
ஹச்சிபெய் என்ற ஞானிக்கு ஓர் இளம் சீடன் இருந்தான். “குருவே, உண்மை என்றால் என்ன?” என்று ஒரு நாள் சீடன் கேட்டான். “அடுத்த மாதம் சொல்கிறேன்” என்றார் ஹச்சிபெய். அதன் பின்பு அந்தச் சீடன் அதே கேள்வியை விடாமல் கேட்டுக்கொண்டிருந்தான். ஞானியும் அவன் கேட்கும்போதெல்லாம் “அடுத்த மாதம் சொல்கிறேன்” என்று பதிலளித்தார். சீடன் நம்பிக்கையுடன் முப்பதாண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தான். பிறகு ஹச்சிபெய் மரணப் படுக்கைக்குப் போனார். அப்போதும் சீடன் அந்தக் கேள்வியைக் கேட்டான். ஹச்சிபெய் புன்னகையை பதிலாக அளித்துவிட்டு இறந்தார். சீடனுக்கு அந்தக் கணமே ஞானம் வந்தது. இருந்தாலும் “இந்தப் புன்னகையை முப்பதாண்டுகளுக்கு முன் பூத்திருக்க வேண்டியதுதானே” என்று அவன் கேட்கத் தவறவில்லை.
