இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது/ஆர்.அபிலாஷ்

இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெறும் சாரு நிவேதிதாவை வாழ்த்துமுன் சில கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்தளவில் பதில் சொல்ல முயல்கிறேன்:

சாரு எவ்வகையான எழுத்தாளர்?

சாரு ஒரு எதிர்-புனைவாளர்.

எதிர்புனைவு என்றால் என்ன?

சுருக்கமாக எளிமையாக சொல்வதானால் ஒரு கதைக்கும் கட்டுரை அல்லது குறிப்புக்குமான – தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான – இடைவெளியை அழிக்கும் நோக்கில் உருவானதே எதிர்புனைவு. அலெ ராப் கிரில்லெ என ஒரு எழுத்தாளர் இருக்கிறார் (The Beach, Jealousy ஆகியவற்றை எழுதியவர்). அவர் இவ்வகை புனைவுகளை புதிய நாவல் அல்லது எதிர்-நாவல் என்று அழைக்கிறார். ரொலாண்ட் பார்த்தின் A Lover’s Discourse போன்ற (அவரது எழுத்து வாழ்வின் பிற்காலத்தைய) படைப்புகள் கவித்துவமான, சுயமுரணான பத்திகளாலான அத்தியாயங்கள் மூலம் எதிர்-புனைவுகளாகின்றன. ஒரு கட்டத்தில் (பின்நவீன கட்டத்தில்) பார்த் தன் புனைவுகளையும் அபுனைவுகளையும் அவ்வாறே எழுதுகிறார். அவருடைய நோக்கம் இந்த இரு வகைமைகளுக்கு இடையிலான எல்லைக்கோட்டை அழிப்பதே. பின்நவீன புனைவுகளும் நான் லீனியர் கதைகூறல், எழுத்தாளனின் இருப்பை உணர்த்துவது, கதையானது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என வலியுறுத்துவதன் மூலம் நவீனத்துவ புனைவின் பவித்திரத்தை காலி செய்ய முயன்றனர். இவர்களுக்கு புனைவின் மீது அப்படி என்ன கோபம்?

நவீனத்துவ புனைவுகளின் ஒரு பிரதான பிரச்சனை அவை ஒரு தடுமாற்றம், நெருக்கடி, சிதைவை முன்வைத்து வாழ்க்கையை கலைத்து விளையாடுபவை, இறுதியில் மீண்டும் ஒழுங்கமைவான ஒரு உலகை சிருஷ்டிப்பவை என்பது. அதாவது ஒரு நாவலின் துவக்கத்தில் கதையானது யானை புகுந்த பாத்திரக்கடையைப் போல் இருக்குமெனில் இறுதி அத்தியாயத்தில் அது பிரதமர் வந்து அமர்கிற மேடையைப் போல ஆகி விடும். நாவலின் துவக்கம் உடைக்கப்பட்டு கைதிகள் தப்பித்துப் போன சிறை எனில் முடிவு என்பது அக்கைதிகள் திரும்ப கைது பண்ணப்பட்டு அடைக்கப்பட்ட சிறையாகி விடும். அழகான நளினமாக, வாழ்க்கையின் நிலைத்த தன்மை, சாராம்சமான அழகு, அர்த்தபூர்வம், விழுமியங்கள், அறத்தின் வெற்றியை பறைசாற்றுவதாக அமைந்து விடும். உற்று நோக்கினால் பல நூறாண்டுகளுக்கு முன்பு அரிஸ்டாட்டில் தனது “கவிதையியல்” நூலில் நாடகங்களின் இலக்கணமாக குறிப்பிட்ட கருத்தையே நாம் இன்றும் பற்றித் தொங்கிக் கொண்டிருக்கிறோம் எனப் புரியும். இதன் பிரதான சிக்கல் வாழ்க்கையை செயற்கையாக உறைய வைத்து ஒருவித சமாதானத்தை வாசகனுக்கு இது அளிக்கிறது என்பதே. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு, கோயிலில் வீற்றிருக்கும் இறைக்கு, குடும்பத்தில் அதிகாரம் பெற்றிருக்கும் பெற்றோருக்கு, அலுவலகங்களில் நிர்வாகத்துக்கு ஒருவித ஆறுதல் அளிப்பதாக, இந்த நிறுவனங்கள் மீது நாம் பற்றுடன் இருக்க வேண்டும் என நம்மை ஆற்றுப்படுத்தும் நோக்கம் கொண்டவையாக, உருக்குலைவில் இருந்து ஒழுங்கமைவுக்குள் சென்று முடியும் நவீனத்துவ கதைகள் இருக்கின்றன என எனக்குத் தோன்றுகிறது.

கணிசமான நவீனத்துவ புனைவுகள் இவ்வகையில் நம்மை ‘ஆற்றுப்படுத்தும்’ கதைகளே. வாழ்வை உறைய வைத்து உறையில் இட்டு அளிக்கும் கதைகளே. அதிகாரத்துக்கு சாமரம் வீசும் படைப்புகளே. இந்த கதை சொல்ல வருவதென்ன என வாசகன் தவிப்புடன் கேட்க இக்கதைகள் அவனது புறமுதுகை வருடிக் கொடுத்து “இது தான் தம்பி, இது மட்டுமே தான் சகோதரா, வாழ்வின் ரகசியம் ஒன்றை உனக்குத் தருகிறேன், எல்லா குழப்பங்களுக்கும் தீர்வு தருகிறேன், உன் சிதைவான வாழ்வை சீரான வடிவமளித்து தருகிறேன்” என்று கூறுகின்றன.

இவ்வாறான கதைகளை எழுதுவதும் படிப்பதும் ஒரு பெருங்குற்றம் என நான் கருதவில்லை. அதே நேரம் இவை வாழ்வை சாராம்சப்படுத்துவதால் நம்மை அறியாமைக்குள் இவை ஆழ்த்தி வைத்திருப்பதாக, ஒரு ராணுவ ஒழுங்கை நமக்கு கற்பிப்பதாக நினைக்கிறேன். நாம் இந்த ராணுவ ஒழுங்கை விரும்பாதவராக இருந்தாலும் இவ்வகை கதையுலகினுள் சென்றதும் – ஒரு எழுத்தாளனாகவோ வாசகனாகவோ – இந்த ஒழுங்கினுக்குள் நம்மை ஒப்புக்கொடுத்து விடுகிறோம். நான் அறியாமை என குறிப்பிட்டதையே சிலர் ‘தரிசனம்’ என்கிறார்கள். தரிசனம் என்பது பக்தி மரபின் பகுதியாக வரும் ஒரு சொல் என்பதை கவனியுங்கள். அன்றாட வாழ்வில் இறைவனிடம் தன்னை ஒப்புக்கொடுக்கிற ஒருவருக்கு தரிசனம் கிடைக்கும், அதற்கு கேள்வியற்ற ஒப்பளித்தல் மட்டும் போதும் என்கிறது பக்தி மரபு. நவீனத்துவ மரபில் நாம் ஒரு புனைவிடம் நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். கடவுள் பக்தியின் இடத்தில் எழுத்தாள பக்தி. இது ஒரு ஏமாற்று வித்தை. இங்கு முயற்சி இன்றி எதுவும் கிடைப்பதில்லை. தரிசனம் போக ஒரு பிச்சைக்காரனின் கரிசனம் கூட கிடைக்காது.

நவீனத்துவம் இலக்கியம் ஒரு நாவலின் முடிவில் வாசகனின் ஆறுதலுக்காக கதையின் பல பிசிறுகளை ஒரு முடிதிருத்துநரைப் போல கத்தரித்து, முடிச்சிடப்படாத பகுதிகளை ஒரு தாய் தன் சிறுகுழந்தையின் ஆடையை சரி செய்வதைப் போல ஒழுங்கு செய்து ஒரு தீர்க்கமான புரிதலை அளித்து பிரதான பாத்திரங்கள் ஒரு அகவளர்ச்சியை எய்தியதாக காண்பிக்கையில் நமக்கு நாவலுக்குள் அதுவரையில் கண்ட பெருநதி சுழிப்பான வாழ்க்கையின் பிரம்மாண்டம் குறித்த அச்சம் விலகி, அதை ஒரு சதுரத்துக்குள் பார்த்து விடலாம் எனும் போலியான நம்பிக்கை கிடைக்கிறது. இதையே நாம் தரிசனம் என்கிறோம் என்பதே அவலம்.

எல்லா எதிர்-நாவல்களையும் போன்றே சாருவின் நாவல்களும் இந்த தரிசனம் அளித்தலுக்கு, போலி சமாதானங்களுக்கு எதிராக எழுதப்பட்டவை.

சாருவின் கட்டுரைகளே அவரது நாவல்களை விட தமக்கு பிடிக்கும் என ஏன் கூறுகிறார்கள்?

சாருவின் கட்டுரைகளையே அவரது புனைவுகளை விட அதிகம் விரும்புவதாகக் கூறுகிறவர்கள் இதன் மூலம் அவர் எழுதுவன கட்டுரைகள் என்று கூறி தமக்கென சமாதானத்தைத் தேடிக் கொள்கிறார்கள். ஆனால் நண்பர்களே சாரு எழுதுவன கட்டுரைகளும் அல்ல. அவை ஒருவித ‘புனைவுகளே’. ஜெயமோகன் ஓரிடத்தில் சொல்லுவதைப் போல, நம்மிடம் பத்தி எழுத்தில் உரையாடும் சாருவும் ஒரு புனைவுக் குரலே. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக அறிவழகன் கவனமாக உருவாக்கியுள்ள ஒரு புனைவுருவமே சாரு. சாருவின் அபுனைவை ரசிக்கிறவர்கள் தம்மையறியாது அவரது புனைவுகளையும் தாம் ரசிக்கிறார்கள். ஏனெனில் அவரது எழுத்து புனைவு அபுனைவு எனும் இருமையைக் கடந்த ஒன்று. தமிழில் மட்டுமல்ல இந்திய அளவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் தான் இவ்வாறாக எழுத்து வகைமைகளின் இருமையை தம் எழுத்துவழியாக கடந்திருக்கிறார்கள்.

சாருவிடம் நேரடியாகப் பழகியவர்களுக்குத் தெரியும் – அவர் எழுத்தில் காண்கிற அதே மனிதராகவே நம்மிடம் உறவாடவும் கூடியவர். மிக மிக நெகிழ்வானர். நீராலானவர். அவரை நீங்கள் உங்கள் உரையாடலின் ஊடே எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் அந்த வடிவுக்கு வந்து விடுவார். அவரது தரிசனம் என்பது தரிசனமின்மையே. ஏனெனில் கல்லில் வடித்த சிலைக்கே ஒரு தீர்க்கமான கருத்துருவம் இருக்கும், நீராலான ஒரு சிற்பம் உண்டெனில் அதற்கு ஏதாவது ஒரு வடிவத்தை, ஒரு தரிசனத்தை நீங்கள் அளிக்க இயலுமா? அது தான் சாரு.

அதனாலே அவர் கட்டுரைகளில் சொல்லும் பல கருத்துகளுக்கு அடுத்த கணமோ அடுத்த மாதமோ முரண்பட்டு நேரெதிரான ஒரு நிலையை அடைந்து விடுகிறார். மலையில் உச்சியை அடைந்த நீர் கவலையின்றி பள்ளத்தாக்குக்கும் பாய்வதைப் போல.

சாரு எந்த தர்க்க ஒழுங்குமற்று, தான் முன்னே நினைத்ததை சொன்னதை மறந்து விட்டு எழுதுகிறார், சிந்திக்கிறார், பேசுகிறார். ஆனால் அவரது படைப்புகளின் சுகம் என்பது இது அல்ல. அவர் அளிக்கும் வாசிப்பின்பமானது ஒரு உண்மைக்கும் அ-உண்மைக்கும் இடையில் அவர் உருவாக்கும் இடைவெளியிலே உள்ளது.

தமிழில் எழுத்து-புனைவெழுத்து-அபுனைவெழுத்து-நிஜ வாழ்க்கை என எந்த பாகுபாடும் காட்டாமல் எல்லாவற்றையும் தன் வாழ்வாகவே காண இயல்கிறவர் அவர் என்பதே சாருவின் அடுத்த சாதனை. இதைக் கேட்க எளிதாக இருக்கும். சும்மா இருந்து விடலாமே, முயற்சியே எடுக்க வேண்டாமே? இல்லை, சாருவாக இருக்கத் தான் நீங்கள் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும்.

ஏனென்றால் இந்த சமூக வாழ்வானது (அந்தரங்க உலகமும் சமூக வாழ்வின் நீட்சியே) பலவேறு அமைப்புகளுக்குள் நம்மைப் பொருத்தி அர்த்தங்களை உருவாக்குவதே என்கிறது சமூகவியல். இந்த அர்த்தங்களின் முரணே அதிகாரங்களின் போட்டி என்கிறார் பூக்கோ. ஒருவர் இந்த அடுக்குகளுக்குள் சிக்காமல், எந்த படிநிலையினுள்ளும், கதையாடலுக்குள்ளும் உறையாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறார் என்றால் அவர் நீர்மை மிக்கவராக இருக்க வேண்டும். அவர் பெண்ணுடலாக இருக்க வேண்டும். அவர் தன் பெண்ணுடலையே தன் எழுத்தாக்க வேண்டும். தானாக எழுதாமல் தன்னையே எழுத வேண்டும். அதற்கு ஒரு தனியான தத்துவ புரிதல் வேண்டும். கொள்கை உறுதிப்பாடு வேண்டும். கலைத்துக் கொண்டே இருப்பதும், அதில் தன் இருத்தலைக் காண்பதும் சுலபம் அல்ல.

அதனாலே சொல்கிறேன் நானும் நீங்களும் எழுதும் வலைப்பூ பதிவுகளை தொகுத்து ஒரு நாவலாக பிரசுரித்தால் அது “ராஸ லீலா” ஆகாது. அதற்கு ஒவ்வொரு பதிவையும் இந்த வடிவ பிரக்ஞையின்றி, சாராம்ச நோக்கமின்றி, புனைவு-அபுனைவு வரையறைகள் இன்றி எழுதவும், அதை எழுதுகிற ஆள் எழுதவில்லை, அவன் அவ்வாறே ‘இருக்கிறான்’ எனும் புரிதலும் வேண்டும். இது மிக மிக கடினமான காரியம்.

இது சிலருக்கு நிம்மதிக் குலைவை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அவர்கள் வாழ்வின் சாராம்சமற்ற, தரிசனமற்ற நிலையைக் கண்டு நிம்மதி இழக்கிறார்கள். இதனாலே சாரு ஒரு தரப்பால் கடுமையாக வெறுக்கப்படுகிறார். அவர்களுக்கு சாரு மீது வெறுப்பில்லை. அவர்களுக்கு வாழ்தலின் மீது, இருத்தலின் மீது அச்சம்; அதை சாரு அம்பலப்படுத்தும் போது அவரையும் சேர்த்து வெறுக்கிறார்கள்.

அதே நேரம் எழுத்தாளர்களோ வாசகர்களோ சாருவைக் கண்டடைவது இலக்கியத்துள் பரிநிப்பாணம் அடைவதற்கு நிகரானது. எனக்கு அதை நோக்கி ஓரடி எடுத்து வைக்கவே இரு பத்தாண்டுகள் எடுத்தன. ஏனென்றால் வாழ்தலுக்கு, இருத்தலுக்கு எதிராக வாசிக்கவே நான் நீண்ட காலமாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தேன். வாசிப்பின், சிந்தனையின், அதில் இருந்து கிடைக்கும் புரிதலின், அறிவின் வழியாக வாழ்க்கையை கைக்குவளைக்குள் அடக்கி விடலாம் என்று நான் நம்பியிருந்தேன். அப்படி அல்ல, வாழ்க்கை அதனளவில் ஒவ்வொரு நொடியும் தளையற்றது, பேரின்பமானது என்பதை அறிய எனக்கு பின்னமைப்பியல் வாசிப்பு உதவியது. அங்கிருந்து திரும்ப வந்த போதே எனக்கு சாருவின் மகத்துவம் புரிந்தது. ஆனால் சாருவாக ஆவதற்கு எனக்கு நெடுங்காலம் ஆகலாம், அல்லது ஆக இயலாமலே போகலாம் என்று தோன்றுகிறது. அதற்கு வாசிப்பை நமது இருத்தலுக்கு வெகு அருகே நகர்த்திக் கொண்டு போக வேண்டும். அதனாலே சாரு இறுக்கமான நெறிகளுக்கு உட்பட்டு சிந்திக்காமல் வாழாமல் இருக்கும்படி காட்டுகிறார் எனத் தோன்றுகிறது. அவரளவுக்கு வாழ்தலை – சும்மா மகிழ்ச்சியாக இருத்தலை, கொண்டாடுதலை, ஒரு ஹெடோனிஸ்டாக தன் உடல் போகும் பாதைகளை பின் தொடர்வதை – ஒருவித திளைப்பாக முன்வைப்பவர்கள் இல்லை. அதற்கும் காரணம் அவர் எழுத்தாளன்-மனிதன் எனும் இருமையையும் வலியுறுத்துவதில்லை. ஒரு உன்னத எழுத்தாளனாக இருக்க முனைவதில்லை. அப்படி இருப்பது சர்வாதிகாரம் என நினைக்கிறார் என்பது. ஒரு எழுத்தாளனாக தன்னை தன்னில் இருந்து பிரித்து வைப்பதன் சிக்கலையும் அறிந்திருக்கிறார். அதனால் எல்லா பாகுபாடுகளுக்கும் அப்பாலாக தன்னை எழுத்திலும் வாழ்தலிலும் வைத்துக் கொள்கிறார்.

இவ்வளவு அபூர்வமான ஒரு ஆளுமையை நாம் புரிந்து கொள்ள ஒரு முதிர்ச்சி வேண்டும். அந்த முதிர்ச்சி பெரும்பாலனவர்களுக்கு வரும் போது அவருக்கு கதை எழுத வராது, கற்பனை இல்லை, அவர் பத்தி எழுத்தாளர் மட்டுமே என நம்மை நாமே ஏமாற்ற மாட்டோம். நமக்கு இந்த முதிர்ச்சி, ஞானோதயம் வரும் போது தமிழ் இலக்கியம் இன்னொரு தளத்துக்கு நகர்ந்து விடும்.

சாருவுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்!