நன்றி மே – ஜுன் 1975 கசடதபற இதழ்

1
அவன் வாசலில் நின்று கொண்டிருந்தான். உள் வெராண்டாவில் அவன் வயோதிகமான தந்தையின் பிணம் கிடத்தப்பட்டிருந்தது. அவன் நண்பர்கள் அவனைப் பார்க்க வந்தார்கள். அவன் முகத்தில் ஒரு சலனமுமில்லை. அவர்களிடம் அவன் சுருக்கமாக சொன்னான் “கடைசியாக அது நடந்துவிட்டது.” அவனைத் தெரிந்த அவன் நண்பர்கள் அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று நினைதுக் கொண்டே திரும்பிப் போனார்கள்.
2.
அவன் அறையில் அவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். வேறு யாருமில்லை. அவன் காலடியில் அவன் நாய் அரைவட்டமாக முகம், வால் அருகில் ஒரு இடைவெளி புலப்பட, பதித்துப் படுத்துக் கிடந்தது. அவன் தன் காலால் அதன் வயிற்றின் சூடான மிருதுவான சதையைத் தொட்டான். நாய் வாலை மெதுவாக ஆட்டிக்கொண்டு எழுந்து சோம்பல் முறித்துவிட்டு அவனருகில் வந்து அவன் காலை நக்கிவிட்டு, மீண்டும் சற்றுத் தள்ளிப் படுத்துக்கொண்டு அவனை உன்னிப் பார்த்தது. அப்பொழுது அவனுக்குத் தோன்றியது. -வாயில்லா ஜீவன்களுடன் நமக்கு ஏற்படும் உறவே ஒரு தனி வகைப்பட்டதென்று.
3.
போன மாதம் – என்றுதான் நினைக்கிறேன் – சர்வகலாசாலை நூல் நிலையத்தில் ஒரு ஐந்து வருஷத்திற்குப் பின்-சுசீலாவை எதிர் பாராதவிதமாகப் பார்க்க நேர்ந்தது. சிநேகிதிகளுடன் பேசிக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்தவுடன் விரைவாக என்னிடம் வந்தாள். “இப்பொழுது எங்கிறிக்கிறீர்கள்?” அவள் தான் வேலை செய்யும் இடத்தைச் சொல்லிவிட்டு ”எப்பொழுதாவது அங்கு, வந்தால் என்னை வந்து பாருங்கள்” என்றாள். பிறகு அகஸ்மாத்தாக அங்கு போக நேர்ந்தது. கூட சிவனும் இருந்தான். என்னைப் பார்த்துதும் வந்தாள். “இந்த ஊருக்கே வந்துவிட்டீர்களா?’ என்றாள். “இல்லை, ஒரு எழுத்தாளர் கூட்டத்திற்கு வந்தேன்” என்றேன். அவள் இருப்பிடத்திற்குப் போய்விட்டாள். மணி ஒன்றாகிவிட்டது. சிவனிடம் “போகலாமா?” என்றேன். “அவளிடம் விடை பெற்றுக்கொண்டு வாருங்கள்” என்றான். அவன் இருப்பிடத்திற்குப் போனதும் அவள் சாப்பிடப் போய்விட்டதாகத் தெரிந்தது. நாங்கள் இருவரும் எங்கள் இருப்பிடம் போகும் வரையில் ஒன்றும் பேசவில்லை.
