மெய்யுறு புனைவு/அ.முத்துலிங்கம்

என் கையிலே இந்தப் புத்தகம் இரண்டு தடவை தொலைந்து மீண்டும் கிடைத்தது. ‘உன் கடவுளிடம் போ’ என்ற இந்த சிறுகதை தொகுப்பை மற்றப் புத்தகங்களைப்போல விரைவில் படித்துவிட முடியாது. மிகவும் அடர்த்தியான கதைகள். நீங்கள் என்ன நினைத்துப் படிக்கிறீர்களோ அது நடக்காது. புதிதாக ஏதாவது நிகழ்ந்துகொண்டே இருக்கும். உருண்டையான ஆப்பிளை உருட்டி உருட்டி எங்கே கடிக்கலாம் என்று குழந்தை யோசிப்பது போல இதை எழுதுவதற்காக தயங்கியபடியே நேரத்தை கடத்தினேன்.

ஒருமுறை அமெரிக்க அறிவியல் புனை கதை எழுத்தாளரான ஐசாக் அஸிமோவிடம் எதற்காக எழுதுகிறார் என்று கேட்டார்கள். அடுத்து என்ன வரி தன் டைப்ரைட்டரில் விழுகிறது என்பதை பார்ப்பதற்காகவே தான் எழுதுவதாகச் சொன்னார். அடுத்து என்ன வரி வரும் என்பது அவருக்கே தெரியாது. அப்படித்தான் இந்த சிறுகதை தொகுப்பும். அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகிக்கவே முடியாது. எதிர்பாராத இடங்களில் திரும்பி, எதிர்பார்த்த இடங்களில் நிற்காமல் வேகமெடுத்து, வாசகரை ஒரு புன்னகையோடு தாண்டிச் செல்லும் எழுத்து.

’தராசு’ என்ற சிறுகதையின் ஆரம்பமே திடுக்கிட வைக்கும். ‘கும்பளை ஆறுமுகசாமி ஜட்டி போடாததற்கு எதிரான விசாரணை ஐந்து நாட்களாக மெல்பேர்ன் நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்து அன்று தீர்ப்பு வெளியிடப்படவிருந்தது.’ இப்படியாக ஒரு செய்தி மெல்பர்ன் பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளியாகியது. கதை முடிவதற்கிடையில் நாலு திருப்பம் வந்துவிடும். யாழ்ப்பாணத்தில் தொடங்கி, லண்டன் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா போய் மறுபடியும் யாழ்ப்பாணம் திரும்பி, அங்கே சிறுகதை முடிகிறது. 98 வயதான கும்பளை ஆறுமுகசாமியை சிறீலங்கா போலீஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாடு கடத்துகிறார்கள். காரணம் அவரை ஓர் ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் விசாரிப்பதற்காக. சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாத கும்பளை ஆறுமுகசாமி அளவற்ற மகிழ்ச்சியுடன் கிராமத்தை விட்டு விருது வாங்கப் புறப்படுவதுபோல ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புகிறார்.

உரும்புராய் கார்த்திகேசு மெல்பேர்ன் அருங்காட்சியகத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பிள்ளையாரை தினமும் தரிசிப்பார். பையிலே மறைத்து எடுத்துவரும் பூக்களால் அர்ச்சிப்பார். அந்தப் பிள்ளையார் அப்படியே கரிய மேசையில் கயிற்றுத் தடுப்புக்கு அப்பால் இருக்கும்போது உரும்பிராயில் அவர் வணங்கிய வயற்கரை கோவில் பிள்ளையார் போலவே தோன்றும். இந்தியப் படை உரும்பிராயை நாசம் பண்ணியபோது அழிந்த கோவில்களில் இதுவும் ஒன்று. கார்த்திகேசு வணங்கிய அந்தப் பிள்ளையார் பின்னர் மறைந்துவிட்டார். அவருடைய வலது பக்கக் காது உடைந்திருக்கும். என்ன அதிசயம், அருங்காட்சியகப் பிள்ளையாருக்கும் வலது காது சேதமாகியிருந்தது. ஒருநாள் உணர்ச்சி மேலிட்டு காவல் கயிற்றைத் தாண்டி உள்ளே நுழைந்து பிள்ளையாரைத் தூக்கி விடுகிறார். அந்தச் சம்பவம் போலீஸார் விசாரனையில் பல உண்மைகளை வெளியே கொண்டு வருகிறது.

இப்படியும் நடக்குமா என்று என்னை அதிரவைத்த சிறுகதை மார்ட்டினா. பிரிட்டிஷ் ராணுவத்தின் அணுகுண்டு பரிசோதனைக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்குகிறது. அவர்களின் பரிசோதனை ஆஸ்திரேலியாவின் தெற்குப்பகுதியில் மாரலிங்காவில் உள்ள காட்டில் நடக்கிறது. அங்கே வாழ்ந்த ஆதிகுடிகள் அழிந்துபோகிறார்கள். சிலர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதிலே அபூர்வமாகத் தப்பிய கைக்குழந்தை மார்ட்டினா. அவள் படித்து பெரியவளானதும் தன் மூதாதையருக்கு நடந்த அநீதியை உலகத்தின் கண்களுக்கு வெளிக்கொணர்வதற்காக போராடுகிறாள். மூதாதைகள் வாழ்ந்த நிலத்தை திருப்பி கேட்கிறாள். இறுதியில் அவள் போராட்டம் வெற்றிபெறுகிறது. முதுமையடைந்ததும் முதியோர் காப்பகத்தில் தன் கடைசி நாட்களை மார்ட்டினா கழிக்கிறாள். அங்கே அவளை பராமரிப்பது அகதியான ஈழத்துப் பெண் நளினி. பல வருடங்களாக தன் குடியுரிமைக்கு நளினி காத்திருக்கிறாள். நளினியின் கதையை கேட்டுவிட்டு மார்ட்டினா சொல்வாள் ‘அவர்கள் என்ன இந்த நாட்டிலிருந்து உனக்கு உரிமை தருவது. நான் தருகிறேன். இந்த நாட்டின் சொந்தக்காரி. நீயும் உனது கணவரும் இன்றிலிருந்து ஆஸ்திரேலியர்கள். அவ்வளவுதான்.’

மார்ட்டினா அப்படிச் சொன்னபோது அவளுக்கு அவள் பிறந்த நாட்டில் குடியுரிமை கிடையாது.

சிலப்பதிகாரம் உண்மைக் கதையில் இருந்து பிறந்தது. கற்பனை கூடியது. அதை ’மெய்யுறு புனைவு’ என்று கூறுவார்கள். இந்தத் தொகுப்பை ஒரு மெய்யுறு புனைவு என்று சொல்லலாம். ஓர் உண்மைச் சம்பவம் அல்லது சரித்திர நிகழ்வை ஆதாரமாக வைத்து படைக்கப்பட்ட சிறுகதைகள். வாழ்வின் புதிர்கள், நெருக்கடிகள், அறியாத பக்கங்கள் ஆகியவற்றை தொட்டுச் செல்லும் கதைகள். ஆச்சரியங்களோ, புதிய தகவல்களோ, சிந்திப்பதை தூண்டுவதற்கான உந்துதல்களோ இல்லாத ஒரு சிறுகதையைகூட இந்த தொகுப்பில் காணமுடியாது. அதனாலேயே இது அதிக கவனப் பெறுமானம் கொள்கிறது. Readers are left with more than what they started with என்று சொல்வார்கள். அது இந்தக் கதைகளில் நடக்கிறது.

புத்தகத்தின் தலைப்பு ‘உன் கடவுளிடம் போ.’ ஆசிரியர் தெய்வீகன். இந்த தலைப்பில் தொகுப்பிலே ஒரு கதை இருக்குமே எனத் தேடிப் பார்த்தேன். இல்லை. ஒருவேளை அந்தக் கதையை கடவுளிடம்தான் கேட்டுப் பெறவேண்டுமோ என நினைத்துக் கொண்டேன்.

One Comment on “மெய்யுறு புனைவு/அ.முத்துலிங்கம்”

  1. Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & knowledge/ vision! God is with u all always my friends! Greetings from Sivan Tamil Aalayam/ Sivayogi Ashram/ Sivan Tamil Kulturpark korslundvegen 45,2092 Minnesund Norway! WhatsApp group World Harmony Forum +4791784271

Comments are closed.