“தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன
இந்த சுவாசக் கணக்கு”/உதய குமார்

மகாபெரியவர் வடநாட்டுக்கு யாத்திரை செய்துவிட்டு, திரும்ப வந்து ஸ்ரீமடத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.
பல ஆயிரம் மைல்கள் நடந்தே சென்று யாத்திரை செய்த களைப்பு கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.
அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர், மகான் முன்னிலையில் வந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

அப்படிக் கும்பிட்ட பிறகு எழுந்திருக்கவே முடியாமல் சிரமப்பட்டார்.
அதோடு மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து கொண்டு பெருமூச்சு விட்டார்.
அவர் சிரமப்படுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார், பெரியவா.
வணங்கி விட்டு எழுந்தவர் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்.

“சுவாமி என் உடல் நிலை இப்படித்தான் அடிக்கடி சங்கடப் படுத்துகிறது. கொஞ்சம் வேகமாக நடந்தால் கூட மூச்சு வாங்குகிறது..!” என்றார்.

அவர் சொன்னதற்கு பதில் எதுவும் சொல்லாமல், “நீ என்ன உத்யோகம் பார்க்கிறாய்?” என்று கேட்டார் மகான்.

“கணக்கு வாத்யாராக இருக்கிறேன்.!” சொன்னார், அவர்.

“அப்படியானால் உனக்குப் புரியும்படி கணக்காகத்தான் சொல்ல வேண்டும். அதற்கு முன்னால் ஒரு கேள்வி.

நீ தேகாப்யாசம் (உடற்பயிற்சி) ஏதாவது செய்கிறாயா? பெருமூச்சு வாங்குகிறது என்கிறாயே,

அப்படியென்றால் சாதாரணமாக எப்படி மூச்சு விடுவது என்று உனக்குத் தெரியுமா? மகான் கேட்க, எல்லோருடைய கவனமும் அங்கே திரும்பியது.
வந்தவர் அமைதியாகவே நிற்க, மகான் தொடர்ந்தார்.

“இந்த உலகத்துல எல்லாத்துக்குமே ஒரு கணக்கு உண்டு. அது எப்படின்னா, வரவுக்கும் செலவுக்கும் சமமா இருக்க வேண்டும் என்கிற கணக்கு.
ஒருத்தரிடம் கைமாற்றாக ஒரு தொகையை வாங்கினால், அதைத் திருப்பித் தரும் போது முழுசாகத் திருப்பித் தர வேண்டும்.
இல்லையென்றால் அந்தக் கணக்கு சரியாகாது. என்ன நான் சொல்கிற கணக்கு சரிதானே?

கேட்டு நிறுத்திய மகான், சின்ன இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

இதே கணக்குதான் நாம் உயிரோடு இருக்க அத்தியாவசியமான மூச்சு விடுகிறதில் உள்ள கணக்கும்.

மூச்சில் எந்த அளவுக்கு காற்றை உள்ளே வாங்குகிறோமோ, அது வரவு. அதே அளவைத் திருப்பி வெளியே விடவேண்டும். இது செலவு.
தூங்கிக் கொண்டிருந்தாலும் இதைச் சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் ஆரோக்யக் கணக்கு.

உள்ளே இழுக்கும் காற்றும், வெளியே விடும் காற்றும் சம அளவாக இருக்கும்படி பழகிக் கொண்டால், பெரும்பாலான உடல் உபாதைகளே வராது.
ஆனால், பொதுவாக எல்லோரும் என்ன செய்கிறோம்? எது நமக்கு நல்லது செய்யக் கூடியதோ..

எது நம்முடைய வாழ்க்கையில் அத்யாவசியமோ அதையெல்லாம் கவனிப்பதில் அலட்சியமாக இருக்கிறோம்.

ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசிக்கணும். அதாவது ஒரு சுவாசத்துக்கு சராசரியாக நாலு செகண்ட் எடுத்துக்கணும்.

இந்தக் கணக்கை எத்தனை பேர் சரியாகச் செய்கிறோம்?

கோபம் வந்தால், சுவாசம் எகிறுகிறது. கஷ்டம் வந்தால் தாறுமாறாகிறது.
கவலை வந்தால் சுவாசிப்பதில் சிரமம். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் எது முக்கியமோ அதை அலட்சியப் படுத்துகிறோம்.

அப்படித் தப்பாகிப் போகிற சுவாசத்தை…சுவாசக் கணக்கை குறிப்பிட்ட நேரம் வரைக்குமாவது சரியாகச் செய்யக் கற்றுக் கொள்ளத்தான், அமைதியாக சுவாமி கும்பிடுவது, தியானம் செய்வது, யோகாப்யாசம் செய்வது, ஸ்லோகங்கள் சொல்வது இப்படிப் பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள்.
அப்படிக் கொஞ்ச நேரம் பழகினால் அதுவே படிப்படியாக முழு நேரப் பழக்கமாகிவிடும்.

“முதலில் நீ ஒன்று செய். வீணாக உணர்ச்சி வசப்படுவதைத் தவிர். அனாவசிய டென்ஷன், வீண் கோபதாபம், விருப்பு வெறுப்பு போன்றவற்றுக்கு இடம் தராமல், சுவாமி நினைவோடு இரு. அப்படி இருந்தால், சுவாசம் சீராகும். பிறகு ஆரோக்யம் தானாக சீராகும். ஆயுசும் வளரும்!”

பெரியவா சொல்லி முடிக்க, பிரசாதம் பெற்றுக் கொண்டு நகர்ந்தார் அந்த பக்தர். தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன இந்த சுவாசக் கணக்கு, அந்த பக்தருக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே பொருந்தும் என்பது உண்மை.
kn