ஹிந்தி மொழிபெயர்ப்புக் கவிதைகள்/தமிழாக்கம்- கிருஷாங்கினி

ஹிந்தியில் – நாகேந்திர புண்டரிக்.

1.

எங்கே வீசி எறியட்டும் அப்பாவின் பாதங்களை?
அப்பாவின் செருப்பின் நம்பரைவிடவும்
இரண்டு குறைவு எனது செருப்பு
அதனால்
எளிதில் நுழைந்துவிடுகின்றன
அப்பாவின் கால்களுக்குள்ளே
என் கால்கள்
நகரத்தின் கடைகளில்
தேடித் துருவிப் பார்த்தும்
கிடைக்கவில்ல அவருக்கு
தன் அளவிற்கேற்ற
பனியன், ஸ்வெட்டர், செருப்பும்
அப்பா அடிக்கடி தன்னுடைய
காலின் அளவைப் பார்த்து
தைத்துக்கொள்கிறார்
தன்னுடைய காலுக்கான
செருப்பை
மெல்ல மெல்லக் கடைத்தெருவிற்கு
வரத் தொடங்கினார்கள்
செருப்புத் தைக்கும் தொழிலாளர்கள்

அப்பா அணிந்து கொண்டார்
லக்கானியின் ஹவாய் செருப்புகளை
அதுவும் கூட
நம்பர் பத்துக்கும் அதிகமாக
கிடைப்பதில்லை பெரும்பாலும்
அல்லது
கிடைக்கும் மிகக் குறைவாகவே
அதனால் பாதி கால்கள்
தேய்த்துவிடுகின்றன நிலத்தை
செருப்பு இல்லாத பாதங்களில்
உண்டாகின்றன பித்தவெடிப்புகள்
அதில் அப்பா தேய்த்துக்கொள்கிறார்
எண்ணெய்
அதில் இட்டுக்கொண்டே இருப்பார்
வாஸ்லைனை நிரப்பி
பெரும்பாலும் அப்பா
பரூவா கடைவீதியின்
செருப்புகளையே அணிவார்
அது அப்பாவின் வருகையை
முன்னதாகவே சொல்லிவிடும்
அவர் வருவதை அதன் ஒலி
எல்லாவற்றையும் விடவும்
சிறந்த ஒலிகளில் ஒன்று
அப்பா சந்தைக்குச் செல்லவேண்டி
ஒலி எழுப்பப் பாதுகாத்து வைத்திருப்பார்
அந்த ஒற்றை ஜோடி செருப்புகளை
அப்பா இல்லாமல் போய்விட்டாலும்
நீண்ட நாட்கள் வரை

இருந்து கொண்டு இருந்தன
அவருடைய அந்த செருப்புகள்
அப்பாவின் ஜாக்கெட், குர்தா
ஷால், கோட் என
எல்லாமே
பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்டன
தானாகவே
செருப்பு இருந்தது
வைத்தது வைத்தபடி அப்படியே
யாரும் அதை எடுக்கவும் இல்லை
அணியவும் இல்லை
அம்மா சொன்னாள் ஒருநாள்
இறந்தவர்களின் செருப்புகளை
அணிய மாட்டார்கள் என
அவற்றை வீசி
எறிந்துவிடு எங்காவது
நான் எடுத்துக்கொண்டேன்
அப்பாவின் செருப்புகளை
அலைந்து கொண்டிருந்தேன்
நாடு நாடாக நான்
அப்பாவின் கால்களை எங்கு
எறிவேன் நான்?
தோல்வி அடைந்தேன்.