
சென்னை எக்மோர் அருங்காட்சியகத்தின் பகுதியாக 1851ல் உருவாக்கப்பட்ட மியூசியம் அரங்கம் கலை நிகழ்வுகளுக்கும்,கலாபூர்வமான சோதனை நாடகங்களுக்கான இருப்பிடமாகவும் இருந்துவருகிறது.முக்கியமாக கேளிக்கைதன்மை கொண்ட வர்த்தக ரீதியான சென்னை சபா கலாச்சாரத்துக்கு மாற்றாக புதுமையும்,கலை உணர்வும்,சிந்தனையும் கொண்ட தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் இங்கு அரங்கேற்றப்பட்டு வந்திருக்கின்றன.எழுத்து பத்திரிகை நிதிக்காக 1960களில் சி.சு.செல்லப்பாவால் இங்கு மிஸ் ஜூலி நாடகம்(இயக்கம்:கோபாலி) அரங்கேற்றப்பட்டது.1970 களின் இறுதியிலிருந்து பரிக்ஷா,கூத்துப்பட்டறை போன்ற நவீன நாடகக் குழுக்கள் இங்கு பல நாடகங்களை நிகழ்த்தியுள்ளன.வட்ட வடிவ அரங்கச்சூழல் கொண்ட சென்னை மியூசியம் அரங்கம் நவீன நாடக உணர்வின் ஒரு அடையாளம்.
