
(அறிவுஜீவி சுஜாதா வாசகர் கள் குழு சார்பில் ராம் ஸ்ரீதர்)
மே பத்து… டெக்னாலஜி டே – தொழில்நுட்ப தினம் மற்றும் ‘மதர்ஸ் டே’. அது தொடர்பாக ஒரு லெக்சர் கொடுக்க நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூருக்கு, என் தாய் நிறுவனமான பி.இ.எல்-லுக்கு அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.
பழைய நண்பர்களான கர்னல் ஷங்கர், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் கே.ஜி.நாராயண், எஸ்.எல்.பிரசாத், ஜகன்னாதன், கல்யாணராமுடு போன்றவர்களுடனும் புதிய இளைஞர்களுடனும் அளவளாவி ‘இவிஎம்’ என்னும் எலெக்ட்ரானிக் மின்னணு வோட்டுப்பதிவு இயந்திரத்தின் ஆரம்ப நாட்களையும் அது மெள்ளமெள்ள எப்படி வென்றது என்பதைப் பற்றியும் பேசி விட்டுத் திரும்பினேன். விளையாட்டாக ஒரு யூனியன் எலெக்ஷனில் ஆரம்பித்தது அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு நாடு முழுதும் பயன்படுத்த ஒரு பத்து லட்சம் மெஷின்களைத் தயாரிக்கக் கேட்டிருக்கிறார்களாம். ஜம்மு காஷ்மீரில் மாநிலங்களவைத் தேர்தலில் அப்பழுக்கில்லாமல் இயங்கியது ஒரு முக்கிய காரணம். எம்.எஸ்.கில்லும், லிங்டோவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இப்போது சிங்கப்பூர், இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து ஆர்டர் வந்திருக்கிறதாம். அமெரிக்காவுக்காக ஒரு மாடல் தயாரித்திருந்ததையும் காட்டினார்கள். ‘என்னை மறந்துவிடாதீர்கள். அவ்வப்போது கூப்பிட்டு என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லுங்கள். பழைய ரேடியோ மாதிரி கவைக்கு உதவுவேன்’ என்று சொன்னேன் (கவை என்றால் காரியம், உபயோகம். ‘நமனார்க்கிங்கு ஏது கவை’).
பி.இ.எல். நிறுவனம் ஐம்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தனியார்மயமாக்கும் கொள்கையின் மத்தியில் வெற்றிகரமாக இயங்கும் மைய அரசு நிறுவனம் இது. மற்ற நிறுவனங்களான ஐ.டி.ஐ., ஹெச்.எம்.டி. போன்றவை போட்டியைச் சமாளிக்க முடியாமல் நஷ்டத்தில் பி.ஐ.எஃப்.ஆர். கோடரியின் நிழலில் இப்பவோ அப்பவோ என்று இழுபறியில் இருக்கும்போது பி.இ.எல். ஆட்களைப் பாதியாக குறைத்து உற்பத்தியை மும்மடங்காக்கியிருக்கிறது. பி.இ.எல். மட்டும் வெற்றிகரமாக இயங்குவதற்குக் காரணம் அதன் டெக்னாலஜியும், கலாசாரமும், தொடர்ந்து அதன் மேலதிகாரிகளின், இன்ஜினீயர்களின், தொழிலாளர்களின் உண்மையான முன்னேற்ற விருப்பமும்தான். உதாரணமாக, சுற்றுச்சூழலில் இவர்களுக்கு உள்ள அக்கறை பிரமிக்க வைக்கும். ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட விரயம் செய்யாமல் மறு பயன்படுத்தும் திட்டங்கள், மழைநீர் சேமிப்பு, சூரிய சக்திக்காக சோலார்பானல்கள், பிடிவாதமாக அமைக்கப்பட்ட பசுமைப் போர்வை, பெங்களூரின் அதிகம் நோண்டப்படாத ரோடுகள் எல்லாமே காரணம்.
டெக்னாலஜியில் இந்தியா எந்த நிலையில் இருக்கிறது என்பதை மிகையில்லாமல் பார்க்கலாம். அண்மையில் நாம் அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி. பரிசோதனை ராக்கெட் ஒரு பெரிய சாதனைதான். செய்தித் தொடர்பு வேவுபார்த்தல், வானிலை நோக்கு போன்ற காரியங்களுக்கான சாட்டிலைட்டுகளை நம்மாலேயே ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அனுப்பி வைக்க முடியும்.
பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா போன்றவற்றின் திறமைகளுடன் ஒப்பிட்டால் நாம் பாதி வழி வந்திருக்கிறோம். இதுவரை இரண்டு ஜி.எஸ்.எல்.வி. அனுப்பியுள்ளோம். முதலாவது அவ்வளவாக வெற்றியில்லை. இது பரவாயில்லை ஆயிரத்து எண்ணூறு கே.ஜி. எடையுள்ள சாட்டி லைட்டை பூமியுடன் இசைந்து சுற்றும் ‘ஜியோஸ்டேஷனரி’ பாதையில் வைக்க இயலும். ஆனால், இன்சாட் போன்ற சாட்டிலைட்டுகள் நாலாயிரம், ஐயாயிரம் கே.ஜி. அந்த அளவுக்கு நம்மிடம் தம் இல்லை. மேலும் ரஷ்ய க்ரையோஜெனிக் இன்ஜின்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. நம்முடைய சொந்த இன்ஜின்கள் தயாராக இன்னும் ஐந்து வருஷம் பிடிக்கும் என்கிறார்கள்.
எனவே சாட்டிலைட்டுகளை அனுப்புவதில் நம் டெக்னாலஜி பாதி தூரம்தான். ஆனால், சாட்டிலைட்டுகள் தயாரிப்பதில் திறமை மேல்நாட்டுடன் ஒப்பிடும்படியாக உள்ளது. அதேபோல் எல்.சி.ஏ. என்னும் போர்விமானத் தயாரிப்பில் நாம் ரொம்ப வருஷங்கள் உழைத்துத் தயாரித்துப் பறக்க விட்ட விமானமும் சென்ற வார சாதனை.
திறமையளவில் மேலைநாடுகளுடன் இதை ஒப்பிட முடிகிறது. போர் வந்தால் குறுகிய காலத்தில், போர் விமானங்களையும் ஹெலிகாப்டரையும் தயாரித்துப் போருக்கு அனுப்ப முடியும். அதுபோல் நம் ஏவுகணைகளான நாக், பிருத்வி, ஆகாஷ், அக்னி, அஸ்த்ரா போன்றவையும் சாதனைகள்தான். எல்லாமே நம் போர்த் திறமையை அதிகரித்து நம்மை வல்லரசாக்கும். அமெரிக்கா, இராக்கை ஒரு வாரத்தில் நடந்து சென்றே ஜெயித்தார்களே அதெல்லாம் நம்மிடம் முடியாது.
சீனாவைத் தவிர, கிழக்காசிய நாடுகளில் படைபலத்திலும் ராணுவ பலத்திலும் நம்மை மிஞ்ச முடியாது. பிரிட்டன், அமெரிக்கா ஒன்று சேர்ந்து வந்தாலும், கிரிக்கெட்டில் போல, இந்தியாவை இந்தியா வில் வெல்ல முடியாது. அந்த அளவுக்கு நம் டெக்னாலஜி உசத்தியானது.
ஆனால், மற்றாரு போர் இருக்கிறதே, அதில் நாம் ரொம்ப வீக். அதில் நம் எதிரிகள் ஏழ்மை, பசி, சுகாதாரக் குறைவு, லஞ்சம். இவற்றை வெல்வதில் நம் திறமை மிக மிகக் குறைவுதான். வெளிநாடுகளிலிருந்து எதிரிகள் நமக்குத் தேவையே இல்லை. பெங்களூரை விட்டு விலகி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை திரும்பும்போது (ஏக்கப் பெருமூச்சு நம்பர் 1) எங்கு நோக்கினாலும் பலகைப் பாலம் அமைத்து ரோடுகளில் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக என்று யாரும் சொல்வதில்லை. பத்திரிகைகளும் யாராவது குழந்தை தடுக்கி விழுந்து உயிரைவிட்டால் ஒழிய, கண்டுகொள்வதில்லை. இந்த நோண்டல், எந்த நோண்டல்? மழைநீர் சேகரிப்பா, பாதாள சாக்கடையா... இல்லை, சும்மா 'டச்' விட்டுப் போய்விடும் என்று பிராக்டீஸ#க்காக தோண்டுகிறார்களா... தெரிய வில்லை. ஒரு ரோட்டில் ஒருவர் தார் போட்டு முடிந்தவுடன் கேபிள்காரர்கள் தோண்டுவார்கள். அவர்கள் முடித்து மூடக் காத்திருந்து மின்வாரியங்கள் வேறாரு சைடில் தோண்டு வார்கள். அவர் முடித்த கையோடு டெலிபோனர்கள் வருவார்கள்.
சென்னை நகரத்தில் தோண்டப்படாமல் ஒகே ஒக ரூட் உள்ளது. அது என்ன என்று நான் சொல்ல வேண்டியதில்லை. சென்னைவாசிகள் எல்லாருக்கும் தெரியும். மற்ற எந்த ரஸ்தாவும் கடப்பாரையிலிருந்து தப்பவே முடியாது. மாறாக, பெங்களூரில் ரிங் ரோட்டை முடித்துவிட்டார்கள். சர்வதேச விமானநிலையம் பெரிசாக வருகிறது. பாஜ்பாயின் கோல்டன் ட்ரபிசியம் என்பதில் ஒரு பகுதியான பெங்களூர், பம்பாய் சாலையை மிகப் பெரிதாக விஸ்தரிக்கிறார்கள்.
1993-ல் புறப்பட்டபோது எல்லாரும் ‘உனக்கென்ன பைத்தியமா..? பெங்களூரை விட்டு எப்படிச் செல்கிறாய்? அதும் சென்னைக்கு..’ என்று கேட்டார்கள். அப்போது கோகுலாவிலும் வித்யாரண்யபுராவிலும் தாவாங்கட்டையைப் பிடித்து கெஞ்சி சைட் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். மகாலட்சுமி கரம் நீட்டி அழைத்த மருதோன்றிக்கைகள்கூட ஞாபகம் இருக்கிறது. ஐயாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் வந்ததை நான் சென்னையின் சிலாக்கியங்களை சொல்லிக்கொண்டு புறக்கணித்தேன். இப்போது அந்த இடங்களெல்லாம்… ஹ#ம்! (ஏக்கப் பெருமூச்சு 2). சென்னையைப் பற்றி மனசை தேத்திக்கொள்ள சமாசாரங்கள் குறைந்துவிட்டன. அடை நன்றாக இருக்கிறது, டிசம்பர் சீஸன் கர்னாடக சங்கீதம் கேட்கலாம், மெரீனா உலகிலேயே ரெண்டாவது பீச் போன்ற காரணங்கள் போதவில்லை.
ஏன் பெங்களூரை விட்டு வந்தேன் என்கிற கேள்விக்கு இப்போதும் என்னிடம் சரியான பதில் இல்லை.
‘பெட்ரோல் விலை அதிகம். டீசல் கிடைப்பதில்லை.
மெட்ரோவில் ஏகப்பட்ட கூட்டமே.. விட்டுரு
பாட்டரி சரியில்லை. போர்த்திப் படுத்துண்டு
வீட்டில் இருப்போம் வா..’
என்ற வெண்பா எழுதுவோம்.
