சில நினைவலைகள் சில ஆசிரியர்கள்!/ஜெ.பாஸ்கரன்

அது எட்டாம் வகுப்பு வரை மட்டும் உள்ள முனிசிபாலிடி பள்ளிக்கூடம். உள்ளே நுழைந்து, நேராக இருக்கும் கொடி மரத்துக்கு வலது புறம் திரும்பி அந்தக் கட்டடத்துக்குள் செல்ல வேண்டும். காலை வேளையாயிருந்தால், அமெரிக்க மஞ்சள் நிற ரவையில் கிளறப்படும் உப்புமா வாசம் வெங்காய மணத்துடன் வீசுவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இடது பக்கம் எப்போதும் முள் தாடியுடன், சிந்தனை வசப்பட்ட முகத்துடன் குப்புசாமி சாரின் ஐந்தாம் வகுப்பு – கசமுசவென்று குழந்தைகளின் பேச்சுக்குரலும், ‘ஏய் சத்தம்போடாத’ குரலுடன் ஒரு பிரம்பு மேசையைத் தட்டும் ஒலியும் சேர்ந்தே, ஒரு ரிதத்துடன் இடைவெளிவிட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்! தாண்டிப்போனால் மரப்பலகை தடுப்புகளுக்கு இடையே நான்கு வகுப்பறைகள்.

இடது பக்கக் கடைசியில்தான் தாரா சாரின் வகுப்பு…ம்ஹூம் கைத்தொழில் கற்றுக்கொடுக்கும் ஓர் ஆலயம்! துணி நெய்யும் ‘தறி’ ஒன்று பாதி நெய்த துணியுடன் இருக்கும். புத்தகப் படிப்புடன் கைத்தொழிலையும் கற்றுக்கொடுத்த காலம் அது.. நூல் நூற்றல், பாவு போடுதல், பதப்படுத்திய நூலை தறியில் பூட்டி, துணி நெய்தல் இவையெல்லாம் அன்று கற்றுக்கொடுத்தார்கள்!

தறியில் அமர்ந்து, காலால் பலகையை மாற்றி மாற்றி அசைத்து, கைகளால் இடையில் செல்லும் ஊடு பாவு நூலை இடமும் வலமும் செலுத்துவது ஒரு தேர்ந்த கலை. கற்றுக் கொடுத்தவர் தாரா என்னும் தா.ராமலிங்கம் சார். ஓவியம் வரைவது, கிராஃப் தாளில் வண்ணங்களில் டிசைன் போடுவது, அழகாக எழுதுவது – பள்ளிக்கூட சிறப்புதினங்களில் கரும்பலகையில், பல வண்ண சாக்பீஸ் கொண்டு அவர் எழுதிய வரவேற்புகள் மறக்க முடியாதவை – என புத்தக வாசிப்பைத்தாண்டி, பல திறமைகளை வளர்த்தார் தாரா சார். ஐந்தரை அடிக்குள் உயரம், வெள்ளை நிறத்தில் எட்டு முழ வேட்டி, அரைக்கை சட்டை, நெற்றியில் கருப்புப் பொட்டு (சின்னதாக, மையோ, சாந்தோ நினைவில் இல்லை), சிரித்த முகம்! மறக்க முடியாத ஆசிரியர். அப்போது வெளிவந்த ‘தெய்வப் பிறவி’ பாடல், தாரா தாரா வந்தாரா – அவர் காதுபடப் பாடினாலும் சிரிப்புமாறாத முகம். தலையெழுத்து எப்படியோ, கையெழுத்தை நன்றாகப் பழக்கிய தாரா சார் எங்கிருந்தாலும் என் வணக்கமும், வந்தனமும்!

இராமகிருஷ்ணா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன் – IX ‘K’ section – புதிய மாணவன் ஆகையால் புதிய பத்தாவது செக்‌ஷனில் இடம் கொடுத்திருந்தார் தலைமை ஆசிரியர் திரு.சுவாமிநாத ஐயர்.

வெளிர் நீல டெரிலீன் அரைக்கை சட்டை அணிந்து ஆடாமல் அசையாமல் ஒரு பொம்மை வருவதைப் போல வருவார். சிறப்பாக அறிவியல் பாடம் எடுப்பார். கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. கேள்வி கேட்டு பதில் தெரியவில்லை என்றால் கோபிக்க மாட்டார். அதிக பட்சமாக, ‘நீ சட்டையின் மேல் பட்டனைப் போடவில்லை. அதனால்தான் உனக்கு விடை தெரியவில்லை’ என்று நாசூக்காக, மேல் பட்டனைத் திறந்து வைத்துக்கொண்டு வரும் மைனர்களைச் சுட்டுவார். ஒழுக்கம், அணியும் உடையிலிருந்து தொடங்குகிறது என்பதைக் கற்றுக்கொடுத்த ஆசிரியர். ‘கபாலி’ சார்.

அப்போதெல்லாம் கால், அரை, முழுப் பரீட்சைகள்தான். கால் பரிட்சை முடிந்து, பேப்பர் திருத்தி, கையில் பேப்பர் கட்டுடன் முதல் நாள் வகுப்புக்குள் வந்தவுடன், ‘பத்து வகுப்பிலும் முதல் மார்க் நம் வகுப்பில்தான் (94%)’ என்று மகிழ்ந்த அந்த ஆசிரியரின் முகம் இன்னும் என் நினைவில் நிழலாடுகிறது. ஆசிரியர் ஒருவர்தான் தன்னை விட உயர்ந்த நிலைக்குத் தன் மாணவன் சென்றாலும் பெருமையும் மகிழ்ச்சியும் அடையக் கூடியவர் என்பதை உணர்ந்த தருணம் அது. அந்த முதல் மார்க் வாங்கியவன் புதியதாகச் சேர்ந்த நான் தான் என்பதைச் சொல்ல தன்னடக்கம் தடுத்தாலும், கோபமோ, சிரிப்போ அன்றி சாந்தமான புன்னகையுடன் வாழ்த்திய கபாலி சாரை எப்படி மறக்க முடியும்?

மருத்துவக் கல்லூரியின் அந்த சிவப்புக் கட்டடம் – பல தலைமுறை ஆசிரியர்களைக் கண்ட அனாடமி தியேட்டர்! இறந்தபின்னும் தன்னுடல் தந்து, எங்களுக்குப் பாடம் சொன்ன பெயர்,முகம் அறியா எத்தனையோ ஆசிரியர்கள் – Cadavers – அந்த சிவப்பு கட்டடத்துள் ஞானம் போதித்த அந்த குருமார்களை வணங்குகிறேன்.

கருவியல் (Embryology) எப்போதுமே கடினமான பாடம். புரிந்துகொள்வதற்கே சிரமம். ஒரு செல் இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு பதினாறாகி வேறு வகையில் நகர்ந்து உடலின் பல பாகங்களாக உருமாற்றம் அடைவைதைச் சொல்லும் பாடம். சிறிதும் குழப்பமின்றி, கரும்பலகையில் செல்கள் பிரிவதிலிருந்து, பல்வேறு உறுப்புகளாக மாற்றம் அடையும்வரையிலான விந்தையை தன் இரு கைகளினாலும் வரைந்து, குழந்தைக்கு ஒரு தாய் சோறு ஊட்டுவதைப்போலக் கற்றுக்கொடுத்த என் அனாடமி பேராசிரியர் கூப்பர் அவர்களை நினைத்து வணங்குகிறேன்!

நாம் அமரும் இடம் (‘தள்ளி உட்கார்’ எஸ் வி சேகர் ஜோக் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!) மிகவும் சிக்கலான தசைகளையும், நரம்பு, இரத்தக் குழாய்களையும் கொண்டது. வாசித்துப் புரிந்து கொள்ள முடியாது. டிசெக்‌ஷன் செய்வதும் கடினம். பேராசிரியர், ஒரு கேடவரில் அழகாக டிசெக்‌ஷன் செய்து, படிப் படியாக, லேயர் லேயராகப் பிரித்து சொல்லிக்கொடுக்கும் அழகே அழகு!

விழித்திரையில் ஏதோ சின்ன குறை – ஒரு வாரம் விடுமுறைக்குப் பிறகு வந்தவர், வகுப்பெடுக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து, விட்ட இடத்திலிருந்து கற்றுக்கொடுத்த பேராசிரியர் கூப்பரை மறக்க முடியுமா?

கால வெளியில் எத்தனையோ ஆசிரியர்கள் – அமைந்த அத்தனை ஆசிரியர்களும் கல்வியும், வாழ்வியலும் சேர்த்தே கற்பித்தார்கள் – தாங்களே முன்மாதிரியாகத் திகழ்ந்து!

அத்துணை ஆசிரியர்களையும் என் சிரம் அவர்கள் பாதம் பட விழுந்து வணங்குகிறேன்!

ஆசிரியர் தின வாழ்த்துகள்!!