படித்ததில் பிடித்தது/கந்தசாமி ஆர் 

ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்திருந்தது… கணவர் இறந்திருந்தார். அவருக்கு நான்கு குழந்தைகளும் மனைவியும் இருந்தனர்.
பல வருடங்களாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருந்து பிறகு அந்த நபர் இறந்து போனார். அந்த நேரத்தில் அவரது மனைவி தாங்க முடியாத சுமைகளை சுமக்க வேண்டியிருந்தது.
அவரையும் குழந்தைகளையும் பராமரித்தல், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் மட்டுமன்றி வருமானத்தை பற்றியும் யோசிக்க வேண்டியிருந்தது. கோழி வளர்த்தல், மரக்கறி தோட்டம் செய்தல் என வருமானத்தை தேடிக் கொண்டாள்.
படுக்கையிலேயே சுயநினைவின்றி கழிவகற்றும் நிலை ஏற்பட்ட போது அவள் மிகுத்த அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதன் துர்நாற்றம் அந்த வீட்டையே தலைகீழாக மாற்றத் தொடங்கியிருந்தது. யாரும் வந்து விடுவார்களோ என்று அஞ்சி வீட்டை சுத்திகரித்துக் கொண்டேயிருந்தாள். திரும்ப திரும்ப வீட்டை கழுவினாள். ஆடைகளை கழுவினாள். மெத்தையை, தலையணையை அடிக்கடி வெயிலில் காய வைத்தாள். அவளது மனம் திருப்தியடையும் வரை தரையைத் துடைத்துக் கொண்டேயிருந்தாள்.
இவ்வாறாக ஒரு நாளில் கணவர் இறந்தும் போனார்.
இறுதிக் கிரியைகள் முடிவடைந்த பின் அவரின் மரண வீட்டிற்கு வந்தவர்களுக்கு அவள் நன்றியுரையாற்றினாள்.
“நான் அவரைச் சந்தித்தபோது அவர் மிகவும் அழகான நேர்த்தியான இளைஞன். எனவே நான் அவரை ஒரே பார்வையில் விரும்பினேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
எமது தாம்பத்யம் இனிமையானது. குழந்தைகளை உருவாக்கியது.
ஆனால் நான் அவரை மணந்ததிலிருந்து, ஒரு இரவேனும் நிம்மதியாக தூங்கியதில்லை. ஏனென்றால் அவரது குறட்டை சத்தம் மிகவும் இம்சைப்படுத்தியது.
அது விசித்திரமான குறட்டை. ஒரு தொழிற்சாலையின் மொத்த இயந்திரங்களின் ஓசையை விடவும் இரைச்சலாய் இருக்கும்.
நான் 35 ஆண்டுகளாக இந்த பிரச்சினையை அனுபவித்தேன்.. எனக்கு இப்போது 60 வயது.
25 முதல் 60 ஆண்டுகள் வரை நான் தூக்கமின்மையால் அவதிப்பட்டேன். இவ்வாறான துன்புறுத்தலை எந்தப் பெண்ணும் பொறுத்துக் கொள்ள மாட்டாள்.
இவ்வாறாக இறுதியில் அவர் நோய்வாய்ப்பட்டார். வழக்கம் போல அவரது குறட்டையும் தொடர்ந்தது. ஆனால் அப்போது அந்த இரைச்சல் எனக்கு ஆச்சரியமான ஆறுதலைக் கொடுத்தது. அவர் இன்னும் உயிருடன் இருப்பதை அதை கொண்டே நான் அறிந்து கொண்டேன். குறட்டை ஓசை சிறிது நேரம் நின்றுவிட்டால் நான் விழித்து விடுவேன். அவரது இரைச்சலின்றி என்னால் தூங்க முடியவில்லை. குறட்டை சத்தம் வரவில்லையென்றால் அவரை உலுக்கிப் பார்த்தேன்.
சுவாசிக்கிறாரா என மூக்கில் கைவைத்துப் பார்ப்பேன்.
இப்போது அவர் இறந்து விட்டார். அவர் இனி ஒருபோதும் குறட்டை விட மாட்டார். அந்த இரைச்சலை நான் இனி கேட்கவே மாட்டேன் என நினைக்கும் போது ஏற்படும் வேதனையை என்னால் தாங்க முடியாது.
அந்த ஒலியை மீண்டும் கேட்க மாட்டேனா? என மனம் ஏங்குகிறது. எல்லாவாற்றையும் யாரோ திருடிச் சென்றது போல இருக்கிறது.
எனவே நான் உங்களுக்கு சொல்வதெல்லாம்..
நாம் நேசிப்பவர்களிடம் உள்ள பலவீனங்கள் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.
ஆனால் அது அற்புதமான நினைவாக தோன்றுவது அவர்களை இழந்த பின்னர்தான்.
எனவே அவர்களின் சிறிய பலவீனங்களை மன்னியுங்கள்.
அவர்களை விட்டு விடுங்கள். அந்த பலவீனங்களை பொறுத்து ரசிக்கத் தொடங்குங்கள். நீங்கள் ஒரு கட்டத்தில் அதை ஒரு இன்பமாக உணருவீர்கள் … “என்று அந்தப் பெண் முடித்தார்.
உங்கள் கணவர் சாப்பிட்ட தட்டை கழுவாமல் போகும் போது, டீ கப்பை அப்படியே வைத்துவிட்டுப் போகும் போது., தலை துவட்டிய துவாளையை கட்டிலில் போட்டுச் செல்லும் போது அது பெரிய தொந்தரவாகவே இருக்கும். ஆனால் ஒரு நாள் அதுவே உங்களுக்கு அற்புதமான நினைவாய் தெரியும். அதை திரும்ப அடைய முடியாதா? என மனம் ஏங்கும்.
அவை பலவீனங்கள் அல்ல. வாய்ப்புகள் மட்டுமே. நாம் விரும்பும் ரம்மியமான உலகம் நம்மிடம் இல்லையென்றாலும், நாம் பெறும் உலகில் மகிழ்ச்சியைக் காண முடியுமென்றால் வெற்றியை அடைவது அத்தனை சிரமமாக இருக்காது.
வாழ்வை மீட்டிக் கொள்ள முயற்சிப்பதற்குப் பதிலாக, நாமே நம்மை சோகத்தில் ஆழ்த்தி, அதிக தோல்வியை அனுபவிக்கிறோம். வாழ்வை போர்க்களமாக மாற்றிவிடுகிறோம்.
பெண்மையுடன் மரபுரிமை பெற்ற சில விஷயங்கள் பலவீனங்கள் அல்ல. அந்த விஷயங்கள் மிகவும் அழகானவை, அர்த்தபூர்வமானவை ….. ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் ஒரு Wonder Women தான்.
👍