✍️
இன்று வியாழன், காலை மணி 10.00 :

வடையும், டீயும் குடித்துவிட்டு அவசரமாகக் கிளம்பிய ஒரு கஸ்டமர், திரும்பி வந்து ஹோட்டல் நடத்தும் மாணிக்கம் பிள்ளையிடம்….
“ஐயோ நான் பாட்டுக்கே காசு கொடுக்காம மறந்துட்டு போறேன். சாரி..”
அதனாலென்ன
“இருந்தாலும்…பொறவு அது மறந்தே போயிடும்.”
ஓ பரவாயில்ல
எவ்வளவு முப்பதா ? இந்தாங்க இருவது ரூவா. மீதம் பத்து பொறவு தாரேன்.( )
சரிங்க..இருக்கட்டும்
பர்ஸில் இருந்த புது நூறு ரூ நோட்டை எடுத்துப் பார்த்துவிட்டு மடித்து மீண்டும் உள்ளே வைத்துக்கொண்டு…
“இருங்க ! நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கா ?”
“இருக்கு கொடுங்க.”
“பஸ்சுக்கு வேற காசு வேணுமே…என்ன பண்றது.”
“சரி. பொறவே கொடுங்க.”
“நல்லதுங்க.. வரேன். பழைய பாக்கி வேற கொஞ்சம் இருக்குபோல. எல்லாத்தையும் ஒண்ணாம் தேதி கொடுத்திடுறேன். கோவிச்சுக்காதிங்க !”
(பிள்ளை பதில் பேசவில்லை)
முற்பகல் மணி 11.10 :
பிள்ளையின் மூத்த மகன்:
” நாம டியூஷன் ஃபீஸ் இன்னும் கட்டலப்பா ! ‘கட்டினபிறகு வகுப்புக்கு வா’ன்னு சொல்றாங்கப்பா.”
“இன்னிக்கு என்ன வியாழனா.. சனி, ஞாயிறு லீவுதானே. இருடா.. திங்கக் கெழம கண்டிப்பா கட்டிடலாம். பொறுடா.”
( பையன் கண்ணைக் கசக்கியபடி வீட்டுக்குப் போகிறான்)
மதியம் மணி 2.00 :
வீட்டில் மனைவி : ஏங்க நம்ம பிள்ளை படிப்புக்கு இப்போதே இப்படி சிரமப் படுறமே, எப்படிங்க காலத்த ஒட்டப்போறோம் ?
“யாவாரம் முன்னபின்னதான் இருக்கு. என்ன செய்ய ? திங்கக்கிழம ஸ்கூல் ஃபீஸ் கட்டிடலாம்., உடு.”
‘உங்க தம்பி கூட சாப்பிட வந்தப்ப சொன்னாரு. ‘அண்ணன், கொடுத்த கடனை சரியா கேட்டு வாங்கறது இல்ல. மளிகை, காய்கறி கடைக்கெல்லாம் பாக்கி நெறய இருக்கு. மேக்கொண்டு சாமன் வாங்க சிரமம்’ன்னு.
“அவன் கிடக்கிறான். உன்கிட்ட எதுக்கு இதெல்லாம் சொல்லிகிட்டு..”
சொல்லாம?.. அவரும்தான் நாள் பூரா உங்களோடு கிடந்து அல்லாடுறார். உழைக்கிற உழப்புக்காச்சும் பலன் வேண்டாமா ? எப்படியோ போங்க..
மாலை மணி4.00
தம்பியிடம் மாணிக்கம் பிள்ளை:
“ஏன்டா லச்சுமனா… நீ வீணா ஏன் ஒன் அண்ணிகிட்டப் போயி கடையில நடக்கிற பிரச்சினை எல்லாம் சொல்ற. என்னால வீட்டிலேயும் இப்ப நிம்மதியா இருக்க முடியல. “
தம்பி: “ஏண்ணே, எப்போதும் இப்படியே நீங்க தொழில்ல, வரவு செலவுல’கறாரா இல்லாட்டி எப்படிண்ணே நாம பொழைப்ப ஓட்ட முடியும் ? யாவாரம் நல்லாதான் நடக்குது. ஆனா லாபம் எல்லாம் கடன்லயே போயிடுது. வரவேண்டிய கடன் பாக்கியையும் அடுத்தமுறை கஸ்டமர் வரும்போது கேட்டு வாங்க தயங்குறீங்க. அவங்க கூசாம மேக்கொண்டு பற்று வச்சிட்டு போறாங்க. நாம நல்லா ஏமாறுறோம். அதனால பாருங்க ! பெத்த பையனுக்கு ஃபீஸ் கட்டாம ‘அவன் ரெண்டுநாளா வெளியில நிக்கிறான்.’ தொழில்ல நீங்க இவ்வளவு இரக்கம் காட்டக் கூடாது. எவ்வளவு சொன்னாலும் நீங்க கேக்கவும் மாட்டீங்க போங்க!
“சரி உடுடா..பாத்துக்கலாம். அவரு சட்னி கேக்கிறாரு பாரு. அத கவனி.”
இரவு மணி 9.00 :
சரக்கு மாஸ்டர் வேலையை முடித்துவிட்டு பிள்ளையிடம் வருகிறார்.
பிள்ளை: “என்ன பேரளத்தாரே. தலைவலி பரவாயில்லையா ?”
“அது கெடக்குண்ணே. ஆனா என் மனசு இங்க வேலபாக்க சம்மதிக்கலண்ணே ! வேதனையா இருக்கு. ‘நீங்க, ஒங்க தம்பி, நான் எல்லாம் சேந்து மாடா ஒழக்கிறோம். என்ன கஷ்டகாலமோ வியாபாரம் இருந்தும், நம்மளால கடைய ஒழுங்கா நடத்த முடியல. மாசக் கணக்கு எழுதிட்டு போறவங்களும் சரியா பைசல் பண்ணுறதில்ல. ‘விக்கிற பொருளுக்கு காசு வராம எப்படிண்ண கடைய நடத்துறது ?’ சொன்னா கோவச்சுக்காதிங்க ! நாளைக்கு நான் கடைக்கு வரலங்க. ஊருக்கு போறேன். மன்னிசுக்கங்க !”
பிள்ளை அதிர்ந்து நிற்கிறார்.
இரவு சாப்பிட்டபின், பிள்ளையைக் கண்கலங்கப் பார்த்துவிட்டு, பேரளத்தார் கடைவாசலை விட்டு விலகி மறைகிறார்.
இரவு மணி 10.15:
கல்லாவை பூட்டிகொண்டு, தம்பி லச்சுமனிடம் சொல்லிவிட்டு, மாணிக்கம் பிள்ளை வீட்டுக்குக் கிளம்பி, கடைக்கு வெளியே வந்தார். இன்று காலைமுதல் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வெறுப்போடு அசைபோட்டபடித் திரும்பியவரை, வாடிக்கையாக கடைக்கு பால் சப்ளை செய்யும் குஞ்சம்மா நிறுத்தி, ” அய்யா ஒரு நிமிஷம் ! ( அழுகிறார்) என் புள்ளைக்கு வாந்தி பேதி வந்து முடியாம கிடக்கிறான்யா. வெளியூர் போன வீட்டுக்காரர் இன்னும் வரல. வைத்தியம் பாத்தவரு டவுன்ல கொண்டுபோய் பெரிய டாக்டரை பாக்கச் சொல்றாரு. கையில காசு இல்ல. ஐயா, தயவு பண்ணி எனக்கு ஒதவணும். ஒரு வாரத்துல உங்க கடனை திருப்பிக் கொடுத்துடுவேன். “
மாணிக்கம் பிள்ளை மனம் கலங்கி, செய்வதறியாது தான் வைத்திருந்த கைப்பையைப் பீராய்ந்தார். நோட்டு, சில்லறை எல்லாம் சேர்த்து இருநூற்று நாற்பது ரூ மட்டுமே இருந்ததை எண்ணிப் பார்த்து மீண்டும் உள்ளேயே வைத்துவிட்டு, பக்கத்துக் காய்கறி கடைக்கு நடந்தார்.
” அயிலு, இன்னிக்கு காய்கறி பற்று பாக்கி நான் எவ்வளவு தரணும் ?
“இன்னிக்கு கொள்முதல் இருனூத்தி இருபது சொச்சம் அண்ணே. அதுல வரவு வச்சது போக நூறு ரூவா பாக்கி. ஏண்ணா ?”
“ஒண்ணுமில்ல அயிலு. பத்து பாக்கிய நாளைக்கு கொடுத்திடலாம். எனக்கு இப்ப ரொக்கமாக ஒரு ஐநூறு ரூவா கைமாத்து கொடேன்” என்று கேட்டு, ரூபாவை வாங்கி சற்று தள்ளி நின்ற பால்கார அம்மாவிடம் போய்க் கொடுத்தார்.
“சமயத்துக்கு உதவுனிங்க. ஒங்களுக்கு பெரிய மனசுங்கய்யா!”
பிள்ளை நிறைவுடன் கையெடுத்துக் கும்பிட்டார் ! ” உடனே டாக்டர பாரும்மா!”
மறுநாள் காலை மணி 8.00:
இன்று வெள்ளிக்கிழமை, கடைக்கு வார விடுமுறை. தன்னிடம் முன்பு வேலைப்பார்த்த சரக்குமாஸ்டர் நாகப்பட்டினத்தாரைக் கூட்டிவர, 8.20 பஸ்ஸைப் பிடிக்கப் புறப்பட்டார் பெரியவர் மாணிக்கம் பிள்ளை!
