
மண்வாசம் எழுந்தது
சட்டென நனைந்தது தரை
ஆனால் இது
மழைக்காலத்து மழையல்ல
இதமான சூடு
கணப்பு அருகே இருப்பதுபோல
ஆனால் இது
கோடை காலத்து வெயிலல்ல
புல்லின் இதழ்களில் படிந்திருக்கிறது
கண்ணீர்த்துளிபோல பிரபஞ்சத்தைப்
பிரதிபலிக்கிறது
ஆனால் இது
குளிர்காலத்துப் பனியல்ல
சருகுகள் மீது மெத்தென
கிடக்கிறது வண்ண வண்ண
மலர்களின் இதழ்கள்
ஆனால் இது
வசந்தகாலப் பூக்களல்ல
அச்சமும் நாணமும்
விளங்கப் பெற்று சபை
நாகரிகத்தை அறிந்த
பெண்ணொன்றும் பேதையல்ல
விடலைப் பசங்க வெள்ளாமை
வீடுவந்து சேராது இதை
பொய்யாக்கும் விதமாக
எதுவும் இங்கே நடக்கவில்லை
நாற்பது வயதிலும்
நாய்களைப் போல
எலும்புகளுக்கு அலைவார்களேயானால்
இது வாழத்தெரிந்தவனின்
வாழ்க்கையல்ல
ஆள்பவர்களெல்லாம் மனுநீதிச்சோழர்களே
ஆனால் இங்கே சத்தியம்
சாகக்கிடக்கிறது!
