என் முதல் கவிதைத் தொகுப்பு/ரவிசுப்பிரமணியன்

என் முதல் கவிதைத் தொகுப்பு வந்த பிறகு கவிஞர் அறிவுமதியின் தொடர்பு கிடைத்தது. அவர் உதவியால் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேக்கப் டெஸ்ட், ஸ்கிரின் டெஸ்ட் எல்லாம் எனக்கு எடுத்தார்கள். எல்லாம் முடிந்து ஒகே சொல்லி, படப்பிடிப்பிற்குக் குற்றாலத்துக்கு வரச் சொல்லித் தந்தி கொடுத்திருந்தார்கள். வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. நான் டைபாயிடு என்று சொல்லிப் போகமால் இருந்துவிட்டேன்.

அதுக்கு முன்னால் கல்லூரி நாடகங்களில் நடித்துப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். பெரும்பாலும் நானே எழுதி நடித்து இயக்கியிருக்கிறேன். ஒருமுறை காரைக்குடியில் தமிழ்நாடு அளவில் நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான நாடகப் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். திருநங்கையாக அதில் நடித்திருந்தேன். அப்போது திருநங்கை என்ற பெயரெல்லாம் கிடையாது. அந்த வேடத்தில் சிறப்பாக நடித்ததற்கு மாநில அளவில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அதை நடிகர் ராஜேஷ் கையால் வாங்கினேன். அதே நாடகத்துக்கு நடிகர் வினுசக்ரவர்த்தி கையாலும் பரிசு வாங்கினேன். சின்ன வயதிலேயே நாடகம், சினிமா ஆர்வம் வந்துவிட்டது என்றாலும் பாரதிராஜா பட வாய்ப்பு கிடைத்தபோது வீட்டில் மனைவியும் சித்தப்பாவும் கடுமையாக மறுத்தார்கள். வியாபாரம் இருக்கிறது, லாட்ஜ் இருக்கிறது, வயல் எல்லாம் இருக்கிறது, நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். நானும் அப்படியே விட்டுவிட்டேன். அதற்குப் பிறகு, ராபர்ட் ராஜசேகரன் ஒரு படத்தை எடுக்க ஆரம்பித்தார். என்னுடைய நண்பர் விசாகன் கல்லூரியில் என் சீனியர். எங்கள் கல்லூரி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், அவர் ராஜசேகரிடம் உதவியாளராக இருந்தார். அவர் மூலமாக அந்தப் படத்தில் நடிக்க சென்னை வந்தபோது, அந்த அலுவலகம் போகும் வழியில், ஒரு பெரிய விபத்து நடந்தது. இடது காலில் கார் ஏறி இறங்கிவிட்டது. இனிமே கால் வராது, எடுக்க வேண்டும், அல்லது நடக்க முடியாது என்கிற மாதிரியான ஒரு சூழ்நிலை. எப்படியோ ஒரு வருடத்தில் எல்லாம் சரியாகி, இப்போது நன்றாக நடக்க முடிகிற மாதிரி இருக்கிறது.

அப்புறம் எடிட்டர் இயக்குநர் லெனினிடம் உதவியாளாராக மூன்று ஆண்டுகள் இருந்தேன். அவருடைய நாக் அவுட், குற்றவாளி போன்ற குறும்படங்களை அவரைச் சந்திப்பதற்கு முன்பே பார்த்திருந்தேன். அவருடன் இருந்தது ஒரு கொடுப்பினை. அவர் ஒரு லெஜண்ட். அவரும் நானும் ஒன்றாக அவர் வீட்டில் தமிழிசை படித்தோம். அவரே சமைத்துக் கொண்டு வந்து பரிமாறிச் சாப்பிடவெல்லாம் வைப்பார். அதெல்லாம் தனிக்கதை. இந்தப் பின்னணியில்தான் ஒரு படத்தை இயக்கும் ஆர்வம் பிற்பாடு வந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு நான்கு முறை வாய்ப்பு கிடைத்தது. எனக்காக சுபா இரட்டையர்கள் முதலில் திரைக்கதை எழுதிக் கொடுத்தார்கள். ஜெயமோகன் இரண்டு முறை திரைக்கதை எழுதிக் கொடுத்தார். அதுக்கு அப்புறம் எஸ். ராமகிருஷ்ணன் ஒரு முறை எழுதிக் கொடுத்தார். கலாப்ரியாவும், வண்ணதாசனும் சேர்ந்து வண்ணநிலவனின் எஸ்தர் கதைக்கு வசனம் எழுதிக் கொடுத்தார்கள். இப்படி ஆறு பேருமாக நான்கு படத்திற்கு எழுதிக் கொடுத்தார்கள். இதில் என்ன பெரிய விஷயம் என்றால் இவர்கள் யாருமே என்னிடம் பணமே வாங்கிக்கொள்ளவில்லை. எல்லா படமும் ஆரம்பித்து நின்று போனது. கடைசியாக இந்த ‘டுலெட்’ திரைப்படத்தில் அதன் இயக்குநர் செழியன் மூலமாக, ஒரு சின்னக் கதாப்பாத்திரத்தில் நடிகனாக அறிமுகமானேன். இப்போது ‘அனல்காற்று’ என்கிற படத்துக்குப் பாடல் எழுதி இருக்கிறேன்.

நன்றி: அரூ

முகநூலில் தகவல் தெரிவித்தவர் : ஆர். கந்தசாமி