அண்ணாமலை ரெட்டியார்/அனந்தகிருஷ்ணன் பட்சிராஜன்

அண்ணாமலை ரெட்டியாரைப் போல காவடிச் சிந்து பாட முடியாமா என்ற சவாலை பாரதி ஏற்றுக் கொண்டு ‘பச்சைத் திருமயில் வீரன்’ என்ற பாடலை சிறுவனாக இருக்கும் போது இயற்றினார் என்று கதை ஒன்று உலவுகிறது.
அண்ணாமலை ரெட்டியார்தான் காவடிச் சிந்தை அறிமுகப் படுத்தினார் என்கிறார்கள். எனக்கென்னவோ இப்பாவடிவம் ரெட்டியாருக்கு முன்னாலேயே இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை.
ரெட்டியார் 26 வயதே (1865-1891) வாழ்ந்தவர். அரையாப்பினால் அவதிப் பட்டு கொண்டிருந்தார் என்பது அவருடைய பாடல்களில் இருந்தே தெரிய வருகிறது. அரையாப்பு என்றால் ப்ளேக் அல்லது தொடையிடுக்களில் ஏற்படும் கட்டி.

இவர் பாடல்களில் சிந்து பாடும் பெண்கள் மிகவும் துணிச்சல் மிக்கவர்களாக் இருக்கிறார்கள்.
முருகப் பெருமானை ஓட ஓட விரட்டும் இப் பெண் சொல்பவற்றைக் கேளுங்கள்.

“ஆறுமுக வடிவேலவ னே! கலி-
யாணமும் செய்யவில்லை; – சற்றும்
அச்சம்இல் லாமலே கைச்சர சத்துக்கு
அழைக்கிறாய், என்ன தொல்லை?

மீறிய காமம்இல் லாதபெண் ணோடே
விளம்பாதே வீண்பேச்சு – சும்மா
வெள்ளைத் தனமாகத் துள்ளுகிறாய்; நெஞ்சில்
வெட்கம் எங்கே போச்சு?

மேட்டிமை என்னிடம் காட்டுகிறாய், இனி
வேறில்லையோ சோலி? – இதை
வீட்டில் உள்ளார் கொஞ்சம் கேட்டுவிட்டால், அது
மெத்தமெத்தக் கேலி!

தாட்டிகம் சேர்கழு காசல மாநகர்
தங்கும்முரு கோனே! – இந்த்ர
சாலத்தி னால் என்னைக் காலைப் பிடித்தாலும்
சம்மதியேன் நானே.

‘அக்கரைக் காரர்க்குப் புத்திகொஞ் சம்’ என்பார்
ஆரும்பழ மொழியே,- நீயும்
அப்படி என்னைப் பலாத்காரம் செய்திடில்
ஆச்சுது பெண் பழியே.

சர்க்கரைக் கட்டிபோல் வள்ளிதெய் வானையாம்
தையல்உனக் கிலையோ? – இரு
தையலரைச் சேரும் மையல் உனக்கென்ன
தானும்ஒரு நிலையோ?

அம்புவி மேல்சிறு பெண்களில் மேல்உனக்கு
ஆசை ஏன் காணுதையா? – நீர்
ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறாதவ-
ராகவேதோணு தையா!

நம்பும்அண் ணாமலை தாசன் பணியும்
நளினமலர்ப் பாதா! – கொஞ்ச
நாளைக்கு மேல் ஒரு வேளைக் குலீலை
நடத்தினால் ஆகாதா?”