பாரதியார்/அன்புச்செல்வி சுப்புராஜூ

எட்டயபுரம் செய்த தவமோ
எழுச்சிக் கவிஞனின் உதயமோ
பொந்திடை வைத்த அக்கினிக் குஞ்சாக
அடிமைத்தனத்தை எரித்தது இக்கவிக்குஞ்சு

தமிழெங்கள் மூச்செனக் கொட்டிய முரசொலி
எட்டுத்திக்கும் தான் ஒலிக்க
நிமிர்ந்த நெஞ்சமும் நேர்கொண்ட பார்வையுமாய்
தன்மானமுடன் ஏகாந்த வெளியில்
வாரணங்கள் ஆயிரம் புடைசூழ கர்ஜித்த
கவியரசர் இவரல்லவோ…

கண்ணனின் சேவகனாய் “கண்ணம்மா” என்றே
கற்கண்டாய் தான் அழைக்க
குதித்தோடி வந்தக் கண்ணனும்
களிநடனம் தான் புரிய
காணிநிலமதில் நடக்கும் நடக்கும் நாடகத்தில்
காதலில் கனிந்திடார் உளரோ?

பெண்ணடிமை இங்கில்லையென
பேரெழுச்சித்தான் கொண்டு
துச்சமெனத் தூற்றுவோரை
எச்சமெனத் தான் மிதித்து
அச்சமின்றி வாழ
தீந்தமிழில் தீச்சுடர் ஏந்திய பாரதியே
உன்னதம் மிகு உங்களை
எங்களின் அடையாளமாய் ஏந்துகிறோம்…
கவிதையாய் என்றென்றும்…