இன்று ஆசிரியர் தினம்/S L நாணு

வணக்கம் அன்பர்களே..

என்னுடைய தகப்பனார் சகஸ்ரநாமன் தான் எனக்கு முதல் ஆசிரியர்.. அவர் தான் எழுத்து என்ற விதையை என்னுள் விதைத்து ஊக்கப் படுத்தியவர்..

அடுத்த ஆசிரியர் எனக்கு நாடக மேடையை அறிமுகப் படுத்திய என் குருநாதர் திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்கள்..

இருவருக்கும் என் மரியாதை கலந்த நமஸ்காரங்கள்..

என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் பற்றி “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அனுபவங்களும்” தொடரில் (புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது) பதிவு செய்திருந்தேன்.. அந்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அதை மீள் பதிவு செய்கிறேன்..

அந்தக் காலத்தில் கல்கத்தாவில் தென்னகத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளிகள் தான் இருந்தன.. ஒன்று நேஷனல் ஹை ஸ்கூல்.. இரண்டாவது ஆந்திரா அசோசியேஷன் ஸ்கூல்.. இரண்டு பள்ளிகளுமே இன்றும் பெரும் வளர்ச்சி பெற்று அமோகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.. இந்த இரண்டு பள்ளிகளுக்குமே மூலத்தைத் தேடினால் ஏதோ ஒரு உருவில் முப்பதுகளில் துவக்கப் பட்டதாகத் தெரிகிறது.. காலப் போக்கில் பல மாற்றங்கள் கண்டு இன்று இந்த வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன..

முக்கியமான விஷயம் என்னவென்றால்.. இந்த இரண்டு பள்ளிகளிலுமே தமிழ் பாடமாகக் கற்றுத் தரப்பட்டது தான்.. நான் இந்த அளவுக்கு ஏதோ கிறுக்குகிறேன் என்றால் அதற்குக் காரணம் ஆந்திரா அசோசியேஷன் பள்ளி எனக்குக் கொடுத்த பால பாடம் தான்..

ஆந்திரா அசோசியேஷன் பள்ளி என்றாலே என்னைப் போன்ற எழுபதுகளின் மாஜி மாணவர்களுக்கு முதலில் நினைவு வருவது பிரைமரி ஸ்கூல் தலைமை ஆசிரியை திருமதி கமலம்மாள் தான்.. ரொம்பவே கண்டிப்பானவர்.. அதே சமயத்தில் அன்பும் கரிசனமும் ரொம்பவே அதிகம்.. இளவயதிலேயே கணவரை இழந்தவர்.. ஆனால் தன் விடா முயற்சியால் முன்னேறிய அந்தக் காலத்து சிங்கப்பெண்.. எங்கள் குடும்பத்துடன் நெருக்கமானவர்.. ஒரு நாவலுக்குக் கருவாகக் கூடியது அவர் வாழ்க்கை.. சொந்தங்களின் முன்னேற்றத்துக்காக உழைத்தவர்.. கடைசி காலத்தில் அவர்களால் நிராகரிக்கப் பட்டு நிர்கதியாகக் கிடந்தார் என்ற செய்தி அவர் இறந்த பிறகு தான் எங்களுக்குத் தெரிந்தது.. முன்னமேயே தெரிந்திருந்தால் உதவியிருக்கலாமே என்ற வருத்தம் என் போன்ற பலருக்கும் உண்டு..

பள்ளியில் பிரைமரி பிரிவிலிருந்து செகண்டரி பிரிவுக்கு நாங்கள் உயர்ந்த போது.. செகண்டரி பிரிவுக்கு திரு. O. கங்காதரன் என்பவர் தான் தலைமை ஆசிரியராக இருந்தார்.. கிட்டத்தட்ட ஐந்தரை அடிக்கு மேல் உயரம்.. கருப்பு நிறம்.. அதை விட கருப்பான முடி.. குளோசாக வெட்டப் பட்டிருக்கும்.. எண்ணை வடிய பக்கவாட்டில் வாரியிருப்பார்.. நெற்றியில் சந்தனக் கீற்று (பாலக்காடு பூர்வீகம்). தடிமனான கருப்பு பிரேம் கொண்ட மூக்குக் கண்ணாடி.. எப்பவும் சிலாக் தான் போடுவார்.. அதுவும் அநேகமாக அந்தக் காலத்தில் பிரசித்தமான டெர்லின் துணியில் தைக்கப் பட்டதாக இருக்கும்.. சாதாரணமாக இடுப்புக்கு மேலே பேண்ட் அணிவார்கள்.. ஆனால் அவர் கிட்டத்தட்ட மார்பிலிருந்து பேண்ட் அணிந்திருப்பார்.. சட்டையை அதில் டக் செய்திருப்பார்.. சட்டைப் பையில் எப்பவும் பௌண்டன் பேனா சொருகியிருக்கும்.. கையில் வாட்ச்.. காலில் பள பள கருப்பு ஷூ.. பாரதி சொன்ன நிமிர்ந்த நன்னடையும்.. நேர் கொண்ட பார்வையும்.. இவரிடம் தான் முதலில் பார்த்தேன்.. ரொம்ப சீரியஸான கண்டிப்பான மனிதர்.. அவரைப் பார்த்தாலே தலைமை ஆசிரியர் என்ற நினைப்பு வந்து விடும்.. அவர் கரத்தினால் கன்னம் பதம் பார்க்கப் படாத மாணவர்களே இருக்க முடியாது (என்னையும் சேர்த்துத் தான்).. அதிருஷ்டம் இருந்தவர்கள் அவர் கரத்தில் தன் செவியைக் கொடுத்து துணியைப் பிழிவது போல் முறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.. எப்பவும் கணீரென்ற குரலில் அழுத்தம் திருத்தமாக ஆங்கிலத்தில் தான் பேசுவார்.. எப்பவாவது தமிழில் பேசும்போது பாலக்காட்டுச் சாயல் பளிச்சிடும்.. கண்டிப்பாக இருந்தாலும் நல்ல மனிதர்.. சில வருடங்களுக்குப் பிறகு ராஜினாமா செய்து விட்டு கேரளாவுக்கேப் போய்விட்டார்..

அடுத்து திரு. Y.N. யாஜுலு தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.. அவர் பணியில் சேர்ந்தபோதே ஓய்வு பெற்றவர் போல் தான் காட்சியளித்தார்.. கோட், டை, ஷூ இல்லாமல் பள்ளிக்கு வர மாட்டார்.. (அந்தக் கோட்டை அவர் வாஷ் பண்ணவே மாட்டாரா என்று மாணவர்கள் கிண்டலடித்ததுண்டு.. கர்ணனுக்குக் கவச குண்டலம் மாதிரி அவருக்கு அவர் அணியும் கோட்.. கோடையிலும் கழட்ட மாட்டார்). வெள்ளைக் கம்பிகளாக அடர்த்தியான முடி.. இவரும் கண்ணாடி அணிந்திருப்பார்.. திரு. கங்காதரனுக்கு நேர் எதிர்.. அவரது கணீர் குரல்.. இவர் பேசுவதே காதில் விழாது.. அதுவும் பேசும் போது பேச்சை விட விசில் சத்தம் தான் அதிகம் வரும்.. சில சமயம் எங்களுக்கு இங்கிலீஷ் பாடம் எடுக்க வருவார்.. சத்தியமாக அவர் பேசுவது முதல் பெஞ்சில் இருப்பவர்களுக்கேப் புரியாது.. அடிக்கடி மூக்குப் பொடி சிட்டிகை எடுத்து உறிஞ்சுவார்.. இவரும் ரொம்ப நல்ல மனிதர்.. நாங்கள் பள்ளியை விட்டு வரும் வரை இவர் தான் தலைமை ஆசிரியராக இருந்தார்.. எழுத்தாளர் திரு. நரசய்யாவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு திரு. யாஜுலுவின் நினைவு தான் வரும்.. கிட்டத்தட்ட அதே முகம்….

படத்தில் : கமலம்மா டீச்சர் / யாஜுலு சார்