கல்லுப்பிள்ளையார்/ப.மதியழகன்

அது என்னவோ தெரியவில்லை
குட்டிக்கு பிள்ளையார் என்றால்
அப்படியொரு இஷ்டம்
யானை முகம் இருப்பதால்
இருக்கலாம்
கோயில் யானையைக் கண்டவுடன்
நாங்கள் கால்கள் பின்ன
தயங்கி நிற்க
அவள் துதிக்கையால்
ஆசிர்வாதம் வாங்கி
யானையைத் தொட்டுப்
பார்த்துவிட்டுத்தான் திரும்புவாள்
சிறிய வயதில்
பால்கணேஷ் கார்ட்டூனை
அவளுக்கு காட்டியிருக்கக்கூடாது
அன்று முதல்
டெடிபேர் பொம்மைகளுக்கு
டாடா காட்டிவிட்டு
பிள்ளையார் பொம்மைகளுடன்தான்
படுத்துறங்குகிறாள்
எத்தனை தெய்வங்கள்
இருந்தாலும் எங்கள் வீட்டில்
முதல் மரியாதை பிள்ளையாருக்குத்தான்
ராஜியின் கைப்பக்குவத்தைப் பற்றி
சொல்ல வேண்டியதில்லை
ஆனால் கணபதிக்கு
குட்டி பிடித்து வைத்தால்தான்
கொழுக்கட்டையாகத் தெரிகிறது
குட்டிக்கு விபரம் தெரிந்த
நாளிலிருந்து
ஆற்றில் பிள்ளையாரைக்
கரைக்க விட்டதில்லை
பூஜை அறை முழுவதும்
விநாயகரை அடுக்கி வைத்திருக்கிறாள்
சதுர்த்தி அன்று
எத்தனை பிள்ளையாருக்குத்தான்
நைவேத்தியம் செய்வது
அடிக்கடி எண்ணிப்பார்ப்பதுண்டு
இந்தக் கல்லுப்பிள்ளையார்
குட்டிக்கு மட்டும் எப்படி
கடவுளாகத் தெரிகிறதென்று!