ம.இராமச்சந்திரன் கவிதைகள்

சூரியப் பெண்ணின் ஒளி வெள்ளத்தில்
இருள் என்னும் வறுமை அடித்தோடவே…

உழைக்கும் கரங்களின் படைப்பில்
அழைக்கும் புதுமையின் வேர்கள்

வாழ்க்கைப் பொய்கையில் நீராட !
வேட்கைப் பொழுதில் நீயாட !

வந்த நிலவும் உந்தித் தள்ள
இந்த நிலவும் அள்ளிக் கொள்ள

இன்பத்தின் ஊற்று இனிமையின் காற்று
துன்பத்தின் கசடை இல்லாமல் தூற்ற

கழுகின் பறத்தலைப் போல
ஒழுகி ஓடிடவே… வறுமையும் போகிடவே…

இருப்பது எல்லாருக்கும் என்றானால்
இருப்புக்கு எல்லாரும் என்றாகும்

அன்புப் பெண்ணின் ஒளி வெள்ளத்தில்
வன்மமென்னும் வறுமை அடித் தோடவே…

2

தழுவிச் செல்லும் காற்றில்
நழுவிச் செல்லும் நினைவுகள்

கெஞ்சும் அவள் அமுத மொழியில்
நஞ்சும் மகிழ்ந்து ஓடிடவே

எண்ணங்கள் இன்ப ஊற்றில் மூழ்க
கிண்ணங்கள் நிறைத்து அவளான மதுவில்

வண்டென மயங்கிக் கிடந்தேன்
நண்டென ஓடித் திரிந்தேன்

அணிலும் அழகானது அன்னமும் கதை பேசியது
அணிகலனில் மோகித்தவளுக்கு அனுதினமும் நெருப்பானது

அன்பெனும் சங்கிலியில் அகப்பட்ட நாயென
பண்போடு ஆடியது எனது வால்

ஆடிப் பழகிய வாலும் நிற்கவில்லை
ஊடிப் பழகிய வாழ்வும் நிற்கவில்லை

தழுவிச் செல்லும் காற்றில்
நழுவிச் செல்லும் நினைவுகள்

2 Comments on “ம.இராமச்சந்திரன் கவிதைகள்”

  1. சூரியப்பெண், ஒளிவெள்ளம் அருமையான உருவகங்கள் வறுமை இருள் சிறப்பான உருவகங்கள். நல்ல ஓசைநயம்

Comments are closed.