இன்னொரு ஆசிரியர் தினப்பதிவு/ஜெயராமன் ரகுநாதன்

அந்த டங்கன் தாடி வாத்யாரை எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.

அவர் வாத்யாரே இல்லை. ஹெட்மாஸ்டர், இது சரியான டெசிக்னேஷனா என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த பால குருகுல் என்கிற ஸ்கூல் அப்போது மிகவும் சின்னது. தி நகரில் எங்கேயோ இருந்தது. நாங்கள் அப்போது ஜவஹர்லால் தெருவில் இருந்தோம்,

அடையாறு வருவதற்கு முன்னால் நடந்த என் குழந்தைப்பருவ நாட்கள்.

“ குழந்தைக்கு நாலு வயசாய்டுத்தொல்லியோ, ஏதானும் ஸ்கூல போடறதுதானே, ஏன் வீட்டுல வெச்சுண்டு மன்னாடிண்டு இருக்கே”

அம்மா அடுத்த நாளே போய் அந்தக்காலத்திலேயே அந்த பால குருகுல் ஸ்கூலில் எல் கே ஜிசேர்த்து விட்டாள்.

என்ன பெரிய ஸ்கூல், காலை ஒன்பது மணிக்கு போனால் பதினொரு மணிக்கு மறுபடி என்னைகூட்டிக்கொண்டு போக அம்மா வந்து விடுவாள்.

ஆன வயசுக்கு என்று இப்போது சொன்னால், என் மரியாதைக்கு ஹானி வந்துவிடும். ஏனோ தெரியவில்லை, அந்த ஸ்கூல் பற்றிய பல நினைவுகள் என் மூளையின் செல்களிலிருந்து அழிந்து போய்விட்டன. நினைவில் இருப்பது ஒன்றிரண்டு நிகழ்ச்சித்துகளும் அப்புறம் அந்த டங்கன் தாடி வாத்யாரும் தான்.

கிளாசில் விளையாடிக்கொண்டிருக்கும் போது அவர் அந்தப்பக்கமாக நடந்து போவார். மற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு நானும் “குட்மார்னிங் பாதர்” என்று கத்தியது நினைவில் இருக்கிறது. இது தினமும் நடக்கும் சமாச்சாரம் என்று தேய்ந்து போன சில செல்கள் தெரிவிக்கின்றன.

கிளாஸ் எனபது மேலே கூரை வேய்ந்து பாதி லெவல் வரை சுவர் வைத்து கட்டப்பட்ட அறை. ப்ரேக் நேரத்தில் அந்த பரப்பெட் சுவற்றின் மேல் பக்கத்துக்கு ஒரு காலைப்போட்டுக்கொண்டு யூனிவர்சல் பேக்கரியில் வாங்கின பன் பட்டர் ஜாம் சாப்பிட்ட நினைவு இருக்கிறது.

இன்றைய நல்லி 100க்கு நேரெதிரில் இருந்த அந்த யூனிவர்சல் பேக்கரியின் கேக்குகளுக்கு ஈடாக pastry அமெரிக்காவிலோ யூரோப்பிலோ இன்று வரை நான் சாப்பிட்ட தில்லை என்றால் “போப்பா, ஒனக்கு ரசனையே இல்லை” என்று மகன் திட்டுவான்.

அவ்வப்போது டங்கன் தாடி வாத்யார் க்ளாசுக்குள் வந்து பசங்களிடம் கேள்வியெல்லாம் கேட்பார். அவ்வப்போது தாடியைத்தடவி விட்டுக்கொண்டே இருப்பார். ஓரிரு சமயம் வாழைப்பழ துணுக்குகளும் வேர்க்கடலைத் தோலியும் தாடியில் ஒட்டி இருப்பதைப்பார்த்திருப்பது இன்னும் மறக்கவில்லை.

அதே மாதிரி முகம் மறைந்து போய்விட்ட ஒரு கிளாஸ் டீச்சர் ஸ்கர்ட் போட்டுக்கொண்டு இருந்ததால் முதல் நாள் அவரின் முழங்காலில் இங்க் கறையைப் பார்த்தேன்.அடுத்த நாளும் அந்த இங்க் கறை இருக்க வீட்டில் அம்மாவிடம் “ என்ன மட்டும் சரியாய் குளிக்கலைன்னு திட்டறியே, எங்க மிஸ் கூட இன்னிக்கு சரியாக்குளிக்கலை” என்று சொன்னதை அம்மா அடுத்த சில வருஷங்களுக்கு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லி சொல்லி சிரித்தது அப்போது புரியவில்லை.

அன்று அம்மா கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து விட்டாள்.
பரப்பெட் சுவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தாள்,
மணி பதின்னொன்று ஆவதற்காக. ஏதோ விஷமம் செய்தேன் என்று நினைக்கிறேன். அந்த சின்ன ஸ்கேலால் டீச்சர் இரண்டு அடி கொடுத்ததை தற்செயலாக அம்மா பார்த்துவிட்டாள்.

அவ்வளவுதான், சரேல் என்று கிளாசுக்குள் புகுந்தாள்.
‘ஏய்! என்று விஜயகாந்த்தின் முன்னோடியை போல ஒரு சப்தம். என் கையை பற்றி இழுத்துக்கொண்டு நேரே டங்கன் தாடி வாத்யாரின் அறைக்குள் புயலென புகுந்தாள்.

நான் அவர் அறையில் இருக்கும் அந்த கலர் கலரான, விநோதமாக மணி அடிக்கும் கடிகாரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

என்னென்னமோ பேச்சு வார்த்தை நடந்தது. கடைசியில் டங்கன் தாடி வாத்யார் தலையை ஆட்டி ஆட்டி மெதுவாக ஏதோ சொன்னார். அம்மாவும் புன்னகைத்தபடியே கேட்டுக்கொண்டு இருந்தாள். பிறகு அவர் என்னை அணைத்து தாடி முற முறப்போடு கட்டிக்கொண்டு “போய் வா” என, நாங்கள் நடேச ரிகஷாவில் வீடு வந்து சேர்ந்தோம்.

அவ்வளவுதான், பால குருகுல்லில் என் படிப்பு முடிந்தது. மீண்டும் வீட்டிலேயே கொட்டம்.

அடையாருக்கு குடி பெயர்ந்தது, இங்கே ஸ்கூலில் சேர்ந்தது அப்புறம்……அப்புறம் என்ன, கோதை நாயகி, சந்திரிகா என்னும் க்ரிஷ்ணம்மாள், வசுந்தரா என்று நான் ஸ்கூல் தினங்களில் செய்த சாதனைகளை நீங்கள் அறிவீர்களே.

அம்மா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் ரோட்டரி கிளப் ஒன்றில் நான் டைரகடராக குப்பை கொட்டினேன் சில காலம். அப்போது ஒரு ஆசிரியர் தினத்தில் Key Note speaker ஆக பேசுவதற்கு ஒரு ஏமாளி ஸ்கூல் என்னை அழைத்திருந்தது. அங்கு பேசும்போது எனக்கு பிடித்த என்னுடைய ஆதர்ச டீச்சர் என் அம்மாதான் என்று பேசியிருந்தேன்.

அன்று இரவு அம்மாவின் வலியை மறக்கச்செய்யும் முயற்ச்சியில் லதா “இன்னிக்கு தெரியுமா உங்க பிள்ளை, உங்க பேரைச்சொல்லி பலத்த அப்ளாஸ் வாங்கினார்” என்றவுடன் அம்மாவுக்கு ரத்தம் இழந்து சோகையான அந்த முகத்தில் .வாயெல்லாம் பல்.
“அப்படியா” என்று கேட்டு மகிழ்ந்தாள்.

“நாந்தான் நன்னா படிச்சேனே அம்மா, நீ ஏன் அவ்வளவு கண்டிப்பா இருந்தே”

“இல்லேடா, பால குருகுல் டங்கன் தாடி வாத்யார் ஒனக்கு நினைவு இருக்கோ? அவர் சொன்னார், இந்த புள்ளய ஜாக்கிரதையா வளர்த்தால் நன்னா வருவான்”.
அதான் ஏதோ எனக்கு தெரிந்த டிஸிப்ளின் காட்டினேன்” என்றாள் .

இந்த ஆசிரியர் தினத்தில் நான் யாருக்கு நன்றி சொல்ல?