லக்ஷ்மி மணிவண்ணன் கவிதை

வெட்ட வெளியில்
கொஞ்சம் தண்ணீர் தெளித்து
இரண்டு சுடுசெங்கல்கள் நட்டு
ஐந்து மலர்களை வைத்தால் போதும்
நிலத்தின் தெய்வம் அப்படி எழும்பி நிற்கிறது
தத்துவங்கள் தேவை இல்லை
ஞானம் வேண்டியதில்லை
கைகூப்பித் தொழுவதற்கு இரண்டு கரங்கள் மட்டும் இருந்தால்
போதுமானது
ஏன்
நானோ நீயோ கூட
தேவையில்லை
அதற்கு
அவ்வளவு எளிமை
அவ்வளவு பகட்டு
அவ்வளவு அழகு