
அறிவியல் இது விதை என்கிறது
ஆன்மிகம் இது மரம் என்கிறது
புத்தனின் சூன்யக் கோட்பாடு
கருந்துளையை மையப்படுத்துகிறது
ஆன்மிகம் அதை சிவனின்
நெற்றிக்கண் என்கிறது
இரவு வானம் புதிராக இருக்கின்றது
அறிவியல் சூத்திரங்கள்
ஆதிநிலையை அடையவே
அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன
அறிவியல் தன்
பிடியை இறுக்கவே
இணைப் பிரபஞ்சம் என்ற
கோட்பாடு முன்வைக்கப்படுகிறது
ஒளிவேகத்தைவிட
விரைவாகச் செல்லக்கூடிய
ராக்கெட்டை கண்டறிந்தால்
நம்மால் காலப்பயணம்
செல்ல முடியும்
பிரபஞ்சம் விரிவடைந்து
கொண்டே செல்கிறது
கோள்களும், நட்சத்திரங்களும்
எந்த அளவு ஒன்றையொன்று
ஈர்க்கின்றனவோ
அந்த அளவு விலக்கவும் செய்கின்றன
அறிவுலகம் பிரபஞ்சத்தை இயக்க
கடவுள் தேவையில்லை
விதியே போதும் என்கின்றன
கடவுள் என்கிற சக்தி
ஒருவர் வாழ்க்கையில்
எந்த நேரத்திலும்
இடையூறு செய்யலாம் என்றால்
அது உலகமல்ல நரகம்
மனிதன் கடவுளைச் சாந்தப்படுத்த
பரிகாரம் செய்கிறான்
படைப்பு படைத்தவனை நாடுகிறது
உயிரின் முயற்சி
தோற்றுவாயைத் தேடுகிறது
தொடக்கத்துக்கு முன்னாலும்
முடிவுக்கு பின்னாலும்
என்ன இருக்கிறது என்பதை
வரையறுக்க அறிவியலால் முடியவில்லை
பரிணாமத்தில்
ஏழாவது அறிவு கொண்ட
அதிமனிதன் தோன்றிவிட்டால்
இவ்வுலகம் உங்கள் அந்தரங்கத்தில்
நுழைந்து பார்க்கும்
பிக்பாஸ் ஹவுஸ்ஆகத்தான்
இருக்கும்.

அறிவியலும் ஆன்மீகமும் கலந்த நல்ல கவிதை. ஆங்கிலச் சொற்கள் தவிர்க்கப் படலாம்