
எத்தனை எத்தனை எழுதப்படாத கடிதங்கள்
இன்னும் உள்ளிருந்தபடி
வாசித்துக்கொண்டிருக்கின்றன தனது உயிர் வலியை
உள்ளம் என்ற காகிதத்தில் உணர்வு மை நிரப்பி
மொழியில்லா வார்த்தைகளின் சத்தமில்லா
முணுமுணுப்பு
அது ஆன்மாக்களின் பெருந்தவிப்பு
இதயங்கள் உதிர்த்த உணர்வுகளை மொழி ஏற்க மறுத்த
அதிசயம்.
அது அச்சிடப்படாத ஆழ்ந்த ரகசியம்.
எழுதப்படாத கடிதங்கள்
ஏக்கங்களை மறந்து உறங்கியெழும் நேரம் கை
தூக்கியபடி வெளிவர போராட்டம் நடத்துவதேயில்லை
புத்தகத்தின் நடுவே மலட்டு மயிலிறகாய், திறக்கும்
போதெல்லாம்
பரவசத்தில் ஆழ்த்தி, மீண்டும் பதிந்து போகிறது.
சொல்லப்படாத வார்த்தைகளை உள்ளிழுத்து அழுத்தி
அடைகாக்கும் பேரழுத்த பெரு உள்ளம் ,வெடித்து
சிதறும் ஒரு நாழிகையில், வார்த்தைகள் சிதறி யாரிடம்
போய்ச் சேரும்
துணிவில்லாமல் எழுதப்படாத கடிதம் அனைத்தையும்
கடிதமாக்கி எழுதிப்போகிறது மரணம் ,
காலத்தின் மடலொன்றில்
மரணத்தின் மேசையில் படபடக்கும் அந்தக் கடிதங்கள்.
சொல்லவேத் தவிக்கின்றன சொல்லாத ரகசியங்களை
காதுகொடுக்கமுடியாமல்
கதறிப்போகிறது உறவுகளின் ஓலங்கள்
அவனின்எழுதப்படாத கடிதங்களை எடுத்து
யார்தான் எழுதமுடியும்?

அருமையான கவிதை. உள்ளம் காகிதம் , உணர்வு மை புதிய உவமைகள். பாராட்டுகள்