லாம், ஒரு பக்கம் பலகாரம் சுட்டுக் கொண்டே இருக்க, குழந்தைகள் இன்னொரு பக்கம் அவற்றைச் ‘சுட்டுக்’ கொண்டே இருக்க அனுமதி உண்டு. கிருஷ்ண ஜெயந்தியை அப்படி நடத்துவதில்லை, பகவானுக்குப் படைத்துவிட்டுத் தான் நமக்கு என்று சாஸ்திரம். அப்பா அலுவலக விடுமுறை நாளிலும் வேலைகள் வைத்துக் கொண்டிருப்பார் என்பதெல்லாம் பின்னர் தெரியும், எல்லா நாளுமே அரசு அலுவலகம் இயங்கும் என்று தான் இளவயதில் புரிந்து கொண்டிருந்தோம். அப்பா வந்து உட்கார்ந்து பூஜைகள் தொடங்கி எல்லா சுலோகங்கள், தீப ஆரத்தி கட்டத்திற்கு வருகையில், கிருஷ்ணா முகுந்தா முராரே என்று எம் கே டி பாகவதர் ரேஞ்சுக்குப் போகும்போது எதிரே படையலில் இருக்கும் பலகாரங்களைக் கடந்த அன்பும் பேரன்பும் அவரது கீதத்தில் லயிக்கும்.
சம காலத்தில் சக குடித்தனக்காரர்கள் மத்தியில் பரஸ்பர பலகார பரிமாற்றங்கள் வேகமாக நடக்கும். சில வீடுகளில் இருந்து வரும் சீடைகள் நளினமாக அரைபட, சில வீட்டாரது ஆயுதங்கள் பற்களை சோதிக்கும், சிலரது வீட்டு அப்பம் ஏன் குறைவாக வந்தது என்று கோபம் வருமளவு சுவையாக இருக்கும்.
நாளாவட்டத்தில் வீட்டு சாஸ்திர அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கிருஷ்ணாவுக்கு அவருக்கு வாய்க்கும்போது பூஜைக்குப் பின் கிடைக்க பிரத்தியேக எண்ணெய், மாவு தனியாகவும், பாவப்பட்ட குழந்தைகள் பிழைத்துப் போக எங்களுக்கென்று தனியே அத்தனை பலகாரங்களும் எடுத்து வைத்து வாழ வைக்கும் காலமும் வாய்த்தது. நாளாவட்டத்தில் காத்திருந்து சுவைக்கும் ஆசையே வென்றது.
இதில் எல்லோர் வீட்டிலும் கிருஷ்ணர் ஒரே நாளில் எழுந்தருளுவது இல்லை…. எங்க வீட்டில் நாளைக்கு என்று கூடப் பதில் வரும் சில நேரங்களில். சரி கொண்டாடும் அன்றைக்கு பலகாரங்கள்.
பட்சண ஆசையை விடவும், கிருஷ்ணர் கால் பதிக்கும் முக்கிய பணியில் என்னை மிகச் சிறுவயதிலேயே ஈடுபடுத்தி இருந்தனர். எட்டு போட்டு, மேலே பிஞ்சுப் பிஞ்சு விரல்கள் வரைவது ஒரு ஸ்டைல் எனில் மாவில் விரல்கள் மடித்து இளங் கை தோய்த்து எடுத்து அப்படியே தரையில் ஒத்தி எடுத்து அப்புறம் மேலே விரல்கள் போடுதல் சுவாரசியமாக இருக்கும். ஒரே சீராக இராமல் இரண்டு கால்கள் இடைவெளி விட்டு விட்டு இப்படி நிறைய பரிசோதனைகள் ரசனையோடு ஆண்டுக் கணக்கில் வரைந்த காலங்கள் இருந்தது.
கலியுகக் கண்ணன் படத்தில் வாலியின் சமத்கார வசனங்கள் இந்தக் கால் போடுவதிலும் கை வைத்தது. சவுகார் ஜானகி கோலம் போட்டுக் கொண்டே இருப்பார், கிருஷ்ண ஜெயந்திக்கு. அவர் கால்கள் வரைந்து கொண்டிருக்கையில் தேங்காய் சீனிவாசன் நுழைவார்.
“ஏண்டி கிருஷ்ணர் கால் போடறதுக்கு இத்தனை கஷ்டப் படறாய் … மாவு பக்கெட்ல எடுத்து வை..அப்படியே என் காலை ஒத்தியெடுத்து நானே நடந்து கிருஷ்ணர் கால் போட்டு விடறேன்” என்பார்.
“நன்னா இருக்கு…நான் கிருஷ்ணர் கால் தான் போட்டுண்டு இருக்கேன், கம்சன் கால் இல்லை” என்று பதில் வரும் ஜானகியிடம் இருந்து.
“தோ பாருடி…நீ இந்தக் கால் இல்லை. டிரங்க் காலே போட்டாலும் அந்தக் கிருஷ்ணர் வர மாட்டார்” என்பார் சீனிவாசன்.
“என்னது நல்ல நாளும் அதுவுமா நாஸ்திகம் பேசிண்டு” என்று போகும் அந்தக் காட்சி.
எங்கள் பத்தாணிப் பாட்டி, கணவரையும் பறிகொடுத்து, வீட்டில் பேரப்பிள்ளைகள் தவிர உதவிக்கு யாருமே இல்லாத போதும் ஒற்றை ஆளாய், அத்தனை பண்டிகைகளையும் விடாப்பிடியாகக் கொண்டாடியது, எங்களையெல்லாம் வாழ வைக்கத்தான். விரித்து வைத்த வேட்டியில் அவளது அத்தனை ஆண்டு கஷ்ட வாழ்க்கையையும் முணுமுணுத்த படியோ, ஸ்லோகங்கள் சொன்னபடியே சுற்றித் தீர்ப்பாள் கை முறுக்கு. கடைசி சுற்றில், எனக்காக மாவு அரைக்கும் கல் எந்திரம் போன்ற வடிவத்தில் கைப்பிடி வைத்த மேல் பகுதி, நடுவே மையப்பகுதியில் கம்பு ஊன்றிய கீழ்ப்பகுதி இரண்டையும் தனித் தனியே சுற்றுவாள். எண்ணெயில் பொரித்ததும் இரண்டையும் இணைத்து ஒரு மென் சிரிப்போடு சுற்றிக் காட்டிக் கொடுப்பாள் சாப்பிடுவதற்கு.
ஊறவைத்த அரிசியை எந்த சக்தி கொண்டு உலக்கையால் இடிப்பாள், எப்படி புகை அடுப்பின் எதிரே அமர்ந்து கையில் இலாவகமாகத் தட்டித்தட்டி எண்ணெய் சட்டியில் அதிரசம் போட்டு எடுப்பாள், செந்நிறத்தில் அவை பொரிந்து வர கரண்டியால் எடுத்து எண்ணெய் போக மற்றொரு கரண்டியால் அணைத்து இறுக்கி பாத்திரத்தில் போட்டு முடிப்பாள் என்று யோசிக்கக் கண்ணீர் பெருகும். அதிரசத்தில் அவள் அதிகாரி. அப்பம் செய்வதில் அவள் சூத்திரதாரி. அன்பின் சர்வாதிகாரி அந்தப் பேதைத் தாய்.
1982 ஏப்ரல் 22 அன்று நான் முற்றிலும் கடவுள் நம்பிக்கை அற்றவனாக பரிணமித்தேன் என் வாழ்க்கையில். என் தந்தையிடம் அதைச் சொல்ல மிகவும் தயங்கி நின்றேன். பல ஆண்டுகள் பேசாதிருந்து மேலும் என் மீது அத்தனை காதல் வளர்த்துத் தம்மைக் கஷ்டப்படுத்திக் கொண்டார் அவர். பிற்காலத்தில் அந்த நேசம் பொய்க்கவில்லை என்ற பெருமிதம் பொங்க வாழ்ந்து மறைந்தார்.
ஆனால், பத்தாணிப் பாட்டி நான் எப்படி நாத்திகன் ஆனேன் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது திணறித் திணறி அலமந்து போனதை நான் மட்டுமே நெருக்கமாக உணர்ந்திருந்தேன், வேறு யாரிடமும் அவள் விவாதித்திருக்கவில்லை. ..அடடா….அடடா…என்பாள். அப்படி சொல்வியே எல்லா ஸ்லோகமும், மந்திரமும்…முதலியார் வீட்டு மொட்டை மாடியில் அத்தனை தண்ணீர் கொட்டி சந்தியாவந்தனம் செய்வியே …என்று சொல்லிவிட்டு அவளுக்கு உரிய பாணியில் உச் உச் என்று மேலண்ணத்தை நாக்கால் சுழற்றியபடி ஒலியெழுப்பிக் கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்வாள். அது பெரும்பாலும், என் தாயின் நினைவுகள் பெருகும்போது ததும்பும் கண்ணீராக இருக்கும்.
பெலகேயா நீலவ்னா, தனது மகன் பாவெல் விலாசவ் வேறு திசையில் போகிறான், யார் யாரையோ வீட்டுக்கு அழைத்து வருகிறான், அப்பன் வழியில் வேலைக்குப்போய் வீடு திரும்புகையில் சாராயம் அருந்திவிட்டு வந்து பெண்டாட்டியை அடித்து உதைத்து வாழும் சராசரி வாழ்க்கையை வாழக் கூடாதா, அரசுக்கு எதிராக யோசிக்கிறான், என்ன கதிக்கு ஆவான் என்று அஞ்சுவாள். என் கடவுளை மட்டும் என்னிடம் இருந்து பிரித்து விடாதே என்று சொல்வாள் ஒரு முறை. மக்சீம் கார்க்கியின் தாய் நாவல் மகத்தானது.
தங்களது வாழ்க்கையின் கஷ்டங்களுக்கு விடையே கிடைக்காதவர்களது ஏக்கப் பெருமூச்சு, ஆன்மா அற்ற உலகத்தின் ஆன்மா, வலி தெரியாதிருக்க ஏற்றிக் கொள்ளும் போதையாக மதங்களும், கடவுள்களும் என்றெல்லாம் ஒருபோதும் பத்தாணிப் பாட்டிக்கு வகுப்பு எடுத்ததில்லை நான். உன்னைவிட எனக்குப் பெரிய கடவுள் யார் என்று அவளது மடியில் நானும் அடக்க மாட்டாத கண்ணீரோடு சாய்ந்து படுத்திருப்பேன். அன்போடு தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்த அந்தக் கடவுள் என்னைத் தடுத்தாட் கொண்டு அருள் புரிந்து கொண்டே இருக்கிறது, தானே மறைந்து 25 ஆண்டுகளுக்கு மேல் கடந்தும்.

கடவுள் போல பாட்டியா அல்லது பாட்டி போல கடவுளா? என மனம் நெகிழச் செய்யும் பதிவு .
மிக்க நன்றி ராகவன்
௮௫மையான பதிவு.
🙏👌🙏
இங்கு அன்புதான் கடவுளாக தோன்றுகிறது. அப்பாவோ பத்தாணிப் பாட்டியோ ….அவர்கள் அன்பின் நினைவுகள் தானே இன்னும் மனதில் கசிந்து கொண்டிருப்பது.
சிறு வயதில் பலகாரங்கள் சுடும் போது எப்போது கடவுளுக்கு படையல் நடக்கும் சுவைக்கலாம் என்று எதிர்பார்த்திருந்த என்போன்றவர்கள் போலின்றி பலகாரம் பட்சணம் தயாரிப்பதை அப்படியே எடுத்துரைக்கும் உங்கள் பாணியே தனி….அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்
அற்புதம். என்ன ஒரு எண்ண ஓட்டம். மாரத்தானில் வெற்றிக்கு ஓடுபவன் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடுவது போல ஓஓஓஓஓடி நிற்கிறது ஒரு அழகான இடத்தில். தகுந்த இடம்தான் அதுவும்.
விளாம்பழம் கிடைக்கும் வேலூர் நைனியப்ப தெருவும் தென்னமரத்தெருவும் சேரும் இடத்தில் தென்னமரத்தெருவில் VIT விஸ்வநாதன் வீட்டிற்கு எதிரில் இரண்டு வருடங்கள் வாழ்ந்து இருக்கிறோம்.
இப்போது மணக்கிறது விளாம்பழம் உள்ளங்கையில் அப்பா குழைத்துத் தருகிற மணம்.
இன்றைக்கு அவகாசமின்மைதான்கடவுள் என்று ஆகிவிட்டது. நம் அன்றாட அலுவல்களை அதுதான் தீர்மானிக்கிறது. அது கட்டளையிட யாதும் நடக்கிறது.
நிறைய எழுதுங்கள் என்று சொல்ல வேண்டியது இல்லை. அதுவும் தானாகவே நடக்கும்.
வேணு அருமையான கட்டுரை. அனைத்து நாத்திகரும் தங்கள் பெயரினை கடவுளின் பெயர்களாகவே வைத்துக் கொண்டுள்ளார்க. நீயும் அப்படித்தான் வேணு பிறக்கும் பொழுதும் நாஸ்திகானாய் பிறப்பதில்லை இறக்குகும் பொழுதும் நாஸ்திகனாய் இறப்பதில்லை இந்தத் தத்துவத்தை அழகாக சித்தரித்துள்ளாய் வேணு நன்றி
Amazing. Each and every there was one pattani Patti. Nowadays we r missing such kind of love and affection from our elder
ஆனாலும் நீங்கள் பிடிவாதக்காரர்.
கமல்ஹாசன் மாதிரி.
உள்ளூர இருக்கும் அழகான
நினைவு பதிவு கண் முன்னே
பண்டிகை எனக்கு வாயில் நீர் ஊற்று
நெடிய பதிவு. ஆனால் அற்புதம்.
உங்கள் எண்ண ஓட்டமும் எழுத்தாற்றலும் போட்டிபோட்டு அருவியாக பெருக்கெடுத்து ஓடுகிறது