இன்று ஆசிரியர் தினம்/சோ.தர்மன்

இன்று ஆசிரியர் தினம்.எனக்கு ஏராளமான ஆசிரியர்கள் நண்பர்களாக இருந்தாலும் மறக்கவே முடியாத ஆசிரியர் வேலு வாத்தியார்.கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் வேலு வாத்தியார் பெயரை தெரியாத கல்வித்துறை அதிகாரிகள் இருக்கவே முடியாது.
எந்த ஊரிலும் அவர் ஆறுமாதம் கூட தொடர்ச்சியாக பணியாற்றியதில்லை.எங்காவது தூக்கியபடித்துக் கொண்டேயிருப்பார்கள்.எந்தப் பள்ளிக் கூடத்திற்கு போனாலும் யாரும் அவருடன் பேசமாட்டார்கள்.ஏனெனில் கல்வியதிகாரிகளுக்கும் தலைமையாசிரியருக்கும் எப்போதும் சிம்ம சொப்பனம் வேலு வாத்தியார்.
அவர் எந்த யூனியனிலும் உறுப்பினராக இருந்தது கிடையாது.அதே சமயம் பள்ளிக்கூடங்களில் நடக்கும் ஊழல்களையும் அதற்கு உடந்தையாக இருக்கும் ஆசிரியர்கள் சங்கச் செயல்பாட்டாளர்களை வறுத்தெடுப்பார்.அவர்களின் அயோக்கியத்தனங்களை விமர்சிப்பார்.
‌ நல்ல வாசகர்.1990கால கட்டம்.என்னிடம் ஏதோ ஒரு புத்தகம் கேட்டு வந்தார்.அதிலிருந்துதான் அறிமுகம்.அப்போது அவர் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.புத்தகத்தை திருப்பிக் கொடுக்க வந்த போது தான் கழுகுமலை பள்ளியிலிருந்து நாலாட்டின் புத்தூர் சாரதா மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றி வந்து விட்டதாகவும்,தலைமையாசிரியருடன் சண்டை போட்ட விவரத்தையும் சொன்னார்.
சரியாக மூன்று மாசம் கூட ஆகவில்லை.நாலாட்டின்புத்தூர் காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டருக்கும் இவருக்கும் தகராறு.இருவர் வீடும் அருகருகே.வாத்தியாரை ஒரு அடி அடித்து விட்டார்எஸ்.ஐ.உடனே வேலு வாத்தியார் அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகி மெடிக்கல் சர்ட்பிகேட் எடுத்து சப்இன்ஸ்பெக்டரின் மேல் பிரைவேட் வழக்கு தொடுத்து எஸ்.ஐ.யின் மீது வழக்குப்பதியும்படியான கோர்ட் ஆர்டரை வாங்கி விட்டார்.எஸ்.ஐ.வெலவெலத்துப் போனார்.அப்புறம் ஊர் பிரபலங்கள் எல்லாம் தலையிட்டு இருவரையும் சமரசம் பண்ண வைத்து வழக்குகளை வாபஸ் வாங்க வைத்தோம்.
அத்தோடு கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தூக்கியடிக்கப்பட்டார்.ஒவ்வொரு முறை என்னை சந்திக்க வரும்போதும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேட்கவே இல்லை.தலைமையாசிரியருக்கு ஜால்ரா தட்டும் யூனியன் தலைவர்களுடன் எப்போதும் வாக்குவாதம் பண்ணுவார்.கயத்தாரில் டீ குடிக்கப் போயிருக்கிறார்.அங்கே ஒரு தகராறு.தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஆதிக்க ஜாதிக்காரர் ஒருவர் ஜாதியைக் குறிப்பிட்டு திட்டியிருக்கிறார்.உடனே வாத்தியார் அந்த நபரை கூட்டிக் கொண்டு போலீஸ் ஸ்டேசன் போய் தீண்டாமை வழக்கு பதிவு செய்ய வைத்து விட்டார்.அவர்கள் இவரை வெட்டுவதற்கு அரிவாளுடன் அலைய இவர் சிறிதும் பயப்படாமல் பள்ளிக்கூடம் போய் வந்தார்.வேலு வாத்தியாரை நான் கடிந்து கொண்ட போது அவர் சொன்னார்.
“தைரியம் இருந்தால் என்னை வெட்டிக்கொல்லட்டும்.நான் சாகத் தயார்.ஆனால் என் கண்முன்னால் நடக்கும் ஒரு அநீதியை நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்”
வேலு வாத்தியார் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.எந்த ஜாதிப் பின்புலமும் அவருக்கு கிடையாது.அப்புறம் அந்த ஊர் ஜமீன்தார்வரை தலையிட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தோம்.அத்தோடு வெகுதூரம் வேம்பார் கடற்கரைக்கு தூக்கியடிக்கப்பட்டார்.கடற்கரைக் கிராமம்.இவருக்கும் இவருடைய குடும்பத்தாருக்கும் கடற்காற்று ஒத்துக் கொள்ளவில்லை.விதவிதமான நோய்கள்.ரொம்ப கஷ்டப்பட்டார்.நிறைய ஊர்களில் காலிப்பணியிடங்கள் இருந்தும் இவருக்கு மாற்றல் மறுக்கப்பட்டது.
அப்போது எங்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்தவர் மதிப்பிற்குரிய எழுத்தாளர் திருமதி.சிவகாமி அவர்கள்.நானே அவரைக் கூட்டிக் கொண்டு கலெக்டரை சந்தித்தேன்.வாயே திறக்கக் கூடாது என்று சொல்லித்தான் கூட்டிப் போனேன்.பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று ஆரம்பித்து கலெக்டர் முன்னால் கொட்டித்
தீர்த்து விட்டார்.
எங்கள் முன்னாலேயே மாவட்டக் கல்வியதிகாரியிடம் பேசி கோவில்பட்டி வ.உ.சி.அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தார்.அப்போது கோவில்பட்டி பகுதியில் பிரபலமானவராக ஒரு ஆசிரியை இருந்தார்.அவர் மூலமாகத்தான் எல்லா வேலை மாற்றங்களும் நடக்கும்.அவருக்கு மேலிடத்தில் பரிபூரண ஆசிர்வாதம் இருந்தது.யாருமே அவருக்குத் தெரியாமல் மாற்றலாகி வரவோ போகவோ முடியாது.வேலு வாத்தியார் தனக்குத் தெரியாமல் எப்படி மாற்றலாகி கோவில்பட்டிக்கு வந்தார் என்று அந்த டீச்சரம் மாவுக்கு கோபம்.இருவருக்கும் வாக்குவாதம்.நம்மாள் சொல்லியிருக்கிறார்.
“ஒழுங்காயிரு இல்லனா ஒரு மணி நேரத்துல ஒன்னைய தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திருவேன்”
டீச்சர் வெலவெலத்துப் போனார்.வ.உ.சி.அரசுமேல்நிலப்பள்ளியில் தலைமையாசிரியர் முத்துராமலிங்கம்.பிரேயரில் பேசிக்கொண்டிருக்கிறார்.அத்தனை மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில்.
“பள்ளியில் புதிதாக ஒரு வாசல் வைக்க வேண்டியதிருக்கிறது.இவ்வளவு செலவாகும்.பையன்கள் ஒவ்வொருவரும் ஒரு செங்கல் வாங்கிக் கொடுத்தால் வேலையை முடித்து விடலாம்.”
அடுத்த நிமிஷமே வேலு வாத்தியாரிடமிருந்து பிரேயரிலேயே பதில் வருகிறது.
“மரம் வளர்க்க அரசு கொடுத்த பணம் எங்கே போச்சு.எந்த மரத்தை வளர்த்தீர்கள்.எல்லாப் பணத்தையும் ஆட்டையைப் போட்டுட்டு வெட்கமில்லாம பையன்ககிட்ட பணம் கேட்கிறீரு”
தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் அரண்டு போனார்கள்.அந்த டீச்சரும் தலைமையாசிரியரும் கூட்டு சேர்ந்து கொண்டு வேலு வாத்தியாரைப் பழி வாங்க முயன்றார்கள்.வகுப்பில் வைத்து பீடி குடித்தார் என்றும் மாணவர்களை கடையில் போய் பீடி வாங்கி வரச் சொன்னார் என்றும் மேலதிகாரிகளிடம் புகார் செய்தார்கள்.எந்த மாணவனும் அவருக்கு எதிராக சாட்சி சொல்லவில்லை.ஏனெனில் பையன்களிடம் அவ்வளவு அன்பாகச் பழகுவார் நிறைய்ய உதவிகள் செய்வார்.
திடீரென்று ஒருநாள் பார்த்தால் கோவில்பட்டி நகர் முழுக்க வேலு வாத்தியாரை கைது பண்ணச் சொல்லி தட்டிப் போர்டுகள் வால்போஸ்டர்கள்.
“தலைமையாசிரியருக்கு கொலைமிரட்டல் விடும் வேலு வாத்தியாரை கைது செய்”
“மாணவர்களை தூண்டிவிடும் வேலு வாத்தியாரைக் கைது செய்”
ஃபோர்டு வைத்தவர்கள் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் நகரக் குழு.நான் அப்போதுஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்கத்தில் இருந்தேன்.இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் நகரச் செயலாளருடன் சண்டையிட்டேன்.கட்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்றும் இது பள்ளிக்கூடத்தில் நடக்கும் பிரச்சினையென்றும் அவர்கள் உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் உங்களுக்கு இது தேவையில்லை என்று சொல்லி தட்டிப் போர்டுகளை அப்புறப்படுத்த வைத்தேன்.அப்புறம்தான் தெரிந்தது.தலைமையாசிரியரும் நகரச் செயலாளரும் உறவினர்கள் என்று.
சிலநாட்களில் வேலு வாத்தியார் நடு ரோட்டில் வைத்து கூலிப்படையினரால்மிகக் கடுமையாக தாக்கப்பட்டார்.தாக்கியவர்கள் யாரென்று அடையாளம் தெரியவில்லை.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்த ஆசிரியர் தின நாளில் வேலு வாத்தியாரை நினைவு கூறுகிறேன்.அவரை மாதிரி அநீதியை எதிர்க்கும் துணிவு உள்ள ஆசிரியர்கள் அபூர்வம்.