காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ஆன்மா/வாசுதேவன்

காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ” ஆன்மா” என அழைக்கப்படும் அவர் மனைவி மெர்சிடஸ் பார்ச்சா கடந்த சனிக்கிழமை (August 15) தன்னுடைய 87 வயதில் காலமானார். இவர்களின் காதல் கவித்துவமானது. மெர்சிடஸ் இல்லையெனில் மார்க்வெஸ் இல்லை.13 வயது மார்க்வெஸ் 8 வயது மெர்சிடசை காதலிக்க தொடங்கினார். மார்க்வெஸ் தன்னுடைய 18 வயதில் மெர்சிடசைதான் திருமணம் செய்வேன் என் உறுதி பூண்டார். 1958 ல் தான் இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது மார்க்வெஸ் வயது 31. மெர்சிடஸ் வயது 26. 18 வருடங்கள் திகட்ட திகட்ட காதலித்தார்கள். கடிதங்களை பறிமாறிகொண்டார்கள். முதலில் பத்திரிக்கையாளராக பணியாற்ற விருப்பமாக இருந்தாலும் அவருடைய எழுத்து திறமையை கூர்மையாக்கியது மெர்சிடஸ். ஆரம்ப காலங்களில் மிக வறுமையான சூழலில் வாழ்ந்தார்கள். வீட்டு வாடகை கொடுக்க பணமில்லை. நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவு. வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருளையும் அடகு வைத்து மார்க்வெஸ் எழுதுவதற்கு தேவையான காகிதம்/பேனா/சிகரெட்டுகளை வாங்கி கொடுத்தவர். மெர்சிடஸ் தைரியமான பெண்மணி. அசாத்தியமான தலைமைப் பண்பு உடையவர். வீட்டு நிர்வாகத்தை கவனித்தவர். பின்னாளில் மார்க்வெஸ் பல நேர்காணல்களில் மெர்சிடஸின் நிர்வாக திறமையை புகழ்ந்து அவர் இல்லையெனில் நான் எழுத்தாளனாக மாறியிருக்க முடியாது என ஒப்புக்கொண்டார்.

1960 களில் 470 பக்கத்திற்கு One Hundred Years of Solitude என்ற காவிய நாவலை எழுதி முடிக்கிறார். நாவலை பிரசுரிக்க அர்ஜெண்டைனாவின் பெயர் பெற்ற பதிப்பகம் Sudamericana அனுப்ப கணவனும் மனைவியும் தபால் நிலையத்திற்கு செல்கிறார்கள். அப்போது மெக்சிகோவில் வசித்து வந்தார்கள். மெக்சிகோவிலிருந்து அர்ஜெண்டைனாவுக்கு அனுப்ப தபால் செலவு 90 பிசோ. கையில் இருந்தது 45 பிசோ. நாவலை கனத்தை குறைத்து பாதியாக அனுப்ப மார்க்வெஸ் தயாரான போது மெர்சிடஸ் தடுத்துள்ளார். வீட்டிற்கு சென்று கடைசியாக மிச்சம் இருந்த ஹீட்டர்(Heater), ஹேர் ட்ரையரை(Hair Dryer) அடகு வைத்து நாவலை தபாலில் அனுப்புகிறார்.

Rest is History!

1967 ல் ஸ்பானிஷ் மொழியில் இந்நாவல் வெளியாகுகிறது. ரபேஸா மொழியாக்கத்தில் 1970 ல் ஆங்கிலத்தில் வெளிவருகிறது. இதுவரையில் 50 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட தலைசிறந்த காவியம். உலகம் முழுவதும் 5 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளன.. இநாவலுக்காக 1982 ல் மார்க்வெஸ் க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரம் அர்காதியோ ப்யூண்டியா. அவர் மனைவி பெயர் உர்சுலா. ஆறு தலைமுறைகளை நிர்வகித்த பெண்மணி. துணிச்சலாகவும் தலைமைப்பண்போடு மார்க்வெஸ் சித்தரித்திருப்பார். தன் மனைவி மெர்சிடஸ் தாக்கத்தில் இந்த பாத்திரத்தை உருவாக்கியிருப்பார்.

நாவலில் புயுண்டியாவை நாவலில் எப்படி இறக்கவைப்பது என்ற குழப்பத்தில் இருக்கும்போது அவர் மனைவி மெர்ஸிடஸ், மார்க்வெஸ்ஸீடம் “ பூயுண்டியா இறந்தால் நீ துன்பப்படுவாய் “ என எச்சரிக்கிறார். ஆனால் நாவலை எழுதும்போது ஒரு கட்டத்தில் மார்க்வெஸ்ஸுக்கு புயுண்டியாவை ஒரு புள்ளியில் கொல்லவேண்டும் என தீர்மானித்து புயுண்டியா வயதாகி சிறிய தங்க மீன்களை விற்கும் நிலைக்கு தள்ளப்படும்போது மார்க்வெஸ் ஒரு மதிய வேளையில் புயுண்டியாவை கொல்கிறார்.
இருப்பினும் அவரால் தன்னையே தாங்கிக்கொள்ள முடியாமல் நடுக்கத்துடன் இரண்டாம் மாடியில் இருக்கும் தன் மனைவியை பார்த்துச் சொல்ல செல்கிறார். மார்க்வெஸ்ஸின் முகத்தை பார்த்தவுடன் அவர் மனைவி மெர்ஸிடஸ் ‘ புயுண்டியா இறந்து விட்டார்தானே” என கேட்டவுடன்
மார்க்வெஸ் அடக்கமுடியாமால் இரண்டு மணிநேரம் தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

ஏனெனில் மெர்சிடஸும், உர்சுலாவும் வேறு வேறல்ல…