காங்கிரஸின் எதிர்காலமும் இந்தியாவின் நிலையும்/ஆர்.அபிலாஷ்

ராகுல் காந்தியின் வாக்குறுதிகளைப் பார்க்கையில் கேஜ்ரிவாலின் வாக்குறுதிகள் மேல் எனத் தோன்றுகிறது. அவராவது நடத்தி காட்டி விட்டார். காங்கிரஸ் மத்தியில் அடுத்து ஆட்சிக்கு வர 20-40 வருடங்களாவது ஆகி விடும் எனும் போது வாக்குறுதிகளால் என்ன பயன்? இறங்கி வேலை செய்ய வேண்டும். ஒரு சாம்பிளுக்கு பெட்ரோல் விலையைக் குறையுங்கள் என்று பெட்ரோல் நிலைய ஆக்கிரமிப்பு போராட்டம் பண்ணலாம். அன்பானி, அதானி கொடும்பாவிகளை எரிக்கும்படி நாடு முழுக்க வேண்டுகோள் விடுக்கலாம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக பிரச்சனைகளை எழுப்பி இத்தனை ஆயிரம் பேராவது கைதாகி சிறை செல்ல வேண்டும் என இலக்கு வைத்து போராட வேண்டும். மோடியைத் தாக்காமல் அவரது ஆட்சியின் பின்னுள்ள கோளாறுகளை, மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தலாம். எந்த பிரச்சினை வந்தாலும் டிவீட் போடுமுன் ராகுல் தெருவில் இறங்கி போராடுவார், சாகும்வரை உண்ணவிரதம் இருப்பார் எனும் பயத்தை ஏற்படுத்தலாம். இந்த நாடு தழுவிய நடைபயணத்தால் என்ன பயன்? மக்கள் என்ன ராகுலை இதுவரை பார்த்ததில்லையா? வந்து மக்களுக்காக நிற்கிறீர்களா என்பது தானே முக்கியம்! கர்நாடகத்தில் ஊழல் பிரச்சினை பெரிதாக வெடிக்க போது ராகுல் இங்கே வந்து ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டும்! ஆனால் உள்ளூர் தலைவர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். பாஜக நைசாக வந்து அமைச்சரவையை மாற்றி புகையை கலைத்து விட்டது.

இப்படி ஒரு எதிர்க்கட்சியாக எவ்வளவோ செய்யலாம். ஆனால் ஒன்றுமே செய்ய மாட்டார்கள். கட்சியை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகக் கருதி நடத்துகிறார்கள். கட்சிக்கு கார்ப்பரேட்டுகள் முதலீடு பண்ண வேண்டும், அவர்களுடைய ஆதரவைப் பொறுத்தே களமிறங்கிப் போராடுவது, அதுவரை சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குவது, அவ்வப்போது மட்டும் சப்தமிடுவது என ஒரு கட்சி இயங்கினால் அது எதிர்க்கட்சி அல்ல. அக்கட்சி “பிரதமர் இரண்டு பணக்காரர்களுக்காக மட்டும் வேலை செய்கிறார்” என்று கூவினால் மக்கள் நம்ப மாட்டார்கள். கார்ப்பரேட்டுக்கு கூஜா தூக்காத மாற்று அரசியல் உங்களுடையதா, அது என்ன எனக் கேட்க மாட்டார்களா? அதற்கு ராகுலிடம் பதில் உள்ளதா? நீங்கள் இதுவரை ஆட்சி பண்ணின போது டாட்டா, அம்பானிகள் சம்பாதித்தது என்ன? குறைந்தது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார திட்டங்கள் இன்னின்ன, இப்படி இப்படி வளர்ச்சிக்கான பாதையை உருவாக்குவோம் என சொல்ல வேண்டாமா? அந்த ஓட்டலில் தோசையாகப் போட்டு சாவடிக்கிறார்கள், நாங்கள் பரோட்டா போடுவோம் என்றாவது சொல்ல வேண்டாமா?

காங்கிரஸின் மதசார்பின்மை கொள்கையும் சந்தேகத்துக்கு உரியதே. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொதுமக்களே திரண்டு வந்து போராடினர். காங்கிரஸ் தள்ளி நின்று கைகட்டியபடி மௌன ஆதரவு – அதாவது நாங்கள் சட்டத்தை எதிர்க்கவும் மாட்டோம் நேரடியாக போராட்டத்தை ஆதரித்து பங்கெடுக்கவும் மாட்டோம் – தெரிவித்தது. ஏனென்றால் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டால் தம்மை இந்து விரோதிகள் என சித்தரிப்பார்களோ எனும் பயம் இதைப் போல ஒரு அவலம் உண்டா? இப்படியான கட்சி நாளை ஆட்சிக்கு வந்தால் இது போன்ற மக்கள் விரோத, மதவெறி சட்டங்களை அகற்றி சிறுபான்மையினரை பாதுகாப்பாளர்கள் என சிறுபான்மையினருக்கே நம்பிக்கை போய் விட்டது. அவர்கள் மூன்றாவது அணி நாடகக்குழுக்களுக்கு தம் வாக்குகளை அளித்தார்கள். இப்படி காங்கிரஸுக்கு சிறுபான்மையினரின் வாக்குகளும் இல்லை, பெருமான்மைவாத இந்துக்களின் வாக்குகளும் இல்லை. மதவாத எதிர்ப்பு என வாய்ஜாலத்தால் மட்டும் மக்களை நம்ப வைக்க முடியாது ராகுல் ஜி. செயல் – அதுதான் அரசியலில் எடுபடும். இந்த பக்கமோ அந்த பக்கமோ உறுதியாக நின்றாலே மக்கள் நம்புவார்கள்.

இப்படியே போனால் காங்கிரஸ் தன்னையே அழித்துக் கொள்ளும் நாள் தொலைவில் இல்லை. சோனியா அம்மையார் தான் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவரது பிடி நழுவும் போது கட்சி சிதறும். அதுவே காங்கிரஸுக்கும் நல்லது. புதிய தலைமைகளுடன் அக்கட்சி புத்துயிர்க்கட்டும். புதிய கட்சிகள் தோன்றி வளரட்டும். அவை ஒன்றிணைந்து ஒரு வலுவான எதிர்க்கட்சியாக முடியும். அவர்களை இணைக்கும் ஒரு இணக்கமான தலைமை மட்டும் போதும். ஒற்றை பலவீன எதிரியை விட நூறு சிறு எதிரிகளே ஆபத்தானவர்கள். சாம்ராஜ்ஜியங்களின் வீழ்ச்சிகள் இப்படியான சிறு எதிரிகளின் பல்முனைத் தாக்குதல்களால் ரத்தம் சோர்ந்தே நிகழ்ந்துள்ளது என்பதே வரலாறு. அதுவே இந்தியாவின் ஒரே நம்பிக்கை எனத் தோன்றுகிறது!